You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிட்காயின்களை ஏற்குமா அமேசான்? கிடுகிடுவென உயரும் கிரிப்டோ கரன்சி மதிப்பு
பிட்காயின் டிஜிட்டல் நாணயத்தில் நிபுணத்துவம் பெற்ற ஒரு நபர் வேலைக்குத் தேவை என அமேசான் நிறுவனம் அறிவித்த பிறகு, சில பிட்காயின்களின் மதிப்பு உயர்ந்துள்ளது.
அமேசான் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தும் விதத்தை மேற்பார்வையிட, `டிஜிட்டல் நாணயம் மற்றும் பிளாக்செயின் மேலாளர்` வேலைக்குத் தேவை என அமேசான் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், பிட்காயின் மதிப்பு கடந்த திங்கட்கிழமை நாணயத்திற்கு, 29 ஆயிரம் டாலர்களிலிருந்து 39 ஆயிரம் டாலர்களாக உயர்ந்துள்ளது. இதேரேம், டோஜ்காயின் போன்ற டிஜிட்டல் நாணயத்தின் மதிப்பும் உயர்ந்துள்ளது.
ஊகங்கள் இருந்தபோதிலும், கிரிப்டோ கரன்சிகளை ஏற்றுக்கொள்வதற்கான எந்த திட்டத்தையும் அமேசான் உறுதிப்படுத்தவில்லை.
அமேசானால் வெளியிடப்பட்ட இந்த ஆள் சேர்க்கை விளம்பரம், கிரிப்டோ கரன்சி மீது ஆர்வம் உள்ள தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
மேலும்,``அமேசான் நிச்சயமாக எதிர்காலத்தில் பிட்காயினை ஏற்றுக்கொள்ளும்`` எனப் பெயரை வெளிப்படுத்தாத ஒரு அமேசான் ஊழியரை மேற்கோள்காட்டி லண்டனின் 'சிட்டி ஏஎம்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி பற்றிய புரிதல், டிஜிட்டல் நாணயம் மற்றும் பிளாக்செயின் குறித்த உத்திகளை உருவாக்குவது, அமேசான் தொடர வேண்டிய வழிகளை உருவாக்குவது, மிக மூத்த நிர்வாகிகளிடம் வாதங்களை வைப்பது போன்ற தகுதிகள் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபருக்கு இருக்க வேண்டும் என அமேசான் தெரிவித்துள்ளது.
``கிரிப்டோ கரன்சியில் ஏற்படும் வரும் முன்னேற்றங்கள் மற்றும் அதன் புதுமைகளால் நாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளோம். இதனால் அமேசானுக்கு என்ன நன்மை என்பதை ஆராய்ந்து வருகிறோம்`` என அந்த நபர் சிட்டி ஏஎம் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
``நவீனமான, வேகமான மற்றும் மலிவான முறையில் பணத்தைச் செலுத்தும் புதிய தொழில்நுட்பங்களால் எதிர்காலம் கட்டமைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் அந்த எதிர்காலத்தை அமேசான் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் கொண்டு வருவோம் என்று நம்புகிறோம்`` எனவும் அவர் கூறியுள்ளார்.
``கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் பற்றிய ஒவ்வொரு செய்திகளும், அதன் ஆர்வலர்களுக்கு ஆர்வத்தை தூண்டுகிறது`` என ஹர்கிரீவ்ஸ் லான்ஸ்டவுன் நிதி நிறுவனத்தின் மூத்த முதலீடு மற்றும் சந்தை ஆய்வாளர் சூசன்னா ஸ்ட்ரீட்டர் கூறுகிறார்.
``பெரு நிறுவனமான அமேசானுக்கு, பணம் செலுத்தப் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்கள் மீது ஆர்வமிருப்பது ஆச்சரியமான ஒன்றல்ல. ஒரு புதிய டிஜிட்டல் நாணயத்தை உருவாக்கக் கூட அவர்களிடம் திட்டம் இருக்கலாம்``என்கிறார் சூசன்னா.
``கிரிப்டோ நாணயங்கள் மற்றும் டோக்கன்களை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். அந்தந்த நாட்டு மத்திய வங்கிகள் தங்களது சொந்த டிஜிட்டல் நாணயத்தை உருவாக்க முயற்சித்து வரும் நிலையில், பிட்காயின் போன்றவற்றின் எதிர்காலம் நிச்சமற்றதாக உள்ளது.`` என்கிறார் அவர்.
டெஸ்லா கார் நிறுவனம் எதிர்காலத்தில் மீண்டும் பிட்காயினை ஏற்கத் தொடங்கலாம் என ஈலோன் மஸ்க் கடந்த வாரம் சூசகமாகக் கூறினார். மஸ்கும் அவரது டெஸ்லா நிறுவனமும் பிட்காயினில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த கார் நிறுவனம் சிறிது காலத்துக்கு பிட்காயின்களை ஏற்றது. ஆனால், டிஜிட்டல் நாணயங்களால் சுற்றுச்சூழலுக்கு அதிக ஆபத்து என கூறி அந்த திட்டத்தைப் பின்னர் கைவிட்டது.
பிட்காயின் நெட்வொர்க் மற்றும் பிற கிரிப்டோகரன்ஸ்கள் அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன
ஆனால், பிட்காயின் பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவது அதிகரிப்பதாக ஈலோன் மஸ்க் தற்போது கூறியுள்ளார். இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் விவாத அளவிலேயே உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்