You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மருத்துவ ரீதியில் ஆரோக்கியமற்ற, நம்பமுடியாத விளம்பர பெண் பொம்மைகள்
மகளிர் கடைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பெண் பொம்மைகளின் உடல் அளவுகள் நம்பத்தகாதவை என்று 'ஈற்றிங் டிஸ்ஆடர்' பத்திரிகையில் வெளியாகியுள்ள புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் இரண்டு நகரங்களில், மகளிர் அழகு கடைகளில் காட்சிக்கு வைத்திருக்கும் விளம்பர பொம்மைகளை ஆராய்ந்து ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் இத்தகைய விளம்பர பொம்மை உருவ அளவுக்கு மக்கள் இருப்பார்களானால், அவர்கள் மருத்துவ ரீதியில் ஆரோக்கியமற்றவர்களாக கருதப்படுவர் என்று இந்த ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.
மிகவும் மெல்லியதாக இருப்பது மனநல சிக்கல்கள் மற்றும் அசாதாரண உணவு பழக்கங்கள் உருவாகுவதற்கு பங்காற்றும் என்பதற்கு தெளிவான சான்று உள்ளது என்று இந்த ஆய்வின் ஆசிரியர் டாக்டர் எரிக் ராபின்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் பொருட்கள் வாங்குவதற்கு வெளியே சென்றிருந்தபோது, இந்த விளம்பர பெண் பொம்மைகளின் பரும அளவுகளை பார்த்து குழப்பமடைந்த டாக்டர் ராபின்சன், அது பற்றி மேலதிகமாக ஆராய முடிவு செய்ததாக தெரிவித்திருக்கிறார்.
"அவ்வாறு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விளம்பர பெண் பொம்மைகளில் ஒரு பொம்மை கூட சாதாரண உடல் பரும அளவில் இருக்கவில்லை" என்று அவர் தெரிவிக்கிறார்.
கோவன்ரி மற்றும் லிவர்பூலில் இருக்கும் கடைகளுக்கு சென்று அங்குள்ள இந்த விளம்பர பொம்மைகளை அளவெடுக்க வேண்டுமென தொடக்கத்தில் திட்டம் வைத்திருந்தனர்.
ஆனால் அவர்கள் திட்டமிட்டதைபோல, விளம்பர பெண் பொம்மைகளின் உருவங்கள் ஒவ்வென்றையும் அளவிட அந்த நகர தெருக்களில் இருந்த கடைகள் அனுமதி வழங்கவில்லை.
எனவே, இந்த விளம்பர பெண் பொம்மைகளின் உடல் அளவை கண்ணால் அளவிட்டு கொள்வதையே ஆய்வின் அடிப்படையாக இந்த ஆய்வாளர்கள் ஏற்க வேண்டியதாயிற்று.
பெரிய உருவ விளம்பர பொம்மைகளை பயன்படுத்தப்போவதாக சில நவீன வியாபாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் அறிவித்திருந்தனர். ஆனால், 2015 ஆம் ஆண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, அப்படி எதுவும் காணப்படவில்லை.
விளம்பர ஆண் உருவ பொம்மைகளின் உடல் அளவை லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது.
பத்தில் ஒரு விளம்பர ஆண் பொம்மைக்கும் குறைவாகதான், சாதாரண உடல் அளவைவிட ஒல்லியாக இருந்ததை ஆய்வாளர்கள் கவனித்தனர்.
"விளம்பர ஆண் பொம்மைகள், விளம்பர பெண் பொம்மைகளை விட ஒல்லியாக இல்லாவிட்டாலும், சாதாரணமான ஆண் உடல் அளவுக்கு ஒத்ததாக இருந்தாலும், தரவுகளை சேகரித்தபோது, கடைகளில் காணப்பட்ட விளம்பர ஆண் பொம்மைகள் நம்பத்தகாத அளவிலான தசைக்கட்டுக்களை கொண்டிருந்ததை ஆய்வாளர்கள் கண்டனர்" என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்படுகிறது.
"மிகவும் ஒல்லியான உடல் அளவு கொண்ட விளம்பர பெண் பொம்மைகள் பெண்களின் உடல் தோற்றத்தை ஏதாவது ஒரு வகையில் எதிர்மறையாக பாதிக்கலாம். விளம்பர ஆண் பொம்மைகளின் சாத்தியமற்ற கட்டுடல் தசைக்கட்டு, ஆண்கள் தாங்கள் கொண்டிருக்கும் கட்டுடலில் ஏதாவது வகையில் அதிருப்பதியை உருவாக்கலாம்"
ஆண்களுக்கான கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பர ஆண் பொம்மைகள், நம்பகதகாத உடல் அளவை பரப்புரை செய்கிறதா? என்று முறையாக ஆராய்வதற்கான புதிய திசையை இந்த ஆய்வு வழங்கியுள்ளது.
இத்தகைய விளம்பர பொம்மைகள் இவ்வாறான பிரச்சனைகளை எழுப்பியிருப்பது இது முதல்முறையல்ல.
1930கள் முதல் 1960கள் வரையான கடை விளம்பர பொம்மைகள் பற்றி 1992 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வை டாக்டர் ராபின்சன் இதற்கு எடுத்துக்காட்டாக சுட்டிக்காட்டுகிறார்.
உண்மையான பெண்ணொருவரின் உடல் அளவு இத்தகைய மிகவும் மெல்லிய உடல் அளவை கொண்ட விளம்பர பெண் பொம்மைகளை போல் இருந்தால், அப்படிப்பட்ட பெண்கள், மாதவிடாய் திறனற்று விளங்குவர் என்று இந்த ஆய்வை நடத்தியோர் நிறைவு செய்துள்ளனர்.
காணொளி: அதிர்வுகளை ஏற்படுத்திவரும் ஆப்கான் பெண்கள் இசைக்குழு
காணொளி: விவாகரத்து கோரும் வங்கதேச பெண்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்