You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுட்டுக்கொன்ற காட்சியை பதிவேற்றி நேரலையில் விவாதம் செய்த நபர்: ஃபேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி
வன்முறையை வெளிப்படுத்தும் வீடியோ பதிவுகளை எப்படிக் கையாள்வது என்பது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
ஒரு நபர் கொலை செய்யப்படும் வீடியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அது நீடித்த நிலையில், ஃபேஸ்புக் நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
"இன்னும் முறைப்படுத்த வேண்டியிருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறோம்" என்று அந் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ராபர்ட் கோட்வின் என்ற 74 வயதுடைய நபரை உத்தேசமாக தேர்ந்தெடுத்து, அவரை சுட்டுக் கொன்று, அதைப் படம் பிடித்து, அந்த வீடியோப் பதிவை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட 37 வயதுடைய ஸ்டீவ் ஸ்டீஃபன்ஸ் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை செய்த காட்சியை பதிவேற்றுவதோடு நின்றாரா என்றால், இல்லை. ஃபேஸ்புக் நேரலையில், கொலை தொடர்பாக விவாதிக்க ஆரம்பித்துவிட்டார். தான் 13 பேரைக் கொன்றிருப்பதாகவும் நேரலையில் தெரிவித்தார். ஆனால், 74 வயது நபர் கொலையைத் தவிர மற்ற கொலைகள் தொடர்பாக தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என போலீசார் கூறுகிறார்கள்.
வன்முறையான அந்த வீடியோ, பதிவேற்றம் செய்யப்பட்டு நீண்ட நேரம் பதிவில் இருந்தது குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
"கொடூரமான இந்த தொடர் சம்பவங்களை அடுத்து, எங்களது தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோ மற்றும் பிற தகவல்கள் குறித்து உடனுக்குடன் புகார் செய்வதை உறுதி செய்வது குறித்து விவாதித்து வருகிறோம்," என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் உலக செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் ஜஸ்டின் ஒஸோஃப்ஸ்கி தெரிவித்துள்ளார்.
"இந்த குறிப்பிட்ட சம்பவத்தில், முதலாவது வீடியோ (அதாவது கொலை செய்ய தான் திட்டமிட்டிருப்பதாக சந்தேக நபர் கூறும் வீடியோ) குறித்து எந்தப் புகாரும் வரவில்லை. துப்பாக்கியால் சுடப்படும் காட்சி அடங்கிய இரண்டாவது வீடியோ பற்றித்தான், ஒரு மணி 45 நிமிடங்களுக்குப் பிறகு புகார் வந்தது. தான் கொலை செய்ததை நேரலையில் அந்த நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் மூன்றாவது வீடியோ குறித்து, அந்த நேரலை முடிந்த பிறகுதான் தகவல் வந்தது", என்று அவர் தெரிவித்தார்.
கொலை செய்யப்படும் காட்சி அடங்கிய வீடியோ ஒரு மணி நேரம் 45 நிமிடங்கள் பதிவில் இருந்தன. அதன்பிறகுதான் அந்த வீடியோவும், பயன்பாட்டாளரின் கணக்கும் 23 நிமிடங்களுக்குப் பிறகு நீக்கப்பட்டது என்று ஃபேஸ்புக் பெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்களைக் கொண்டு கண்காணிப்பதுடன், செயற்கையான புலனாய்வு முறைகளும் இதுபோன்ற பதிவுகளை கண்காணிப்பதற்கு உதவிகரமாக இருக்கும் என்று ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்திர மேம்பாட்டாளர்கள் மாநாடு, செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெறுகிறது. இதில், இந்தப் சர்ச்சை குறித்து ஃபேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஜுகர்பெர்க் பேசுவாரா என்பது தெரியவில்லை.
இந்த செய்தியும் உங்களுக்குப் பிடிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்