கானாவில் அமைதியான அதிகார மாற்றம்
நனோ அகூஃபோ அடோ புதிய அதிபராக பதவியேற்கின்ற கானாவின் தலைநகர் அக்ராவில் ஆப்ரிக்கா முழுவதுமுள்ள தலைவர்கள் கூடியுள்ளனர்.

பட மூலாதாரம், AFP
அக்ராவிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் அகூஃபோ அடோ பதவி பிரமாணம் எடுப்பதை காண ஆயிரக்கணக்கான விருந்தினர்களும், பிரமுகர்களும் கூடியிருந்தனர்.
முன்னாள் மனித உரிமைகள் வழக்கறிஞரான அகூஃபோ அடோ, அதிபராக இருந்த ஜான் டிராமானி மஹாமாவை கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைய செய்தார்.
நாடுகளின் தலைவர்கள் பதவியிலிருந்து விலக விரும்பாத ஆப்ரிக்காவில், சுமுகமான முறையில் நடைபெறும் இந்த அதிகார மாற்றம் ஜனநாயகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்த பதவியேற்புக்கு பிறகு, காம்பியா அதிபர் யாக்மா ஜாமே பதவியிலிருந்து இறங்குவதை உறுதி செய்வது எப்படி என்று இதில் கலந்துகொண்டுள்ள ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, யாக்மா ஜாமே பதவியிறங்க மறுப்பது குறிப்பிடத்தக்கது.








