படுக்கையில் பாம்பு கடித்து இளைஞர் பலியானதாக வைரலான வீடியோ - அதிர வைக்கும் உண்மை

உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் உயிரிழந்தது எப்படி?

பட மூலாதாரம், Shiv Prakash

படக்குறிப்பு, அமித்தின் உடலுக்கு அடியில் இருந்து பாம்பு மீட்கப்பட்டது.
    • எழுதியவர், ஷெபாஸ் அன்வர்
    • பதவி, பிபிசி இந்திக்காக

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அமித் காஷ்யப் என்ற நபரின் மரணம் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.

ஆரம்பத்தில் அந்த நபர் பாம்பு கடித்ததால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. அப்போது இந்த மரண சம்பவத்தில் ஒரு புதிய திருப்பம் வந்தது.

இந்த சம்பவத்தில் அமித்தின் மனைவி ரவிதா(25) மற்றும் அவரது காதலர் என்று கூறப்படும் அமர்தீப்(20) ஆகியோர் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.

அமித் காஷ்யப் - ரவிதா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

போலீசார் என்ன சொன்னார்கள் ?

உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் உயிரிழந்தது எப்படி?

பட மூலாதாரம், SHAHBAZANWAR

படக்குறிப்பு, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்தக் கொலையை பாம்பு கடித்ததால் ஏற்பட்ட மரணம் போலக் காட்ட, அமித்தின் உடலுக்கு அடியில் ஒரு உயிருள்ள பாம்பை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வைத்ததாக போலீசார் கூறுகின்றனர்.

"இந்த சம்பவம் ஏப்ரல் 12 ஆம் தேதி நடந்தது. உடலின் பிரேத பரிசோதனை ஏப்ரல் 13 ஆம் தேதி செய்யப்பட்டது. இந்த வழக்கில், இறந்தவரின் மூத்த சகோதரர் மோனு காஷ்யப்பின் புகாரின் பேரில் ரவிதா மற்றும் அவரது காதலர் அமர்தீப் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார் மீரட் துணை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் குமார் மிஸ்ரா

"பாம்பு கடித்து அமித் காஷ்யப் இறந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத் திணறல் காரணமாக மரணம் நிகழ்ந்தது தெரியவந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களை கடுமையாக விசாரித்தபோது, ​அவர்கள் முதலில் அமித்தைக் கொன்று விபத்து போல தோற்றமளிக்க அவரது உடலின் அருகே ஒரு பாம்பை விட்டுச் சென்றது தெரியவந்தது. உடலின் அடிப்பகுதியிலிருந்து பாம்பு மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அமர்தீப் வீடு, அமித்தின் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது" என்று அவர் கூறினார்.

இறந்த அமித்தும் குற்றம் சாட்டப்பட்ட அமர்தீப்பும் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வந்தனர். அவர் டைல்ஸ் பதிக்கும் வேலைகளைச் செய்து வந்தார். ரவிதாவுக்கு, அமர்தீப்புக்கும் இடையே ஒரு வருடமாக பழக்க வழக்கம் இருந்துள்ளது.

அமித்தின் மனைவி ரவிதாவிடம் சில ஊடகங்கள் பேசின."என் கணவர் என்னுடன் சண்டையிடுவார். அவர் என்னை துஷ்பிரயோகம் செய்வார். ஒரு வருடத்திற்கு முன்பு அமர்தீப் உடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நானும் அமர்தீப்பும் அமித்தைக் கொல்லத் திட்டமிட்டோம்" என்று ரவிதா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

"விசாரணையின் போது, ​​ரவிதா தனது காதலனுடன் சேர்ந்து ஏப்ரல் 12-ஆம் தேதி இரவு இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறினார். ரவிதா அமித்தின் கைகளை பிடித்துக்கொள்ள, அமர்தீப் அவரின் கழுத்தை நெரித்து கொன்றார். பயணத்தின் காரணமாக அமித் சோர்வாக இருந்ததால் அவரால் தடுக்க முடியவில்லை. அவரது உடலில் காயங்கள் இருந்தன'' என்று பஹ்சுமா காவல் நிலைய ஆய்வாளர் இந்து குமாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

 உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் உயிரிழந்தது எப்படி?

பட மூலாதாரம், ShahbazAnwar

படக்குறிப்பு, அமித்தின் தந்தை விஜய்பால் காஷ்யப்

அமித்தை பாம்பு கடித்ததா ?

அமித்தின் உடலின் கீழ் சுமார் ஒன்றரை மீட்டர் நீளமுள்ள ஒரு பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது.

அமித்தின் குடும்பத்தினர் அமித்தை பாம்பு கடிக்கவில்லை என்று கூறுகின்றனர். அதே நேரத்தில் பஹ்சுமா காவல் நிலைய ஆய்வாளர் இந்து குமாரி,"அமித்தை பலமுறை பாம்பு கடித்துள்ளது. இது குறித்து மருத்துவர்களிடமும் பேசினோம். மரணத்தால் உடலில் இரத்த ஓட்டம் நின்றுவிட்டதாகவும், அதனால் அமித்தின் உடலில் விஷம் பரவவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அமர்தீப் யாரிடமிருந்து பாம்பை வாங்கினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது."

அமர்தீப்பிற்கு பாம்பைக் கொடுத்ததாகக் கூறப்படும் நபரிடம் பிடிஐ செய்தி நிறுவனம் பேசியுள்ளது

பிடிஐயிடம் பேசிய கிருஷ்ணா என்ற நபர் , ''பாம்புகளைப் பிடித்து காட்டில் விடுவது என் வேலை. ராஜ்குமார் என்ற நபர் என்னிடம் மத சடங்குக்காக பாம்பை வாங்கி சென்றார். சடங்கு முடிந்தவுடன் திருப்பித் தருவதாகவும் சொன்னார். இதற்காக 1000 ரூபாய் கொடுத்தார்" என்கிறார்.

இறந்தவரின் தாய் சொல்வது என்ன?

 உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் உயிரிழந்தது எப்படி?

பட மூலாதாரம், ShahbazAnwar

படக்குறிப்பு, அமித் காஷ்யப்பின் தாய் முனேஷ்

அமித் காஷ்யப் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்."சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு அமித் ரவிதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அமித் தனது மனைவியை மிகவும் நேசித்தார். ஆனால் ரவிதா அவரைக் கொன்றுவிட்டார்" என்று அமித்தின் தாய் முனேஷ் தேவி பிபிசியிடம் தெரிவித்தார்.

"ஏப்ரல் 13 ஆம் தேதி காலை நான் வெளியே அமர்ந்திருந்தபோது, ​​அமித்தின் இளைய மகன் வந்து அப்பாவை பாம்பு கடித்துவிட்டதாக சொன்னான். நான் உள்ளே சென்றபோது, ​​என் மகன் அமைதியாக படுத்திருந்தான். அவன் உடலுக்கு அடியில் ஒரு உயிருடன் பாம்பு இருந்தது. அதன் வாய் அமித்தின் கைக்கு அருகில் இருந்தது. என் மகனுக்கு என்ன ஆனது என்று ரவிதாவிடம் கேட்டேன், பாம்பு கடித்து இறந்துவிட்டதாகச் சொன்னாள்" என்கிறார் முனேஷ்.

"ஏப்ரல் 12 ஆம் தேதி இரவு 9 மணிக்கு நான் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அதனால் நான் அமித்தின் அறைக்குச் சென்றேன். ஆனால் அறையின் கதவு மூடப்பட்டிருந்தது, திரைச்சீலைகளும் மூடப்பட்டிருந்தன. நான் திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். இரவு 10 மணிக்கு மீண்டும் சென்றபோது, ​​அமித் ஒரு போர்வையை மூடிக்கொண்டு தூங்குவதை கண்டேன். ஒருவேளை அந்த நேரத்தில் அவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்று அமித்தின் தாய் முனேஷ் தேவி கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்த பிறகு, அந்த நேரத்தில்தான் கொலை நடந்துள்ளது என்பது உறுதியானது என்கிறார் காவல் ஆய்வாளர் இந்து குமாரி.

"என் மகனைக் கொன்ற கொலையாளிகளுக்கு மரண தண்டனை மட்டுமே கிடைக்க வேண்டும். ரவிதா ஆரம்பத்திலிருந்தே அமித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுவதை விரும்பவில்லை. இந்த விஷயம் கிராமம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது" என்றார் அமித்தின் தந்தை விஜய்பால் காஷ்யப்.

 உத்தரப் பிரதேசத்தில் இளைஞர் உயிரிழந்தது எப்படி?

பட மூலாதாரம், ShahbazAnwar

படக்குறிப்பு, அமித் காஷ்யப் வசித்து வந்த வீடு

கிராம மக்களிடையே அதிருப்தி

அமித்தின் மரணத்தால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். "அமித் மிகவும் நல்லவர். அவர் இறந்த செய்தியை அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற ஒரு சம்பவம் எங்கள் கிராமத்தில் இதற்கு முன்பு நடந்ததில்லை" என்று கிராமத் தலைவர் தீபக் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

அமித்தின் பக்கத்து வீட்டுக்காரர் சஜித், "அமித் இறந்த செய்தி காலையில் பரவியபோது, ​​அமித்துடன் படுக்கையில் ஒரு பாம்பு படுத்திருப்பதைக் கண்டோம். குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தூக்கிலிட வேண்டும்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.