You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'சிங்கம் என மக்கள் நினைத்தனர்' - ஒரு பேரரசையே வெல்ல நாய்கள் உதவிய கதை
- எழுதியவர், டரியோ ப்ரூக்ஸ்
- பதவி, பிபிசி உலக சேவை
500 ஆண்டுகளுக்கு முன்பு, மக்களை அடக்குவதற்கு வாள்கள், வில்கள், பீரங்கிகள் மற்றும் குதிரைகள் போலவே அச்சுறுத்தும் "உயிருள்ள" ஆயுதங்களை ஸ்பானியர்கள் இறக்குமதி செய்தனர். அவை நாய்கள்.
ஸ்பெயினின் பல வெற்றிகளில், அவர்கள் ஸ்பானிஷ் அலானோ அல்லது ஜெர்மன் புல்மாஸ்டிஃப் போன்ற சக்தி வாய்ந்த நாய் இனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தினர். அவர்கள் தங்கள் நடவடிக்கைகளை தொடரவும், குடியேற்றங்களைப் பாதுகாக்கவும், பூர்வீக மக்களைத் தாக்கவும் அவை பயன்படுத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களின் போது, உள்ளூர் மக்களிடையே பயத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு உத்தியாக நாய்கள் பயன்படுத்தப்பட்டன. உள்ளூர் மக்கள் இந்த விலங்கின் சிறிய, நட்பான இனத்தை அறிந்திருந்தனர். ஆனால் அவற்றின் ஆக்ரோஷத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
பெரு ராணுவ கர்னல் கார்லோஸ் என்ரிக் ஃப்ரேர் பிபிசி முண்டோவிடம் கூறுகையில், "நாய் ஒரு ஆயுதமாக செயல்படுகிறது. நாயின் அளவு, அதன் பயிற்சி மற்றும் அதைக் கையாளும் நபர் உட்பட முழு செயல்முறையே இருக்கிறது."
அவரது சமீபத்திய நாவலான "லேண்ட் ஆஃப் டாக்ஸ்", பெரு வெற்றியின் போது ஸ்பானிஷ் ராணுவத்திற்கு காவலர்களாக பணியாற்றிய நாய்களின் குழுவை பயிற்றுவிக்கவும் பாதுகாக்கவும் பொறுப்பான ஒரு நாய் பயிற்சியாளரின் கதையைச் சொல்கிறது.
ஸ்பானிஷ் ராணுவத்தில் நாய்களின் பயன்பாடு
ஸ்பானிஷ் ராணுவத்தில் நாய்களின் பயன்பாடு குறித்து மிகக் குறைந்த ஆவணங்களே கிடைக்கின்றன, அவற்றின் புகைப்படங்களும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
வடமேற்கு பெருவில் உள்ள டும்பெஸ் நகரத்தில் ஒரு பயணம் மேற்கொண்டிருந்த போது இந்த விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டதாக ஃப்ரேர் கூறுகிறார். அங்கு அவர் அந்தக் காலத்தின் பல வரலாற்றாசிரியர்களின் புத்தகங்களை கண்டார், அவர்கள் உள்ளூர் கலாசாரத்தை ஆழமாக ஆய்வு செய்து போரின் போது நடந்த கொடுமைகளைக் குறிப்பிட்டிருந்தனர்.
"அவர்கள் இந்த நாய்களைப் பற்றி பேசுகையில் அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். பல சந்தர்ப்பங்களில் அவற்றின் பண்புகளையும் விவரிக்கின்றனர். இந்த நாய்கள் டும்பெஸுக்கு வந்து அங்கு வாழும் மக்களை அழித்தன," என்று எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொமாஸ் டி ஹெரெஸ், வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட அவரது கற்பனை நாவலில், பால்டோமெரோ என்ற செல்வாக்குமிக்க நாய் பயிற்சியாளராக மாறுகிறார்.
இருப்பினும், அமெரிக்காவின் ஆரம்பகால ஆய்வின் போது, ராணுவத் தலைவர் வாஸ்கோ நியூஸ்ட்ரோ டி பால்போவா, லியோசின்கோ என்று பெயரிடப்பட்ட ஸ்பானிஸ் மாஸ்டிஃப் ரக நாய் உள்பட பல நாய்களை வைத்திருந்தார்.
