வங்கி வேலைநிறுத்தம்: தனியார்மயத்துக்கு போகும் பொதுத்துறை வங்கிகள் - பின்னணி என்ன?

    • எழுதியவர், அலோக் ஜோஷி
    • பதவி, பிபிசி இந்தி

இந்தியாவின் அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 15,16) வேலைநிறுத்தம் நடைபெற்றது.

இந்த வேலைநிறுத்தத்துக்கு நாட்டின் மிகப்பெரிய வங்கி ஊழியர்கள் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (யூஎஃப்பியூ), ( வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம்) ஆகியவை அழைப்பு விடுத்தன. இந்த மன்றத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒன்பது தொழிற்சங்கங்கள் உள்ளன.

ஐ.டி.பி.ஐ வங்கியைத் தவிர, மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப் போவதாக அரசு அறிவித்ததே வேலைநிறுத்தத்திற்கு மிகப்பெரிய காரணம். வங்கி தொழிற்சங்கங்கள் தனியார்மயமாக்கலை எதிர்க்கின்றன. பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்தி பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் பொறுப்பை அவற்றிடம் ஒப்படைக்க வேண்டிய ஒரு நேரத்தில், அரசு எதிர் பாதையில் செல்கிறது என்று யூஎஃப்பியூ கூறுகிறது.

தனியார்மயமாக்கலுக்கு எதிராக வங்கி ஊழியர்கள்

இந்த ஆண்டு இரண்டு பொதுத்துறை வங்கிகளும், ஒரு பொது காப்பீட்டு நிறுவனமும் தனியார்மயமாக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது அறிவித்தார்.

முன்னதாக, ஐடிபிஐ வங்கியை விற்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பங்குகளை விற்பனை செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டின் பட்ஜெட்டில் செய்யப்பட்டது. எந்த வங்கிகளில் தனது முழு பங்குகளையோ அல்லது பங்குகளின் ஒரு பகுதியையோ அரசு விற்கப் போகிறது என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆனால், நான்கு வங்கிகளை தனியார்மயமாக்க அரசு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய பெயர்கள் அடிபடுகின்றன.

இந்தப் பெயர்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்த நான்கு வங்கிகளின் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் ஊழியர்களிடையேயும் மற்ற பொதுத்துறை வங்கிகளிலும் இதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கிகளின் தேசியமயமாக்கல்

1969 இல், இந்திரா காந்தி அரசு 14 வங்கிகளை தேசியமயமாக்கியது. இந்த வங்கிகள் நாட்டின் அனைத்து பகுதிகளையும் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான சமூக பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றும், வங்கி முதலாளிகளின் கைகளில் அவைகள் கைப்பாவையாக மட்டுமே இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டன. இந்த முடிவு வங்கி தேசியமயமாக்கலின் தொடக்கமாக கருதப்பட்டது.

இருப்பினும், இதற்கு முன்னர் 1955 ஆம் ஆண்டில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவை, அரசு கையகப்படுத்தியது. இதன் பின்னர் 1980 இல், மேலும் ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால் இப்போது வங்கி தேசியமயமாக்கலின் 52 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு இந்த சக்கரத்தை எதிர்திசையில் சுழற்ற உள்ளது.

அரசின் வேலை வியாபாரம் செய்வது அல்ல என்று 1991 ஆம் ஆண்டின் பொருளாதார சீர்திருத்தங்களுப் பிறகு, மீண்டும் மீண்டும் கூறப்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் இந்தக் கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.

தேசியமயமாக்கலுக்குப் பிறகான பிரச்னைகள்

எல்லா துறைகளிலும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை முடுக்கிவிட, அதாவது பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்க அரசு தீவிரமாக செயல்படப் போகிறது என்பது தெளிவான விஷயமாக உள்ளது. திட்டமிட்ட வகையில் மிகமுக்கியமான துறைகளில் கூட நிறுவனங்களை தன்வசம் வைத்திருப்பதை வலியுறுத்த தான் விரும்பவில்லை என்று அரசு கூறியுள்ளது.

வங்கிகளைப் பொருத்தவரையில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், முந்தைய அரசுகள் பொதுமக்களை கவர்ந்திழுக்க அல்லது வாக்குவங்கி அரசியலுக்காக, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வந்தன.அவற்றின் சுமையை பொதுத்துறை வங்கிகள் சுமக்க வேண்டி வந்தது.

கடன் தள்ளுபடி இதற்கு மிகப்பெரிய உதாரணம். இதற்குப் பிறகு, வங்கிகளின் நிலை மோசமடையும்போது, தனது மூலதனத்தை போட்டு அரசு அவற்றை மேலே கொண்டு வர வேண்டியிருந்தது.

தேசியமயமாக்கலுக்குப் பிறகு, அனைத்து வகையான சீர்திருத்தங்கள் மற்றும் பல முறை அரசின் மூலதன உட்செலுத்துதல் இருந்தபோதிலும், இந்த பொதுத்துறை வங்கிகளின் பிரச்னைகள் முற்றிலுமாக தீரவில்லை. வைப்புத்தொகை மற்றும் கடன் ஆகிய இரண்டிலுமே, தனியார் துறை வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளை ஒப்பிடும்போது அவை பின்தங்கியுள்ளன. அதே நேரத்தில், மூழ்கும் கடன் அல்லது 'stressed assets' விஷயத்தில் இந்த வங்கிகள் முன்னிலை வகிக்கின்றன.

அரசுக்கு சுமையா?

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசு ஏற்கனவே 1.5 லட்சம் கோடி ரூபாயை வங்கிகளில் முதலீடு செய்துள்ளது மற்றும் மறு மூலதன பத்திரத்தின் மூலம் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரசின் நோக்கம் தெளிவாக உள்ளது.

