கடலூரில் திருநங்கையாக மாறிய ஆண் அரசு ஊழியருக்கு பணி மறுப்பு - நீதிமன்றம் கூறிய தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு திருநங்கையாக மாறியதால் தன் அரசுப் பணியை இழந்த நபருக்கு மகளிர் பிரிவில் மீண்டும் பணி வழங்குமாறு, நவம்பர் 11ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"ஆண் உதவி செவிலியர் பணியிடத்தில் திருநங்கையாக மாறிய நபர், தொடர அனுமதிக்க முடியாது" என்று கடலூர் மத்திய சிறை நிர்வாகம் மறுத்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.
"மகளிர் காலிப் பணியிடங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு வாய்ப்பு வழங்குவது ஏற்புடையதல்ல" என்று திருநங்கைகள் நலனுக்கான அமைப்புகள் கூறுகின்றன.
இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? நீதிமன்றம் கூறிய தீர்வு என்ன?

பட மூலாதாரம், prisons.tn.gov.in
கடலூர் சிறையில் என்ன சிக்கல்?
கடலூர் மாவட்டம் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த எஸ்.மணி என்பவர், கடந்த ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், "2021ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி, கடலூர் மத்திய சிறையில் ஆண் உதவி செவிலியராகப் பணியமர்த்தப்பட்டேன். 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 23 வரை எனது தகுதிகாண் (Probation) பணிக் காலத்தை நிறைவு செய்தேன்" எனக் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சையைத் தான் மேற்கொண்டதாகக் கூறியுள்ள அவர், "அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறையில் ஆண் உதவி செவிலியராகப் பணியில் தொடர்ந்ததாக" மனுவில் கூறியுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கடலூர் சிறை கண்காணிப்பாளரிடம் தான் பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுவிட்டதாகக் கூறியுள்ளார். "அப்படியானால் ஆண் உதவி செவிலியர் பணியிடத்தில் தொடர முடியாது" என்று சிறை கண்காணிப்பாளர் கூறியதாகவும் மணி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
அதோடு "இதன் பிறகு விடுப்பில் செல்லுமாறு சிறைக் கண்காணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டேன். அதைத் தொடர்ந்து, 2024 ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 31 வரை விடுப்பில் இருந்தேன். அதன் பிறகும் எனது விடுப்பை கடலூர் சிறை கண்காணிப்பாளர் தொடர்ந்து நீட்டித்தார்" என்றும் மனுவில் கூறியுள்ளார்.
'மனுவை நிராகரித்த சிறைத் துறை டி.ஜி.பி'
கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை விடுப்பில் இருந்ததாக மனுவில் கூறியுள்ள அவர், இதற்கான சம்பளத்தை பெற்று வந்ததாகவும், இதன் பிறகு, விடுப்பு கேட்டு விண்ணப்பித்தபோது தனது மனு நிராகரிக்கப்பட்டதாகவும் மனுவில் எஸ்.மணி கூறியுள்ளார்.
சிறையில் ஆண் உதவி செவிலியராகப் பணியில் தொடர்வதற்கும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறியுள்ள எஸ்.மணி, "என் நிலை குறித்துக் கடந்த ஜனவரி மாதம் சிறைத்துறை டிஜிபியை சந்தித்து விளக்கியபோது, ஆண் செவிலியராகப் பணியில் தொடர்வதற்கு சிறைத் துறை டிஜிபி அனுமதி அளிக்கவில்லை. கடந்த மே 14 அன்று சிறைத் துறை டிஜிபியை மீண்டும் சந்தித்தபோதும் இதே முடிவை அவர் தெரிவித்தார்" என்று எஸ்.மணி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
எஸ்.மணியின் தந்தை ஒரு பார்வை மாற்றுத்திறனாளி, அவருக்கு 72 வயதாகிறது. அவரது தாயாருக்கு 65 வயதாகிறது. மேலும், மனநலம் குன்றிய மூத்த சகோதரி ஒருவரையும் கவனித்துக் கொள்ள வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார்.
இதை மனுவில் தெரிவித்துள்ள எஸ்.மணி, "குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபராக நான் இருக்கிறேன். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சம்பளம் வராததால் பொருளாதாரரீதியாகக் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளேன்" எனக் கூறியுள்ளார்.

மனுவில் முன்வைக்கப்பட்ட மாற்றுத் தீர்வு என்ன?
தனது மனுவில் மாற்றுத் தீர்வு ஒன்றையும் எஸ்.மணி முன்வைத்துள்ளார். இதைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய அவரது வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "சிறையில் ஆண் உதவி செவிலியராகத் தொடர வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர். அதேநேரம், கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பெண் உதவி செவிலியர் காலிப் பணியிடம் உள்ளது.
மாற்றுப் பணி (Deputation) அடிப்படையில் சிறைத் துறையில் இருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்குத் தன்னை இடமாற்றம் செய்யுமாறு கடந்த ஜூன் மாதம் அவர் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அந்த மனுவின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
சிறைத்துறையின் அணுகுமுறை என்பது அரசமைப்புச் சட்டம் 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்), 16 (அரசுப் பணிகளில் சம வாய்ப்பு) ஆகியவற்றை மீறுவதாக உள்ளதாகவும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
"அரசமைப்பின் பிரிவு 226இன் படி (அடிப்படைக் கடமைகளைச் செய்வதற்கு உத்தரவிடுதல்) நீதிமன்றத்தை அணுகுவதைத் தவிர எனக்கு வேறு எந்த மாற்றுத் தீர்வும் இல்லை" எனவும் மனுவில் எஸ்.மணி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் தரப்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "சிறையில் ஆண் செவிலியர் உதவியாளர் பணியிடத்தில் மட்டுமே மனுதாரர் நியமிக்கப்பட்டார். பாலின மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு விட்டதால் பணியில் தொடர வாய்ப்பில்லை" எனக் கூறப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
'2 வாரங்களுக்குள் பணி' - நீதிபதி இளந்திரையன்
வழக்கில் கடந்த நவம்பர் 11ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், "மனுதாரர், பாலின மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டு திருநங்கையாக மாறிவிட்டார். அதனால் ஆண் செவிலியர் உதவியாளராக அவரால் பணியில் தொடர முடியவில்லை.
கடலூர் அரசு மருத்துவமனையில் பெண் உதவி செவிலியர் பணியிடம் காலியாக உள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. தீர்ப்பின் உத்தரவு கிடைத்த நாளில் இருந்து இரண்டு வாரங்களுக்குள் அவரை அந்தப் பணியில் நியமிக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் முதல் பணியில் இருந்து விடுவிக்கப்படும் காலம் வரை நிலுவையில் உள்ள சம்பளத்தையும் அவருக்கு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைத்துறை நிர்வாகத்திற்குத் தெரியாமல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதால் சிக்கலை எதிர்கொண்டதாகக் கூறும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "ஒரு திருநங்கையாகவே அவர் பரிசீலித்திருக்க வேண்டும் என்றால், அவருக்கு அரசாங்கத்தில் வேலை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" என்கிறார்.
"இதுபோன்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர்களை மகளிர் காலிப் பணியிடங்களில் நிரப்புவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
அதோடு "மாநில உள்துறையின்கீழ் சிறைத் துறை வருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் அரசு மருத்துவமனைகள் வருகின்றன. இரண்டும் வெவ்வேறு துறை என்பதால் மாற்றுப் பணி (deputation) மூலம் அவருக்கு பணி உத்தரவை வழங்க உள்ளனர். இதை நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்துள்ளது" எனவும் அவர் தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறுகிறார், திருநங்கைகள் நலனுக்காகச் செயல்படும் 'குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ்' அமைப்பைச் சேர்ந்த மௌலி.
கடலூர் வழக்கை குறிப்பிட்டுப் பேசிய அவர், "அரசுப் பணியில் சிக்கல் வரலாம் என்பதால் தனது பாலினத்தை அவர் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம். தற்போது அதை வெளிப்படையாகக் கூறுவதற்கு முன்வந்துள்ளார்.
பாலின அடையாளத்தைக் காரணம் காட்டி ஒருவரை அரசுப் பணியில் இருந்து நீக்க முடியாது என்பது நீதிமன்ற உத்தரவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு சில அரசுத் துறைகளுக்குள் பாலினப் பாகுபாடுகள் காட்டப்படுவதை அறிகிறோம். இதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு கொண்டு வர வேண்டும்" என்கிறார் மௌலி.

கடலூர் சிறை கண்காணிப்பாளர் கூறுவது என்ன?
கடலூர் சிறை கண்காணிப்பாளர் பரசுராமனிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "கடலூர் மத்திய சிறை என்பது ஆண்கள் சிறையாக உள்ளது. இங்கு ஆண் உதவி செவிலியர் என்ற பணியிடம் மட்டுமே உள்ளது. அதனால் அவர் பணியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மற்றபடி எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை" என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அரசு மருத்துவமனையாக இருந்தால் அங்கு ஆண் உதவி செவிலியரும் பெண் உதவி செவிலியரும் இருப்பார்கள். அங்கு இருதரப்பும் இருப்பதால் பணியிடத்தில் எந்தப் பிரச்னையும் வரப் போவதில்லை" எனக் குறிப்பிட்டார்.
அதோடு, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, கடலூர் அரசு மருத்துவமனையில் அவருக்குப் பணி வழங்குவது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு சிறைத் துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மகளிர் பிரிவில் மூன்றாம் பாலினத்தவரா?
மகளிர் காலிப் பணியிடத்தில் திருநங்கை நியமிக்கப்படுவது குறித்துப் பேசும் மௌலி, "திருநங்கை எனப் பார்ப்பதை விடவும் தகுதியான பணியிடத்திற்கு, தகுதியான நபர் நியமிக்கப்படுவதாக இதைப் பார்க்கலாம்" என்கிறார்.
"அரசுப் பேருந்தில் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தில் திருநங்கைகளும் பயனடைகின்றனர். அந்த வகையில், மகளிர் காலிப் பணியிடங்களில் இப்படியொரு கேள்வி எழ வேண்டிய அவசியம் இல்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், "மகளிர் காலிப் பணியிடத்தில் திருநங்கைகளை நியமிப்பது சரியானதல்ல" எனக் கூறுகிறார், திருநங்கை ஸ்வேதா.
"மகளிர் என பரிசீலித்தால் மூன்றாம் பாலினத்தவர் என்ற அடையாளம் இல்லாமல் போய்விடும். அதற்காகப் பல்வேறு நிலைகளில் போராடியவர்களின் முயற்சிகள் வீணாகிவிடும்" என்கிறார், அவர்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி, காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு விண்ணப்பித்தார். ஆனால், திருநங்கை என்ற காரணத்தால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Facebook/Prithika
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ரிட் மனுத் தாக்கல் செய்தார். "அவருக்கு முழு தகுதி இருப்பதால் காவல் உதவி ஆய்வாளர் பணியை வழங்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது தமிழ்நாடு காவல்துறையில் உதவி ஆய்வாளராக அவர் பணிபுரிந்து வருகிறார்.
இதைக் குறிப்பிட்டுப் பேசும் ஸ்வேதா, "நீதிமன்றத்தில் திருநங்கை என்று கூறிப் போராடித்தான் பிரித்திகா யாஷினி வெற்றி பெற்றார். கடலூர் சிறைத் துறைக்கு எதிரான வழக்கில் மனுதாரர் தனது வாதத்தைச் சரியாக முன்வைக்கவில்லை எனக் கருதுகிறோம்" என்றார்.
ஆனால், "நீதிமன்றம் சென்று முறையிட்டதால் பிரித்திகா யாஷினிக்கு அரசுப் பணி கிடைத்தது. அதற்காக, பாதிக்கப்படும் நபர்கள் அனைவருமே நீதிமன்றம் சென்று உத்தரவைப் பெறுவது என்பது சாத்தியமில்லை" என்கிறார் மௌலி.
'இடஒதுக்கீடு மட்டுமே ஒரே தீர்வு'
"கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்" என்று 2014ஆம் ஆண்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், "அனைத்து நிலைகளிலும் மூன்றாம் பாலினத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்" என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, திருநங்கைகள் நலன் தொடர்பான கொள்கையை (State Policy for transgender persons 2025) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
"ஆனால், இது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை" எனக் கூறும் ஸ்வேதா, "கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு இரண்டு சதவிகித இட ஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும். அவ்வாறு கொடுத்தால் அரசுப் பணி கிடைப்பதில் எந்தச் சிரமமும் இருக்கப் போவதில்லை" என்கிறார்.
"இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் பாலியல்ரீதியான பிரச்னைகளுக்கு யாசகம் கேட்பதும் குறைந்துவிடும். மாறாக, மகளிர் என்ற பிரிவில் சேர்ப்பது தவறானது" எனக் கூறும் அவர், "மகளிராகப் பரிசீலிக்க வேண்டுமெனில் வீட்டிலேயே பெண் எனக் கூறி வாழ்ந்திருக்க முடியும். இவ்வளவு அவமானங்களை ஏன் சந்திக்க வேண்டும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