லியோசின்கோ முதலில் பெசெரில் என்று அழைக்கப்படும் நாய் இனமாக இருந்தது. ராணுவத் தலைவர் ஜுவான் போன்ஸ் டி லியோன் ஹிஸ்பானியோலா தீவு மற்றும் இன்றைய போர்ட்டோ ரிக்கோவுக்கான தனது பயணத்தின் போது அவற்றை உடன் கொண்டு சென்றார்.
16ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் பூர்வீக அமெரிக்க பிரதேசங்களை ஆய்வு செய்து குடியேற்றுவதற்கான ஆரம்ப நாட்களிலிருந்தே நாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.
போரில் நாய்கள் எப்போது பயன்படுத்தப்படத் தொடங்கின?
அமேசான் பகுதியை ஆராயும்போது, ஸ்பானியர்கள் 2,000 நாய்களை தங்களுடன் அழைத்துச் சென்றனர். பிரான்சிஸ்கோ பிசாரோ, இன்கா பேரரசை வெல்வதற்கான பயணத்தை வழிநடத்தினார். அவர் அப்படி கடந்த இடங்களில் ஒன்று டும்பெஸ் .
"பரவலான நம்பிக்கைக்கு மாறாக, அவர்களிடம் அவ்வளவு குதிரைகள் இல்லை," என்று ஃப்ரேயர் கூறுகிறார். "துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்கள் இன்று இருப்பதை விட மிகக் குறைவாகவே கிடைக்கப்பெற்றன. துப்பாக்கிகள், வாள்கள் அல்லது குதிரைகள் செல்ல முடியாத இடங்களுக்கும் நாய்களால் செல்ல முடிந்தது."
நாய் பயிற்சியாளர்கள், ஐரோப்பாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெரிய ஆக்ரோஷமான பயிற்சியளிக்கப்பட்ட நாய் இனங்களை அவற்றிற்கு அறிமுகமில்லாத உள்ளூர் மக்கள் மத்தியில் விடுவித்தனர்.
அவர் கூறுகையில், "இந்த ஸ்பானிஷ் நாய்கள் மிகவும் பெரியவை. அதனால்தான் உள்ளூர் மக்கள் இவை நாய்கள் அல்ல, சிங்கங்கள் என்று நினைத்தனர்." என்றார்.
போர்க்களத்தில் நாய்கள் எவ்வாறு உயிர் பிழைத்தன?
இன்கா பேரரசில் மேய்ச்சல் பணிகளுக்கு நாய்களின் பயன்பாடு வரையறுக்கப்படவில்லை என்றாலும் கரீபியன், மத்திய அமெரிக்கா மற்றும் மெசோஅமெரிக்காவின் பல பகுதிகளில் அது பரவலாக இருந்தது. பழங்குடி மக்களின் எதிர்ப்பை அடக்குவதற்கும் தண்டிப்பதற்கும் நாய்கள் பயன்படுத்தப்பட்டன.
மெக்சிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தால் "தி மேக்னிஃபிசென்ட் லார்ட் அலோன்சோ லோபஸ், மேயர் ஆஃப் சான்டா மரியா டி லா விக்டோரியா அண்ட் இண்டியன் டாக் கில்லர்" என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில், குவாட்ல் டி அமித்தான் புகைபிடித்ததற்காகவும், விக்கிரக வழிபாட்டிற்காகவும், பிசாசை அழைத்ததற்காகவும், மதப் பொருட்களை வைத்திருக்காததற்காகவும் அல்லது கிறித்தவத்தை மதிக்காததற்காகவும், தேவாலயத்தின் சுத்தத்தை புறக்கணித்ததற்காகவும், அவரது நகரத்தின் குடிமக்களுக்கு மதத்தில் பங்கேற்க வேண்டாம் என்று உத்தரவிட்டதற்காகவும், நாய்களால் கொல்லப்பட்டு அவர் எரிக்கப்பட வேண்டும் என்று அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது."
வரலாற்றாசிரியர் மிகுவல் லியோன் போர்டில்லா "தி டெஸ்டினி ஆஃப் தி வேர்ட்" என்ற புத்தகத்தில் இன்றைய மெக்சிகோவின் பழங்குடி மக்களின் கதைகளையும் எழுதியுள்ளார்.
ஒரு கதையில், "அவர்களின் நாய்கள் மிகமிகப் பெரியவை. அவற்றின் பெரிய தாடைகள் அசைகின்றன, அவற்றின் கண்கள் வீங்கியுள்ளன, அவற்றின் கண்கள் நிலக்கரி போன்ற மஞ்சள் நிறத்தில் உள்ளன, அவற்றின் வயிறுகள் மெல்லியவை, சுருக்கங்கள் நிறைந்தவை, சதையற்ற வயிறுகள், அவை மிகவும் பெரியவை, அவை அமைதியாக இல்லை, அவை மூச்சிரைத்து ஓடுகின்றன, அவற்றின் நாக்குகள் வெளியே தொங்குகின்றன, அவற்றின் உடல்களில் சிறுத்தைகள் போன்ற புள்ளிகள் உள்ளன, வெவ்வேறு நிறங்களின் புள்ளிகள்." என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஃப்ரேர் "லேண்ட் ஆஃப் டாக்ஸ்"-ஐ பெருவில் மையப்படுத்த முயற்சித்துள்ளார், பண்டைய காலத்தின் கடுமையான கதைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது முக்கியம் என்று நம்புகிறார்.
எழுத்தாளர் கூறுகையில், "உரையில் வன்முறையின் பயன்பாடு விவரிப்புக்கானது, ஆனால் மக்கள் புத்தகத்தை மூடிவிட்டு, 'அது மிகவும் அருவருப்பானது' என்று சொல்லும் அளவுக்கு அதிகமாக இல்லை. சில விஷயங்களில் சமநிலையை பராமரிக்க வேண்டும்."என்கிறார்.
வேலை முடிந்த பிறகு நாய்கள் என்னவாகும்?
பிரதேசங்கள் மற்றும் மக்களின் மீது ஆதிக்கத்தை நிலைநிறுத்திய பிறகு, இந்த நாய்கள் தங்கள் அசல் நோக்கத்தை இழந்தன. அதோடு காலப்போக்கில் ஸ்பானியர்களுக்கு இவை ஒரு தலைவலியாக மாறின.
அவர்களுக்கு அடிமைத் தொழிலாளர்கள் உட்பட வேலையாட்கள் தேவைப்பட்டதால், உள்ளூர் மக்களை மேலும் அழிப்பது சாத்தியமற்றதாக இருந்தது. நாய்களின் இருப்பும் அவற்றின் ஆக்ரோஷமும் ஒரு பிரச்னையாக மாறின.
ஸ்பானிஷ் முடியாட்சியால் அமெரிக்காவில் உள்ள பல்வேறு தளபதிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. பிரச்னைகளைத் தவிர்க்க நாய்களை அகற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது என்று ஃப்ரேர் விளக்குகிறார்.
"அவை சுதந்திரமாக விடப்பட்டால் ஸ்பானியர்கள் மற்றும் பூர்வீகவாசிகள் இருவருக்கும் எதிராக கூட்டங்களாக சண்டையிடும் எனக் கருதப்பட்டதால் நாய்களால் ஏற்படும் சேதம் தொடர்பான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன."
இருப்பினும், பல வருட பயிற்சியின் போதும் ஒன்றாக சண்டையிட்ட ஆண்டுகளிலும், பயிற்சியாளர்கள் தங்கள் நாய்களுடன் ஒரு சிறப்பு பிணைப்பை வளர்த்துக் கொண்டனர். இது "லேண்ட் ஆஃப் டாக்ஸ்" கதையிலும் பிரதிபலிக்கிறது.
"இந்த நாய்க்கும் அதை வளர்த்த வீரருக்கும் இடையே மிகவும் ஆழமான பிணைப்பு உள்ளது",என்று ஃப்ரேர் கூறுகிறார்.
இதன் விளைவாக, சில மக்களுக்கு, அரச ஆணைகள் இருந்தபோதிலும் தங்கள் அன்பான நாயை கைவிடுவது சிந்திக்க முடியாததாக மாறியது.
பழங்குடி பகுதிகளில் ஸ்பானிஷ் ஆட்சி வலுவடைந்ததால், நாய்கள் படிப்படியாக தங்கள் அந்தஸ்தை இழந்தன. பழங்குடி மக்களை அடிமைப்படுத்துவதில் அவற்றின் பங்கு மறக்கப்பட்டது.
படிப்படியாக அவற்றின் பங்கு பாதுகாப்பு மற்றும் உதவிக்கென மட்டுப்படுத்தப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு