சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள்

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

வேதிகா நடிக்கும் பாலிவுட் படம்

தமிழில் வெளியான முனி, சக்கரக்கட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. தமிழை தவிர தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் தற்போது தென்னிந்திய சினிமாக்களில் வாய்ப்பு இல்லாமல் இருக்கும் வேதிகா, பாலிவுட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

த்ரிஷ்யம் படம் மூலம் பிரபலமான மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப், தன் முதல் இந்தி படத்தில் வேதிகாவை ஹீரோயினாக்கியுள்ளார். 2012ல் ஸ்பேனிஷ் மொழியில் வெளியான தி பாடி படத்தின் ரீமேக்காக உருவாகவிருக்கும் அந்த படத்தில் இம்ரான் ஹஷ்மி ஹீரோவாக நடிக்கிறார்.

55 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கார்த்திக்

கடைக்குட்டி, சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகும் படம் தேவ். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்குகிறார். ஆக்‌ஷன், காமெடி, அட்வெஞ்சர் கலந்து உருவாகும் இந்த படத்திற்கு பட்ஜெட் 55 கோடி ரூபாய். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆக்‌ஷன் படம் என்பதால் விறுவிறுப்பானக் கார் சேசிங்க் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கி வருகின்றனர். அதேபோல் பாடல்காட்சிகளையும் படமாக்குகின்றனர். இதை முடித்த கையோடு அடுத்தடுத்தக் கட்ட சூட்டிங்கை சென்னை, இமயமலை, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் படமாக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான இடங்கள் தேர்வும் நடந்துமுடிந்துள்ளது.

தேவ் படத்தில் கார்த்தியை தவிர ரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ்ராஜ், ரம்யாக் கிருஷ்ணன், ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நவரச நாயகன் கார்த்தியும் நடிக்கிறார்.

ஓவியா - விமல் - சற்குணம்

விமல் - இயக்குநர் சற்குணம் கூட்டணியில் 2010ம் ஆண்டு வெளியான படம் களவாணி. கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில் ஓவியா ஹீரோயினாக அறிமுகமானார். கமர்ஷியல் விஷயங்களோடு 1 அரை கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட களவாணி படம் 8 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதற்குபின் சற்குணம் இயக்கிய வாகை சூடவா, நையாண்டி, சண்டிவீரன் ஆகிய படங்கள் வியாபார ரீதியில் வெற்றியடையவில்லை. ஆனால் வாகை சூடவா படம் சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான தேசிய விருதை வென்றது. இந்த நிலையில் சற்குணம் தன்னுடைய முதல் படமான களவாணி படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். விமல் நடிக்கும் இந்த படத்தில் மீண்டும் ஓவியாவையே ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தனர்.

முதலில் விமல் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய சற்குணம் தற்போது ஓவியா காட்சிகளை படமாக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் முடித்து இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மீண்டும் தனுஷ் அனிருத்

தனுஷ் - அனிருத் கூட்டணியில் வெளியான 3, மாரி, வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களின் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. அதேபோல் பின்னணி இசையையும் சிறாப்பாக உருவாக்கியிருந்தனர். இதனால் தனுஷ் அனிருத் கூட்டணி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

இதற்கு பின்பு தனுஷ், சந்தோஷ் நாரயாணன் மற்றும் ஷேன் ரோல்டனோடும் (Sean Roldan), அனிருத் மற்ற இயக்குனர்களோடும் பயணித்தனர். இருந்தாலும் தனுஷ் அனிருத் கூட்டணி போல் எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூன்றாவது பாகத்திற்கு தனுஷ் அனிருத் ஆகியோர் மீண்டும் இணையவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதை உறுதிபடுத்தும் வகையில் அனிருத் சமீபத்தில் அடுத்த ஆண்டு தனுஷோடு இணையவுள்ளேன் என்று கூறியுள்ளார். இதனால் தனுஷ் - அனிருத் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா:

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை தொடர்ந்து தேவராட்டம் படத்தில் நடிக்கிறார் கவுதம் கார்த்திக். கொம்பன் மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இந்த படத்தை இயக்குகிறார். இதற்கான பூஜை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது படத்துக்கான ஹீரோயினை அறிவித்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமான மஞ்சிமா மோகனை தேவராட்டம் படத்திற்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மஞ்சிமா மோகன் நடித்த சத்ரியன், இப்படை வெல்லும் ஆகிய படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் அவருக்கான வாய்ப்பு குறைந்து படங்கள் இல்லாமல் உள்ளார். இந்த நிலையில் தேவராட்டம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

சபாஷ் நாயுடு

கமல்ஹாசன் நடித்து இயக்கும் படம் சபாஷ் நாயுடு. இந்த படத்தின் வேலைகள் 2016ல் தொடங்கியது. அமெரிக்காவில் முதல்கட்ட சூட்டிங்கை முடித்து சென்னை திரும்பிய கமல்ஹாசன், ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் தவறிவிழுந்தார். இதில் அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் ஓய்வில் இருந்த கமல்ஹாசன், தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கினார். இதனால் சபாஷ் நாயுடு படத்தின் வேலைகள் தொடங்காது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சபாஷ் நாயுடு வேலைகளை தொடங்க கமல்ஹாசன் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுக்கிறாது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சபாஷ் நாயுடு படத்தை கமல்ஹாசன் உருவாக்குகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: