மனைவியை கணவன் வல்லுறவு செய்வது குற்றமாகாதா? உயர் நீதிமன்ற தீர்ப்பால் எழும் கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நசிருதீன்
- பதவி, பிபிசி இந்திக்காக
‘ஒரு பெண் மனைவியாக இருக்கும்போது, அவளுடன் கணவன் எந்த வகையில் உடலுறவு கொண்டாலும் அது தவறாக இருக்க முடியாது’, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பும் இதே போன்ற ஒன்றைப் பரிந்துரைக்கிறது.
தனது கணவர் வலுக்கட்டாயமாக 'இயற்கைக்கு மாறான' உடலுறவு கொண்டதாக ஒரு பெண் குற்றம் சாட்டியிருந்தார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377இன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் கோரினார்.
மனைவியுடன் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளை குற்றமாகக் கருத முடியாது என்று கூறி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
இது மட்டுமின்றி, 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடனான பாலியல் உறவை பாலியல் வல்லுறவாக சட்டம் கருதாது என்பதால், இது வல்லுறவு பிரிவில் வராது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிமன்றம் எப்படி அத்தகைய தீர்ப்பை வழங்கியது?

நீதிமன்றம் இத்தகைய தீர்ப்புகளை வழங்கும் போது, சட்டம் உண்மையில் ஒரு இருட்டறையாக இருக்கிறது அல்லது குறிப்பிட்ட சில விஷயங்களில் அது பிடிவாதமாக இருக்கிறது என்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுமா?
மனைவியுடன் உடலுறவு, அது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது சரியே என்றும், அதைக் குற்றமாக வகைப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் எவ்வாறு கூறுகிறது? அப்படியென்றால் பாலியல் வல்லுறவுக்காக கணவர் மீது வழக்கு தொடர முடியாதா? என்ற கேள்வி எழும், ஆனால் நீதிமன்றம் அதைத் தான் கூறியது.
நீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கும் போது, அது ஒரு இயந்திர செயல்முறையாக இருப்பதில்லை. நீதிமன்றமும் சட்டத்தை விரிவுபடுத்தி சில சமயங்களில் புதிய விளக்கம் தருகிறது.
காலத்திற்கேற்ப தனது விளக்கத்தையும் அது மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான வழியைக் காட்டுவதாகக் கருதப்படும். அதனால்தான் இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்ட தீர்ப்புகளை எப்படி கொடுக்க முடிகிறது என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாக உள்ளது.
இது ஆணாதிக்கம் அல்லவா?
நமது சமூகம் அடிப்படையில் ஒரு ஆணாதிக்க சமூகம் என்றே சொல்லலாம். அதாவது ஆண்களின் நலனைப் பற்றி சிந்திக்கும் சக்தியாக அது கருதப்படுகிறது. ஆணாதிக்கத்தின் வேர்களும் மிகவும் ஆழமானவை. அவை எவ்வளவு தூரம் பரவியிருக்கின்றன என்பதை மதிப்பிடுவது கடினம்.
சமூகத்தின் கட்டமைப்புகளும் நிறுவனங்களும் ஆணாதிக்கத்தைப் பேணுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. நீதிமன்றங்களும் அத்தகைய நிறுவனங்கள் தான். எனவே, ஆணாதிக்கத்தின் தாக்கம் அவ்வப்போது அங்கே தெரியும். இங்கிருந்து கருத்துகள் உருவாகின்றன. தீர்ப்புகளாக வரும் அந்த கருத்துகளில் ஆணாதிக்கத்தின் தாக்கம் இருக்கும்.
பல நேரங்களில் நீதி ஆணின் பக்கத்தில் நிற்பதைக் காணலாம். அதன் தாக்கத்தை இந்த தீர்ப்பிலும் தெளிவாகக் காணலாம். கணவர் என்பவர் மனைவியின் உரிமையாளர் என்று நீதிமன்றம் கருதுகிறது. அதாவது மனைவியாக இருக்கும் பெண் ஆணான கணவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறாள். மனைவியின் உடல் மற்றும் மனம் மீது கணவனுக்கு முழு அதிகாரம் உள்ளது.