ஒரு நீண்டகாலத்திட்டத்தின் கீழ் அரசு செயல்பட்டு வருகிறது. இதன் கீழ் கடந்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 28-ல் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அவற்றை மேலும் குறைக்க அரசு விரும்புகிறது. சில பலவீனமான வங்கிகள் மற்ற பெரிய வங்கிகளுடன் இணைக்கப்படலாம், மீதமுள்ளவை விற்கப்படலாம். இதுதான் அரசின் திட்டம்.

வங்கிகளில் மீண்டும் மீண்டும் மூலதனத்தை செலுத்துவதன் மூலம் அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான கவலையிலிருந்து இது அரசை விடுவிக்கும். இதுபோன்ற ஒரு யோசனை வருவது இது முதல் முறை அல்ல. கடந்த இருபது ஆண்டுகளில் இது பல முறை விவாதிக்கப்பட்டது, ஆனால் இந்த விஷயம் வாத எதிர்வாதங்களில் சிக்கிக்கொண்டது.

வங்கிகளை தேசியமயமாக்குவது ஒரு அரசியல் முடிவு, எனவே அவற்றை தனியார்மயமாக்கும் முடிவும் அரசியல் மூலமாகவே எடுக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டி கூறினார். இந்த முடிவு இப்போது எடுக்கப்பட்டுவிட்டது போலத் தோன்றுகிறது.

தனியார் வங்கி vs பொதுத்துறை வங்கி

இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி விகிதத்தை ஒப்பிடுகையில், கிட்டத்தட்ட ஒவ்வொரு துறையிலுமே, தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளை பின்னுக்கு தள்ளியுள்ளன.

இதற்கான காரணத்தை இந்த வங்கிகளுக்குள்ளும், இந்த வங்கிகளுடனான அரசின் உறவுகளிலும் நம்மால் பார்க்க முடிகிறது. வங்கிகளை தனியார்மயமாக்குவது சிரமங்களை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் தங்கள் சொந்த விதிமுறைகளின் கீழ் வேலை செய்வதற்கான சுதந்திரமும் இந்த வங்கிகளுக்கு கிடைக்கும்..

ஆனால் வங்கி ஊழியர்களும் அதிகாரிகளும் இந்த வாதத்தை முற்றிலும் ஆதாரமற்றதாக கருதுகின்றனர். நாட்டின் நலனை கருத்தில்கொள்ளாமல் தனது உரிமையாளரின் நலன் மீதே தனியார் வங்கிகள் அக்கறை காட்டுகின்றன என்பது வங்கி தேசியமயமாக்கல் நேரத்திலேயே தெளிவாக இருந்தது என்று அவர்கள் கூறுகின்றனர். அதனால்தான் இந்த முடிவு ஊழியர்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஆபத்தானது என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, யெஸ் வங்கி மற்றும் லக்ஷ்மி விலாஸ் வங்கியில் நிகழ்ந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த விதம், தனியார் வங்கிகளில் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன என்கிற வாதத்தை பலவீனப்படுத்துகிறது.

ஒரு வங்கி மூழ்கும் நிலையை அடையும் போது, அரசுதான் முன் வந்து அதைக் காப்பாற்றுகிறது என்பதும் உண்மைதான். பின்னர் இந்தப் பொறுப்பு ஏதோ ஒரு பொதுத்துறை வங்கியின் தலையில் சுமத்தப்படுகிறது. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து, எந்தவொரு ஷெட்யூல்ட் கமர்ஷியல் வங்கியும் மூழ்காமல் இருப்பதற்கு இதுவே காரணம்.

வங்கி வேலைநிறுத்தத்தின் விளைவு

தனியார்மயமாக்கலின் முடிவுக்கு எதிராக நீண்டகால எதிர்ப்பின் ஒரு திட்டத்தை வங்கி தொழிற்சங்கங்கள் உருவாக்கியுள்ளன. வாரா கடன்களை மீட்க கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, ஐபிசி (Insolvency and bankruptcy code) போன்ற சட்டங்களை உருவாக்குவது, ஒரு பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏனெனில் இதில் பொதுத்துறை வங்கிகள் தங்கள் கடனில் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது அசல் தொகையை விட குறைவாக பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

யூஎஃப்பியூ மன்றத்தில் உள்ள வங்கி தொழிற்சங்கங்களின் அனைத்து ஊழியர்களும் அதிகாரிகளும் நேற்றும், இன்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். முன்னதாக, வெள்ளிக்கிழமை மஹாசிவராத்திரி, இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காரணமாக கடந்த முன்று நாட்களாக வங்கிகள் ஏற்கனவே மூடப்பட்டிருந்தன. அதாவது ஐந்து நாட்கள் வங்கிகளில் பணிகள் முடங்கின. தனியார் வங்கிகளில் வேலைநிறுத்தம் இருக்காது என்றாலும் மொத்த வங்கி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அவர்களிடம் உள்ளது என்பதால் மூன்றில் இரண்டு பங்கு பணிகள் பாதிக்கப்படலாம்.

வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் திரும்பப் பெறுவது தவிர, காசோலைகளின் ஒப்புதல், புதிய கணக்குகளைத் திறப்பு, வங்கி வரைவோலை பெறுதல் மற்றும் கடன் நடவடிக்கை போன்ற பணிகள் பாதிக்கப்படலாம். இருப்பினும் ஏடிஎம்கள் தொடர்ந்து இயங்கும். ஸ்டேட் பேங்க் கிளைகள் தொடர்ந்து செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் வேலைநிறுத்தத்தின் தாக்கம் சில இடங்களில் இவற்றின் மீதும் ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :