You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"வாரந்தோறும் எவுகணை சோதனை நடத்துவோம்": வடகொரியா அறிவிப்பால் அதிகரிக்கும் பதற்றம்
சர்வதேச அளவிலான கண்டனங்கள் மற்றும் அமெரிக்காவுடனான இராணுவ நடவடிக்கைகள் ஏற்படலாம் என்ற பதற்றங்கள் அதிகரித்திருக்கும் சூழலிலும், வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
"நாங்கள் வாராந்திர, மாதாந்திர, வருடாந்திர அடிப்படையில் மேலும் பல ஏவுகணை சோதனைகளை மேற்கொள்வோம் என்று வடகொரிய துணை வெளியுறவு அமைச்சர் ஹான் சாங்-ரையோல், பியாங்யாங்கில் பி.பி.சி செய்தியாளர் ஜான் சுட்வொர்த்திடம் தெரிவித்தார்.
"அமெரிக்கா கண்மூடித்தனமாக ராணுவ நடவடிக்கைகளை எடுத்தால்" முழுமையான போர் ஏற்படும் என்று அவர் எச்சரித்தார்.
வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே சூடான வாத-விவாதங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தென்கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துவருகிறது.
முன்னதாக, வடகொரியாவுடன் அமைதிப்போக்கை கடைபிடித்த காலம் முடிந்துவிட்டது என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
வடகொரியா நடத்திய ஏவுகணை பரிசோதனை தோல்வியில் முடிவடைந்த பிறகு, மைக் பென்ஸ் ஞாயிற்றுக்கிழமையன்று தென்கொரியாவின் சோல் சென்றடைந்தார்.
தென் கொரியாவின் தற்காலிக அதிபர் ஹ்வாங் க்யோ-அன்னை சந்தித்து பேசிய மைக் பென்ஸ், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வடகொரியா சோதித்துப் பார்ப்பது நல்லதல்ல என்று கூறினார்.
"கடந்த இரண்டு வாரங்களில், சிரியா மற்றும் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்கா எடுத்த நடவடிக்கைகள், புதிய அதிபரின் உறுதியையும், பலத்தையும் உலகத்திற்கு எடுத்து காட்டியிருக்கிறது" என்று பென்ஸ் கூறுகிறார்.
டிரம்பின் உறுதியையோ, அமெரிக்க இராணுவப் படைகளின் பலத்தையோ இந்த பிராந்தியத்தில் வடகொரியா சோதித்து பார்க்க விரும்பவேண்டாம் என்று அமெரிக்க துணை அதிபர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அமெரிக்காவின் ஆதரவு தென்கொரியாவிற்கு உண்டு என்பதை மீண்டும் வலியுறுத்திய மைக் பென்ஸ், " உங்களுக்கு 100% ஆதரவை எப்போதும் வழங்குவோம் என்று உறுதியளித்துள்ளார்.
ஐ.நா. கண்டனம்
திங்களன்று ஐ.நாவின் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய ஐ.நாவுக்கான வட கொரியாவின் நிரந்தர தூதர் கிம் இன் - ரையாங், சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்திருக்கும் விமானதளத்தில், அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலை கண்டித்தார்.
"உலக அமைதியையும் நிலைத்தன்மையையும் குலைக்கும் அமெரிக்கா, அடாவடித்தனமாக நடந்துக் கொள்வதாக" அவர் கண்டனம் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று வடகொரியாவின் நிறுவனரும், முன்னாள் அதிபருமான கிம் இல்-சங்கின் 105 வது பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது நடைபெற்ற ராணுவ பேரணியின்போது, வடகொரியா தனது ஏவுகணை வல்லமையை எடுத்துக்காட்டியது.
ஆறாவது அணுஆயுத ஏவுகணைச் சோதனையை வடகொரியா மேற்கொள்ளலாம் என்று சர்வதேச அளவில் பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில், ஞாயிற்றுக் கிழமையன்று வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை, ஏவப்பட்ட சில வினாடிகளிலேயே தோல்வியைத் தழுவியது.
வடகொரியா எந்தவிதமான ஏவுகணை அல்லது அணுஆயுத சோதனைகளையும் நடத்தக்கூடாது என்று தொடர்ந்து ஐ.நா தடைகள் விதித்தாலும், அந்த தடைகளை வடகொரியா தொடர்ந்து மீறிவருகிறது.
உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் தாக்கக்கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணை கொண்ட அணுஆயுத போர்த்திறனை பெறும் முயற்சியில் வடகொரியா ஈடுபட்டுள்ளது.
ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் சிறிய ரக அணு ஆயுதங்கள் தன்னிடம் இருப்பதாக வடகொரியா கூறினாலும், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று நிபுணர்கள் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
இந்த செய்திகளும் உங்களுக்காக:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்