எனவே, மனைவியுடன் எப்போது வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம். இப்போது எழும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், பெண்ணுக்கென சுதந்திரமான இருப்பு இருக்கிறதா இல்லையா?
இந்தத் தீர்ப்பு, அந்த பெண்ணிடம் அவளது கணவன் செய்த செயல்களுக்கு உரிய பதில் என்ன என்பதைக் கூறாமல், பல கேள்விகளை எழுப்புகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஒரு பெண்ணுக்கு சுதந்திரமான இருப்பு இருக்கிறதா இல்லையா?
இத்தகைய தீர்ப்புகள் பெண்களின் சுதந்திரமான இருப்பையும் ஆளுமையையும் மறுக்கின்றன. பெண் முதலில் ஒரு மனித உயிர். அனைத்து மனிதர்களுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது. ஒரு ஒரு சுயாதீனமான வாழ்வும் இருப்பும் உள்ளது.
திருமணமானதால் மட்டும் ஒரு பெண்ணின் சுதந்திர இருப்பு முடிந்துவிடாது, அதே சமயத்தில் அந்த இருப்புக்கு வேறு எவரும் உரிமையாளராக மாறவும் முடியாது.
இருப்பினும், நம் சமூகம் இதற்கு நேர்மாறாக நம்புகிறது. ஒரு திருமணமான பெண் தன் கணவனைச் சார்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஆதிக்கம் செலுத்துகிறது. கணவனைத் தவிர்த்து அவளுக்கு வாழ்க்கையில் வேறு ஒன்றும் இல்லை.
கணவன் எழுந்திரு என்று சொன்னால், அவள் எழுந்திருக்க வேண்டும், அவன் உட்காரு என்று சொன்னால், அவள் உட்கார வேண்டும். அதாவது அவள் பெண்ணாக இருக்கக் கூடாது, வாய் மூடிய பொம்மையாக இருக்க வேண்டும்.
அந்த பொம்மையின் சாவி வேறு ஒருவருடைய கைகளில் இருக்கும். கணவன் தன் உடலோடு எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். அவர் செய்வது எல்லாம் நியாயமானவை தான். அதற்கு அவர் தகுதியானவரும் கூட.
அத்தகைய எண்ணங்களை ஏற்றுக்கொள்வது, ஓர் ஆணுக்கு தன் மனைவியுடன் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற உறுதியை அளிக்கிறது. இந்த எண்ணங்கள் அவனை அச்சமற்றவனாகவும், சுயநலவாதியாகவும் ஆக்குகின்றன.

பட மூலாதாரம், SCIENCE PHOTO LIBRARY
வன்முறையால் சூழப்பட்ட வாழ்க்கை
இந்த விஷயங்கள் எதேச்சையாக நடக்கின்றன என்பதல்ல. கணவன் என்னும் மனிதன் என்ன செய்கிறான் என்பதை ஒரு கணக்கெடுப்பு மூலம் காணலாம்.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (NFHS-5), திருமணமான பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் (29.3 சதவீதம்) தங்கள் கணவரிடமிருந்து சில வகையான வன்முறைகளை எதிர்கொள்கின்றனர் என்று கூறுகிறது.
இந்த வன்முறை உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் இருக்கிறது. நாம் வாழும் சமூகச் சூழலில் ஒரு பெண் தன் கணவனின் வன்முறையைக் குறித்து புகாரளிக்க எளிதில் முன்வருவதில்லை. அதிலும் பாலியல் வன்முறை குறித்து புகாரளிப்பது இன்னும் கடினமானது.
எனவே இந்த மூன்றில் ஒரு பங்கு என்பதைத் தாண்டி எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இது மட்டுமின்றி, எந்த வகையான பாலியல் வன்முறையில் கணவர் ஈடுபடுவார் என்பதை எளிதில் யூகிக்க முடியும்.
பெண் - மனைவி வேறுபாடு என்ன?
மனைவிக்கு எதிரான வன்கொடுமை குற்றமில்லையென்றால், அதையே ஒரு ஆண் இன்னொரு பெண்ணுக்கு செய்தால், அது கடுமையான குற்றமாகும். சட்டமும் அதை அவ்வாறே கருதும். அப்போது அவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
ஆனால் இது என்ன விசித்திரம் என்று பாருங்கள். பாலியல் வன்கொடுமை செய்த பிறகும் கணவன் - மனைவி உறவில் உள்ள இந்த சுதந்திரம் கணவனுக்கு தான் கிடைத்தது. கணவன், மனைவி உடலின் ஆட்சியாளராக கருதப்படுகிறார்.
கட்டாய உடலுறவு பாலியல் வல்லுறவாகக் கருதப்படுகிறது. பெண் மனைவியாக இருந்தாலும் சரி, வேறு எந்தப் பெண்ணாக இருந்தாலும் சரி, அது வல்லுறவாகவே கருதப்பட வேண்டும். ஆனால் சட்டத்தின் பார்வையில் அவ்வாறு இல்லை.
நீதிமன்றமும் அவ்வாறு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறது. புதிய விளக்கம் எதுவும் அளிக்க அது தயாராக இல்லை. பாலியல் வற்புறுத்தல் குற்றத்திலிருந்து கணவர்களுக்கு ஏன் விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் கேள்வி. கொலைக் குற்றத்திற்கு அத்தகைய விலக்கு இல்லையா?
இந்தச் சமுதாயம் ஆணாதிக்க சமுதாயமாக இருப்பதால் தான் கணவனுக்கு இந்த விலக்கு கிடைத்திருக்கிறது. அவர் மனைவியை தனக்குக் கீழ்ப்படியக் கூடிய ஒருவராகக் கருதுகிறார். பெண்களின் இருப்பை மறுக்கிறார். எனவே மனைவி என்பவள் கணவனின் சொத்து அல்ல என்பதை நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது.

பெண்ணின் சம்மதத்திற்கு மதிப்பு உள்ளதா, இல்லையா?
சம்மதம் என்பதும் ஒரு விஷயம். உறவுகளில் ஒரு சுதந்திரம் இருக்க வேண்டுமானால், அது விருப்பத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதாவது 'இல்லை' என்பதை 'இல்லை' என்று புரிந்து கொள்ள வேண்டும். 'இல்லை' என்பதை 'இல்லை' என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். 'இல்லை' என்பதை மதிக்க வேண்டும்.
சம்மதம் என்பது கணவன்- மனைவி உறவின் அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கும் போது மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும்.
எந்தவொரு வகையிலும், எந்த சூழ்நிலையிலும் ஓர் உடலுறவு என்பது இந்த சம்மதத்தின் அடித்தளத்தை மீறுகிறது என்றால், அது பெண்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் செயலாகும். இது சுதந்திரமான உறவுக்கு எதிரானது. 21ஆம் நூற்றாண்டில் ஒரு சிறந்த தாம்பத்திய வாழ்வுக்கு, கணவன் - மனைவி உறவுகள் ஜனநாயகமாக இருப்பது மிகவும் முக்கியம்.
இந்த அளவில் பார்க்கும்போது மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை. இந்த முடிவு பெண்களின் கண்ணியத்திற்கு எதிரானது. அதுவும் மனித உரிமைகள் தரத்திற்கும் இது ஏற்றதாக இல்லை. திருமண வாழ்க்கையில் வல்லுறவு நிகழ்கிறது என்பதை மறுப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.
இந்த வழக்கே இதை நிரூபிக்கிறது. திருமணத்தின் புனிதம் என்ற பெயரில் இந்த ‘வல்லுறவில்’ இருந்து இன்னும் எவ்வளவு காலம் ஒளிந்து கொண்டிருப்போம்? இந்த ‘வல்லுறவு’ தொடர்ந்து நடந்தால், திருமணம் எப்படி ஒரு புனிதமான உறவாக இருக்கும்?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












