You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அரசமைப்புச் சட்டம் vs எமர்ஜென்சி' விவாதம்: காங்கிரசும் பா.ஜ.க-வும் எதைச் சாதிக்க விரும்புகின்றன?
2024-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, இந்தியாவின் 18-வது மக்களவை நிறுவப்பட்டது. தொடர்ந்து மூன்று முறை பிரதமராக பதவி வகித்த இரண்டாவது அரசியல்வாதி ஆனார் நரேந்திர மோதி.
பா.ஜ.க-வுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பெரும்பான்மையை விட 21 இடங்கள் கூடுதலாக பெற்று மோதி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது.
எந்த அச்சங்களையும் பொருட்படுத்தாமல், அரசு நிர்வாகம் இரண்டாவது முறையாக பா.ஜ.க எம்.பி ஓம் பிர்லாவை சபாநாயகராகத் தேர்வு செய்தது.
அதுமட்டுமின்றி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீதான குற்றச்சாட்டுகளும், எதிர் குற்றச்சாட்டுகளும் அடங்கிய ஒரு புதிய அத்தியாயத்தை எதிர்கட்சிகளும், ஆளும் கட்சியும் இணைந்து எதிர்கால அரசியலில் எழுதி வைத்துள்ளன.
மக்களவைத் தேர்தலில், எதிர்க்கட்சியான இந்தியக் கூட்டணியும், குறிப்பாக காங்கிரஸும் பா.ஜ.க-வின் 400-க்கும் மேற்பட்ட முழக்கத்தை அரசியலமைப்பை மாற்றும் அச்சுறுத்தலுடன் இணைத்து அரசியலமைப்பைப் பாதுகாப்பதை ஒரு வலுவான தேர்தல் பிரச்னையாக மாற்றியது.
பா.ஜ.க-வின் '400-ஐ தாண்டும்' என்ற முழக்கத்தையும், அரசியல் சட்டத்தை மாற்றும் அச்சுறுத்தலையும் இணைத்து பேசிய காங்கிரஸ், அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதை மிகப்பெரிய தேர்தல் பிரச்னையாக உயர்த்தியது.
எதிர்கட்சிகளின் ஆக்ரோஷமான அணுகுமுறை
மக்களவையில் புதிய எம்.பி-க்கள் பதவியேற்பின் போது, காங்கிரஸ் உள்ளிட்ட இந்திய கூட்டணியின் பெரும்பாலான எம்.பி-க்கள், அரசியல் சாசனத்தின் சிறிய நகலை கையில் ஏந்தி, 'ஜெய் அரசியல் சாசனம்' என்ற முழக்கத்தை எழுப்பினர். 'அரசமைப்புக்கு எதிரான சம்பவங்கள் நடக்கும் போது தேர்தல் சமயத்தில் மட்டும் பிரச்னை எழுப்பப்படும் என்று நினைக்க வேண்டாம், எதிர்காலத்தில் எல்லா சமயங்களிலும் எழுப்பப்படும்' என்பதை அவர்கள் தெளிவுப்படுத்தினர்.
எதிர்கட்சிகளின் இத்தகைய அணுகுமுறைகள் பா.ஜ.க-வின் பிரச்னைகளை அதிகப்படுத்தியது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறவுள்ள மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், டெல்லி, பிகார் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் அரசமைப்புச் சட்டப் பிரச்னை வந்து தலித்துகள், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இந்தியக் கூட்டணியை நோக்கித் திரும்பினால், பா.ஜ.க-வுக்குப் பின்னடைவு ஏற்படும். சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் 'இந்தியா’ கூட்டணியை ஆதரிக்கத் தொடங்குகின்றனர்.
எதிர்க்கட்சிகளின் அரசியல் சாசனப் பிரச்னையை எதிர்கொள்ள பா.ஜ.க புதிய அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது. முந்தைய காலக்கட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியில், தேசத்தின் ஜனநாயகம் 19 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டு, அரசியல் கைதிகள் நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அவசரகால நடவடிக்கைகளை பா.ஜ.க நினைவுப்படுத்தியுள்ளது.
இந்த அமர்வின் போது சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் அவசரநிலைக்கு கண்டனம் தெரிவித்தபோது, 'அவசரநிலை’ என்ற தலைப்பு கொண்டு வரப்பட்டது.
அரசியலமைப்பைக் காப்பாற்றப் போராட வேண்டும்
சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை பிர்லா வாசித்தார். காங்கிரசை குற்றம்சாட்டி, அவசர நிலையின் மிகையான நடவடிக்கைகள் மற்றும் கொடூரங்களைப் பற்றி விரிவாகப் பேசினார்.
மறுநாள் தனது உரையில் குடியரசுத் தலைவரும் அவசர நிலையைக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்தார். குடியரசுத் தலைவர் மூலமாகவும் அரசாங்கம் பேசியது.
இதன்மூலம், காங்கிரஸுக்கும், அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் முழக்கத்துக்கும் பா.ஜ.க பதிலளித்து, அரசமைப்புச் சட்டம் இப்போது ஆபத்தில் உள்ளது என்றால், நாட்டில் அவசரநிலை விதிக்கப்பட்டபோது, அதைச் செய்த காங்கிரசுக்கு இப்போது அதைப் பாதுகாக்கும் முழக்கத்தை எழுப்ப உரிமை இல்லை என்று கூறியது.
பா.ஜ.க-வின் இந்த அம்பு காங்கிரஸையும் கலக்கத்தில் ஆழ்த்தியது, ஏனெனில் எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்ட தலைவர்களும் கட்சியினரும் உள்ளனர். எனவே இந்தியா கூட்டணியின் அங்கம் வகிக்கும் சில கட்சிகளால் இந்தப் பிரச்னையில் காங்கிரசுடன் நிற்க முடியாது.
ஓம் பிர்லாவின் முன்மொழிவுக்கு எதிராகக் காங்கிரஸ் எம்.பி-க்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபோது, சமாஜ்வாதி, தி.மு.க, ஆர்.ஜே.டி போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் அமைதியாக இருந்தனர்.
கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான நேற்று, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், பதவிப் பிரமாணம் செய்து முடித்ததும், 'ஜெய் அரசியல் சாசனம்' என்ற முழக்கத்தை எழுப்பியபோது, சபாநாயகர் குறுக்கிட்டு, நீங்கள் ஏற்கனவே அரசியல் சாசனத்தின் மீது சத்தியப்பிரமாணம் செய்கிறீர்கள் என்று கூறினார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர் தீபேந்தர் ஹூடா எதிர்ப்பு தெரிவிக்க, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவரை அமரும்படிக் கூறினார்.
பிர்லாவின் இந்த அணுகுமுறை எதிர்க்கட்சிகளை சங்கடப்படுத்தியது.
குடியரசுத் தலைவர் உரையில் எமர்ஜென்சி குறித்து குறிப்பிடப்பட்டபோதும், காங்கிரஸ் தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது மற்றும் காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை மரியாதை நிமித்தமாக சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்த விவகாரம் பலமுறை விவாதிக்கப்பட்டதால், எமர்ஜென்சி குறித்த தீர்மானம் தேவையற்றது என்றும், காங்கிரஸ் தனது தவறை ஏற்று மன்னிப்பும் கேட்டுள்ளது என்றும் கூறினார்.
49 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட 'எமர்ஜென்சி' நடவடிக்கை
49 ஆண்டு பழமையான சம்பவத்தை நினைவுக்கூர்வதன் மூலம் பா.ஜ.க தனது எரிச்சலையும் அச்சத்தையும் வெளிப்படுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா சுலே வீடியோ ஒன்றை வெளியிட்டு, மோதி அரசின் 10 ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், இது அறிவிக்கப்படாத அவசரநிலை என்று கூறினார்.
இதே குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோதி மீது தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஓம்கர்நாத் சிங் கூறுகையில், “1977 தேர்தலில் இந்திரா காந்தியையும், காங்கிரஸையும் தோற்கடித்து அவசர நிலை நடவடிக்கையால் தண்டித்த அதே மக்கள், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, ரேபரேலி, மேடக் ஆகிய இரு தொகுதிகளில் இந்திரா காந்தியை வெற்றிபெறச் செய்தார்கள். அப்போது, காங்கிரஸுக்கு 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிப்பெற்று, பெரும்பான்மையும் வழங்கப்பட்டது,” என்றார்.
இத்தனைக்கும் மத்தியில், அரசியலமைப்புச் சட்டப் பிரச்னைக்கு புதிய முனைப்புக் கொடுத்து புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது சமாஜ்வாதி கட்சி.
நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோதி நிறுவிய செங்கோலை அகற்றிவிட்டு அங்கு அரசியலமைப்பு சட்டத்தை நிறுவ வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்பியும் தலித் தலைவருமான ஆர்.கே.சௌத்ரி வலியுறுத்தியுள்ளார்.
சௌத்ரி கூறுகையில், “செங்கோல் என்பது முடியாட்சியின் சின்னமாகும். இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தில் மன்னராட்சியை குறிக்கும் செங்கோலுக்கு இடமில்லை. அதற்கு பதிலாக அரசியலமைப்பு நிறுவப்பட வேண்டும்,” என்றார்.
சௌத்ரியின் இந்த அறிக்கையை எதிர்கட்சியான இந்தியா கூட்டணி வலுவாக ஆதரித்துள்ளது, மேலும் பா.ஜ.க செங்கோலுக்கு ஆதரவாக நிற்கிறது, இது இந்திய கலாச்சாரம் மற்றும் தமிழ் உணர்வுகளின் சின்னம் என்று கூறுகிறது.
இன்னொரு பக்கம் அவசர நிலை (எமர்ஜென்சி) பிரச்னையை மக்களிடம் கொண்டு செல்ல பா.ஜ.க தயாராகி வருகிறது. இதற்காக, நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதில், எமர்ஜென்சியை விதித்ததன் மூலம் அரசியல் சட்டத்தை காங்கிரஸ் எப்படி நெருக்கடிக்குத் தள்ளியது என்பது குறித்து விளக்கப்படும்.
தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி காங்கிரஸ் பரப்பியது. இதனை பா.ஜ.க அவசரநிலை பிரச்னையை எழுப்பி மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்பது பா.ஜ.க-வின் கருத்து.
எமர்ஜென்சிக்குப் பிறகு, 1980, 1984, 1991, 2004 மற்றும் 2009 ஆகிய மக்களவைத் தேர்தல்களில் காங்கிரசுக்கு மக்கள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர், எனவே இந்தப் பிரச்னை இதற்கு மேல் தொடராது என்று காங்கிரஸ் நம்புகிறது.
மோதல் போக்கு
மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் மக்களவையின் முதல் நாளிலேயே அழிக்கப்பட்டுவிட்டதையே இந்தக் குற்றச்சாட்டு மற்றும் எதிர்க் குற்றச்சாட்டுகள் காட்டுகிறது.
தற்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் செயல்படுவதால், பா.ஜ.க பெரும்பான்மைக்கு வெகு தொலைவில் இருக்கிறது, எனவே எதிர்க்கட்சிகள் மீதான என்.டி.ஏ அரசின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றம் ஏற்படும் என்று கருதப்பட்டது.
இனி எதிர்க்கட்சிகளை புறக்கணிக்க முடியாது என்பதால், ஆளும் கட்சிக்கும் ராகுல் காந்தி தலைமையிலான வலுவான எதிர்க்கட்சிக்கும் இடையே ஒரு கட்ட ஒத்துழைப்பு மற்றும் தகவல் தொடர்பு தொடங்கும் என்றும் நம்பப்பட்டது.
ஆனால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பும் காட்டும் அணுகுமுறை, 18வது மக்களவையில், ஒத்துழைப்பு, பேச்சு வார்த்தைகளை விட, ஒருவரையொருவர் இழிவுபடுத்துவதில் அதிக போட்டி ஏற்படும் என்ற அச்சத்தை வலுப்படுத்தியுள்ளது.
ஊடகங்களும் அரசியல் ஆய்வாளர்களும் பா.ஜ.க முன்பை விட பலவீனமாகியதாக கருதினாலும், அது முன்பைப் போலவே வலுவாகவும் பலமாகவும் இருக்கிறது என்பதே அரசாங்கத்தின் தெளிவான செய்தி. அதே சமயம், கடந்த பத்து வருடங்களாக ஆளும் கட்சி அமல்படுத்திய தன்னிச்சையான கொள்கைகள் இன்றைய எதிர்கட்சியின் பலத்தைக் கருத்தில் கொண்டு இனி பலனளிக்காது என்ற செய்தியை எதிர்க்கட்சிகள் நாட்டுக்கும் அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தி உள்ளன.
மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி-க்களின் எண்ணிக்கை வியத்தகு அளவில் அதிகரித்து, ஆளுங்கட்சியின் ஆசனங்கள் குறைந்துள்ளதால், சபையில் அரசுக்கு அதிக பெரும்பான்மை இருந்தபோதிலும், அதன் மன உறுதி அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சி கூறுகிறது.
பரஸ்பர பலவீனங்களை வெளிப்படுத்தவும், தங்கள் பலத்தை வெளிப்படுத்தவும் போட்டி போடுவதால், வரும் நாட்களில், நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான போட்டி இன்னும் தீவிரமடையும்.
'ராகுல் காந்தியின் முக்கியத்துவம்'
புதிய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றதும் ஒரு பெரிய அரசியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ராகுல் காந்தி கடந்த இரண்டு வருடங்களாக தனக்குள் செய்து கொண்ட மாற்றங்களின் விளைவாக உறுதியான எதிர்க்கட்சித் தலைவராக மாறியுள்ளார்.
ஒவ்வொரு விஷயத்திலும் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அவரது அரசாங்கத்தை ராகுல் குறிவைக்கிறார். மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்களுடன் ராகுல் காந்தி புரிந்துணர்வை ஏற்படுத்திய விதம் அவரது ஏற்றுக்கொள்ளும் தன்மையை மேம்படுத்தியுள்ளது.
இப்போது அவர் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக பிரதமர் மோதியை எதிர்கொள்கிறார். பல கமிட்டிகளில் இருப்பார்.
குறிப்பிடத்தக்க அரசாங்க முயற்சிகளில் எதிர்க்கட்சித் தலைவராக பங்கேற்க அவர் அழைக்கப்படுவார், மேலும் அவர் சி.பி.ஐ, சி.வி.சி மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகளுக்கான தேர்வுக் குழுக்களில் பிரதமருடன் அமருவார்.
ராகுலுக்கும் மோதிக்கும் இடையிலான இனிப்பும், புளிப்பும் கலந்த உறவு மக்களவைக்குள் பெரும் அனல் பறக்கும் விவாதங்களை வளர்க்கவும் வாய்ப்புள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)