You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'முஸ்லீம் பயணத்தடை': நிலைப்பாட்டை மாற்ற மறுக்கும் டிரம்ப்
உலகின் ஏழு பெரும்பான்மையான முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு குடியேற வருவோருக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடைக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துவரும் நிலையிலும், டிரம்ப் நிர்வாகம் அவ்வுத்தரவை அமல்படுத்துவதில் விடாப்பிடியாக இருக்கிறது.
அதிபர் டிரம்ப் இது குறித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், '' மிகவும் பாதுகாப்பான கொள்கைகள்'' கொண்டுவரப்பட்ட உடன், விசாக்கள் மீண்டும் கொடுக்கப்படும் என்று கூறினார்.
இது முஸ்லீம்கள் மீதான தடை என்று கூறப்படுவதை அவர் மறுத்தார்.
இந்த நடவடிக்கை பரவலாக கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது.
இந்த உத்தரவு அமெரிக்க அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று 16 மாநிலங்களின் தலைமை அரச வழக்குரைஞர்கள் கூறியிருக்கிறார்கள்.
டிரம்ப் வெள்ளிக்கிழமை இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.
இந்த உத்தரவு, அமெரிக்காவின் அகதிகள் திட்டத்தை ஒட்டுமொத்தமாக நிறுத்தியதுடன், சிரியாவிலிருந்து அகதிகள் வருவதை காலவரையறையின்றி தடை செய்த்து. மேலும் ஏழு முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளிலிருந்து, எந்த மதத்தைச் சேர்ந்த மக்களும் வருவதை இடை நிறுத்தியது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்போது, அமெரிக்காவுக்கு விமானம் மூலம் வந்து கொண்டிருந்தவர்கள், அமெரிக்கா வந்திறங்கியவுடன் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களுக்கு செல்லுபடியாகும் விசா அல்லது குடியேற்ற அனுமதிப் பத்திரங்கள் இருந்தாலும், அவர்கள் இது போல தடுத்து வைக்கப்பட்டனர்.
வெளிநாடுகளில் விமான நிலையங்களில் இருந்து அமெரிக்காவுக்கு விமானம் மூலம் செல்லவிருந்த நிலையில், வேறு எத்தனை பேர் திருப்பியனுப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்காவெங்கும் ஆர்ப்பாட்டங்கள்
சனிக்கிழமை இந்த உத்தரவுக்கெதிராக ஆயிரக்கணக்கானவர்கள் அமெரிக்காவெங்கும் உள்ள விமான நிலையங்களில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கறிஞர்கள் பலர் இலவச சட்ட உதவி செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமையும் வெள்ளை மாளிகைக்கு முன்பாகவும், நியு யார்க்கில் உள்ள டிரம்ப் டவருக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
அமெரிக்க நிரந்தர வதிவிட உரிமை ( கிரீன் கார்ட்) வைத்திருப்பவர்களும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ரெயின்ஸ் ப்ரீபஸ் கூறினார். ஆனால் இந்த உத்தரவு அமலுக்கு வந்ததிலிருந்து சிலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த உத்தரவு மிக குழப்பமான நிலையில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று வரும் விமர்சனங்களை ப்ரீபஸ் நிராகரித்தார். அமெரிக்காவுக்கு பயணம் செய்து கொண்டிருந்த 3.25 லட்சம் பேரில் 109 பேர் மட்டுமே தடுத்து வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
குடியரசுக் கட்சி கவலை
ஆனால் ப்ரீபஸின் இந்த கருத்து குடியரசுக் கட்சியினர் சிலர் மத்தியில் எழுந்துள்ள கவலைகளை தணிக்கவில்லை.
இந்த நிர்வாக உத்தரவு, குறிப்பாக நிரந்த வதிவிட உரிமை ( கிரீன் கார்ட்) பெற்றிருப்பவர்கள் விஷயத்தில், மிகவும் மோசமாக அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்று அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டியின் குடியரசுக் கட்சித் தலைவர் செனட்டர் பாப் கார்க்கர் கூறினார். இதை சரிப்படுத்த நிர்வாகம் பொருத்தமான திருத்தல்களைச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார்.
அமெரிக்கா இப்போது, மனித நேயம் குறைந்த, குறைவான அமெரிக்கத் தன்மை உள்ள ஒரு நாடாகத் தோன்றுகிறது என்று கூறிய ஜனநாயக கட்சியின், செனட் எதிர்கட்சித் தலைவர் , சுக் ஷூமர், ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தரவை ரத்து செய்ய புதிய மசோதா ஒன்றை அறிமுகப்படுத்துவார்கள் என்றார்.