விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் 'அரபிக்குத்து' பாடல் வெளியீடு - இதில் என்ன முக்கிய தகவல்?

காதலர் தினத்தன்று நடிகர் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் இருந்து 'அரபிக்குத்து' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.

'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் 'பீஸ்ட்'.

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இந்த வருடம் கோடை விடுமுறையை ஒட்டி வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் 100வது நாள் படப்பிடிப்பு முடிவடைந்தபோது அந்த படக்குழு சிறப்பு புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டது. இதையடுத்து பொங்கல் அல்லது குடியரசு தினத்திற்கு 'பீஸ்ட்' படம் தொடர்பாக ஏதும் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓமிக்ரான் பரவல் சூழல் காரணமாக படத்தின் பாடல் வெளியீடு தள்ளிப்போய் இப்போது காதலர் தினத்தன்று படத்தில் இருந்து முதல் பாடலான 'அரபிக்குத்து' பாடல் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் நெல்சன், சிவகார்த்திகேயன், அனிருத் ஆகிய மூவரும் இந்த பாடலுக்காக கலந்துரையாடல் நடத்தும் படியான கலகலப்பான முன்னோட்ட வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் விஜய்யும் தொலைபேசி மூலமாக இவர்களுடன் பேசியிருந்தார்.

'அரபிக்குத்து' பாடலில் என்ன சிறப்பு?

'ஹலமதி ஹபிபோ' பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளார்கள். ஏற்கெனவே இந்த இணை 'டாக்டர்' படத்தில் 'செல்லம்மா' பாடலை சேர்ந்து பாடியுள்ளனர். மனோஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். லிரிக்கல் வீடியோ இடையில் பாடலின் சில காட்சிகளும் இந்த காணொளியில் சேர்க்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் கோல்ட் நிறத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருக்கும்படியான இந்த பாடல் ஸ்டுடியோ செட்டுக்குள் நடனம் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு அடுத்து ரஜினியுடன் இணையும் நெல்சன்

'பீஸ்ட்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

'கோலமாவு கோகிலா' படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார்.

இதற்கு பிறகு கடந்த வருடம் இவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' திரைப்படத்திற்கு பிறகு அவரது 169வது திரைப்படத்தை யார் இயக்குவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

'பீஸ்ட்' படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே நெல்சன் ரஜினியை இயக்குவார் என முன்பு உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகி வந்தன.

இப்போது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ரஜினியின் 169வது படத்தை நெல்சன் இயக்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்திற்கும் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

'எந்திரன்', 'பேட்ட', 'அண்ணாத்த' படங்களுக்கு பிறகு ரஜினியும், 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு நெல்சனும் சன் பிக்சர்ஸ்ஸூடன் இணைந்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எப்போது படப்பிடிப்பு?

'பீஸ்ட்' பட வெளியீட்டிற்கு பிறகு மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானாலும் இது குறித்து வரும் நாட்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நெல்சன், 'என்னுடைய அடுத்த படம் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் என அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் ஒரு முறை சன் பிக்சர்ஸ் உடனும் என் நண்பர் அனிருத்துடன் வேலை பார்ப்பதும் சந்தோஷம்' என தெரிவித்துள்ளார்.

இது குறித்து சினிமா வட்டாரத்தில் விசாரித்த போது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்திருந்தாலும் படம் வசூல் ரீதியாக தயாரிப்பு தரப்புக்கு திருப்தியே கொடுத்திருக்கிறது. மேலும், 'அண்ணாத்த' படக்குழுவுக்கு வெற்றி காரணமாக நடிகர் ரஜினி தங்க சங்கிலி கொடுத்து மகிழ்ந்தார்.

இந்த நிலையில்தான் 'பீஸ்ட்' படப்பிடிப்பின் நூறாவது நாளுக்கு பிறகு நெல்சனை அழைத்து கதை கேட்டு பிடித்து போய் 'படம் செய்யலாம்' என்று சொல்லி இருக்கிறார் ரஜினி.

நெல்சன் படங்களில் இருக்கும் நகைச்சுவை ரஜினிக்கு சொன்ன கதையிலும் கைகொடுக்கும் என தெரிய வந்தது.

ஆனால் அப்போது 'பீஸ்ட்' படப்பிடிப்பில் நெல்சன் பிஸியாக இருந்தார். இதையடுத்து பட வேலைகள் எல்லாம் முடிவடைந்து 'பீஸ்ட்' வெளியான பிறகே அடுத்த படம் என சன் பிக்சர்ஸிடம் நெல்சன் சொல்லி இருக்கிறார்.

'பீஸ்ட்' ஏப்ரலில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினியின் 169 வது படப்பிடிப்பு மே மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: