புகை சோதனையில் மோசடி: ஃபோக்ஸ்வேகன் கம்பெனிக்கு உதவிய முன்னாள் அதிகாரிக்கு சிறை

வாகனங்கள் வெளியிடும் புகையை அளவிடும் பரிசோதனை முடிவுகளில் மோசடி செய்த குற்றச்சாட்டில், ஃபோக்ஸ்வேகன் கார் உற்பத்தி நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிக்கு அமெரிக்காவில் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையும், 4 லட்சம் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆலிவர் ஷ்மிதித்

பட மூலாதாரம், EPA

டீசல் புகை வெளியீட்டு முறைகேட்டில் அமைரிக்காவில் சிறை செல்லும் இரண்டாவது நபர் இந்த ஆலிவர் ஷ்மிட் (48).

சட்டவிரோத மென்பொருள் உதவியோடு அமெரிக்காவின் புகை வெளியீட்டுப் பரிசோதனையில் மோசடி செய்ததாக 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புக்கொண்டது ஃபேக்ஸ்வேகன். இந்த விவகாரத்தால் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு 30 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.

ஃபோக்ஸ்வேகன் தமது சில டீசல் வாகனங்களில் ஒரு சிறப்பு மென்மொருளை நிறுவியதாகவும், இது, புகைப் பரிசோதனைகளின்போது மட்டும் புகை அளவை குறைவாக வெளியிட வழி செய்யும் என்றும், ஆனால் சாதாரணமாக சாலையில் ஓட்டும்போது வெளியிடும் புகையின் அளவு அதிகமாக இருக்கும் என்றும் அமெரிக்க அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.

இதனால், அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட புகை அளவைவிட 30 மடங்கு அதிகமான புகையை இந்த குறிப்பிட்ட வாகனங்கள் வெளியிட்டுள்ளன. 2006 முதல் 2015 வரையிலான காலத்தில் இந்த புகை வெளியீட்டைக் குறைத்துக் காட்டும் மென் பொருள் பொருத்திய 6 லட்சம் வாகனங்களை ஃபோக்ஸ்வேகன் அமெரிக்காவில் விற்றுள்ளது. இந்த விவகாரம் பிற நாடுகளிலும் விசாரணைக்கும், ஜெர்மனியில் சில கைதுகளுக்கும் வழிவகுத்தது.

நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் பிரிவுக்குத் தலைமை வகித்தவரான ஷ்மிட் 2015ல் இந்த மோசடித் திட்டம் குறித்து தெரிந்துகொண்டதாக நீதிமன்றத்தில் உள்ள ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இது தொடர்பான சதியில் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவின் காற்றுத் தூய்மைச் சட்டத்தை மீறிவிட்டதாகவும் ஷ்மிட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். நிறுவனத்தின் இந்த திட்டத்தில் ஷ்மிட்டுக்கு சிறிய பங்கே இருந்ததாகவும் எனவே அவருக்கு குறைந்த தண்டனை வழங்கவேண்டும் என்றும் அவரது வழக்குரைஞர் வாதிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :