திருப்பரங்குன்றம் தூண்: தமிழ்நாடு அரசு முன்வைத்த 3 வாதங்கள் - நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"அந்தக் கல் தூண் எப்போது வைக்கப்பட்டது என்பதற்கு எந்தத் தரவும் கிடைக்கவில்லை. அது தீபத் தூண் என்பது யூகம்தான். இதுவரை அங்கு எந்தத் தீபமும் ஏற்றப்படவில்லை" - டிசம்பர் 18ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் இவ்வாறு வாதிட்டார்.

"முழுமையான விசாரணை நடக்கும்போது கல் தூண் குறித்த விவரங்கள் தெரிய வரலாம்" எனவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னதாக டிசம்பர் மாத தொடக்கத்தில், "மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்" என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக, மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது.

கடந்த ஐந்து நாட்களாக, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டு வந்தனர்.

வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் இன்று நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகள் உள்படப் பிற வழக்குகள் ஜனவரி 7 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக நீதிபதிகள் கூறினர்.

'எந்தத் தரவுகளும் இல்லை' - அரசு தலைமை வழக்கறிஞர்

டிசம்பர் 18ஆம் தேதியன்று தர்கா தரப்பில் இறுதி வாதத்தை முன்வைத்த வழக்கறிஞர், "இதுபோன்ற விவகாரங்களை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உரிமையியல் நீதிமன்றத்திற்குத்தான் வழக்கறிஞர் செல்ல வேண்டும்" எனக் கூறினார்

இவற்றைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனது இறுதி வாதத்தை முன்வைத்தார். அவர் வாதிடும்போது, "அது தீபத்தூண் என்ற கூற்றை ஆதரிப்பதற்கு எந்தத் தரவுகளும் இல்லை" எனக் கூறினார்.

"நீதிமன்றத்தின் முன்னுள்ள ஆவணங்களின்படி அந்தத் தூணின் தோற்றம் மற்றும் பயன்பாடு குறித்தும் அது தீபத்தூண் தானா என்பது குறித்தும் காட்டக்கூடிய தரவுகளோ, ஆதாரங்களோ இல்லை" எனவும் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

"அது சமண நினைவுச் சின்னம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. அந்தப் பகுதி தங்கள் சொத்தின் ஒரு பகுதி என தர்கா தரப்பு கூறுகிறது" என அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குறிப்பிட்டார்.

அதோடு, இப்படியொரு விவகாரம் எழுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, திருநெல்வேலி, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு கல் தூண்களின் முக்கியத்துவத்தைச் சரிபார்க்கும் வேலைகளில் தமிழ்நாடு அரசின் நிலஅளவை மற்றும் வருவாய்த் துறைகள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அவர் கூறினார்.

இவற்றை ஆய்வு செய்து அறிக்கையைத் தயாரிக்குமாறு அதிகாரபூர்வ அரசாணை ஒன்று உள்ளதாகக் கூறிய பி.எஸ்.ராமன், "அது வெளிவரும்போது தூணின் தோற்றம் மற்றும் பயன்பாடு குறித்த சில விவரங்களை வெளிக்கொண்டு வரலாம்" எனக் குறிப்பிட்டார்.

'தூண் விவகாரத்தில் 3 விஷயங்கள்'

இந்த விவகாரத்தில் மூன்று விஷயங்களை அரசின் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

  • "முதலாவதாக, அது தீபத்தூண் என்பது யூகம்தான். இதுவரை அங்கு எந்தத் தீபமும் ஏற்றப்படவில்லை."
  • "இரண்டாவது, அந்தக் கல் தூண் எப்போது நிறுவப்பட்டது என்பதற்கான தரவுகள் கிடைக்கவில்லை. அதுதொடர்பாக முழுமையான விசாரணை நடக்கும்போது தெரிய வரலாம்."
  • "மூன்றாவதாக, எந்த நோக்கத்திற்காக அந்தத் தூண் கட்டப்பட்டது என்பது குறித்து நீதிபதிகள் முன்பாக எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை."

இந்த மூன்று விஷயங்களையும் மேற்கோள் காட்டி தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்துகளை முன்வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு, வழக்கில் எழுத்துபூர்வமான வாதங்களை வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.

வழக்கில் இதுவரை என்ன நடந்தது?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதர் ஆலயமும் மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.

ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை தீப நாளில் சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை இந்து அமைப்பினர் முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டுமென உத்தரவிட்டார்.

அதன்படி, டிசம்பர் 3 மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.

இதையடுத்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பரங்குன்றம் முருகன் கோவில் செயல் அலுவலர் டிசம்பர் 2 அன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

ஆனால், டிசம்பர் 3 அன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பிள்ளையார் கோவில் அருகே வழக்கம் போல தீபம் ஏற்றப்படும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் தீபத்தூணில் தீபத்தை ஏற்றுவதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை (டிசம்பர் 3) தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். தன்னுடன் அவர் 10 பேரை அழைத்துச் செல்லலாம் என்றும் சிஐஎஸ்எஃப் வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, மதுரை மாவட்ட ஆட்சியர், நகர காவல் ஆணையர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் செயல் அதிகாரி ஆகியோர் ஒரு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக டிசம்பர் 4 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மறுபுறம், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம், மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா நிர்வாகம் ஆகியவை தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு டிசம்பர் 15 அன்று விசாரணைக்கு வந்தபோது, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சமணர்கள் வட மாநிலங்களில் இருந்து மதுரைக்கு வந்தனர் என்றும் அவர்களால் உருவானதே இந்தத் தூண் என்றும் குறிப்பிட்டார். இது மீண்டும் விவாதங்களை எழுப்பியது.

ஐந்தாவது நாளான இன்று (டிசம்பர் 18) வழக்கின் இறுதி வாதங்கள் நடைபெற்றன.

அப்போது, தூணில் தீபம் ஏற்றப்பட்டது தொடர்பாக எந்தத் தரவுகளும் இல்லை என தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு