மேலாதிக்கத்தை காட்ட தனது காலணிக்கு மரியாதை செய்ய சொன்ன ஒளரங்கசீப், அவமதித்த மதுரை மன்னர் - என்ன நடந்தது?

ஒளரங்கசீப், ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர், காலணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

முகலாயப் பேரரசராக ஔரங்கசீப் இருந்த காலகட்டத்தில் தனது செருப்புகளில் ஒன்றை யானை மீது வைத்து இந்தியா முழுவதும் அனுப்பி, மற்ற அரசர்களை அதற்கு மரியாதை செய்யச் சொன்னதாகவும் அந்த காலகட்டத்தில் மதுரை நாயக்க அரசை திருச்சியிலிருந்து ஆட்சி செய்த ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் அந்த செருப்பை அவமதித்ததாகவும் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுப் பதிவு இருக்கிறது. ஆனால், மதுரையின் வரலாற்றையும் நாயக்க மன்னர்களின் வரலாற்றையும் எழுதிய சில வரலாற்றாசிரியர்கள் இதனை மறுக்கின்றனர். இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன?

'அரச கட்டளை'

மதுரை நாயக்க மன்னர்களில் புகழ்பெற்றவராக இருந்த திருமலை நாயக்கரின் பேரன் சொக்கநாத நாயக்கர். சொக்கநாத நாயக்கரின் அரசியாக இருந்தவர், பின்னாளில் புகழ்பெற்ற ராணி மங்கம்மாள்.

இந்தத் தம்பதியின் மகன்தான் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் (இவர் சொக்கநாத நாயக்கரின் மகன் என்றாலும் ராணி மங்கம்மாவின் மகன் அல்ல என்றும் சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்).

இவரது ஆட்சிக் காலம் பொதுவாக கி.பி. 1682 முதல் கி.பி. 1689 வரை இருந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் பின்னணியில்தான் தில்லி பாதுஷாவை ரங்க கிருஷ்ணர் எதிர்த்து நின்றதாக ஒரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

இந்தக் கதைக்கு முக்கியமான ஆதாரமாக இருப்பது Oriental Historical Manuscripts எனப்படும் தொகுப்பு. இந்தியாவின் முதல் சர்வேயர் ஜெனரலாக இருந்த காலின் மெக்கன்ஸீ (1815–1821), இந்தியா முழுவதும் மன்னர்கள் காலத்தைச் சேர்ந்த ஓலைச்சுவடிகள், செப்புப் பட்டயங்கள், கடிதங்கள் ஆகியவற்றைச் சேகரித்து வைத்திருந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு, அந்த ஆவணங்களை சென்னையைச் சேர்ந்த பாதிரியாரான வில்லியம் டெய்லர் என்பவர் தொகுத்து, Oriental Historical Manuscripts என்ற பெயரில் இரண்டு தொகுப்புகளாக 1835ல் பதிப்பித்தார். இந்தத் தொகுப்பின் இரண்டாவது பாகத்தில் மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சியின் போது நடந்ததாகக் கூறப்படும் பல முக்கிய நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளன.

அதில் ஒரு நிகழ்வுதான் ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கரையும் ஔரங்கசீபையும் தொடர்புபடுத்தும் நிகழ்வு. இந்தத் தொகுப்பில் இந்தச் சம்பவம் பின்வருமாறு விவரிக்கப்படுகிறது.

பாதுஷாவின் (அந்த காலகட்டத்தில் தில்லி பாதுஷாவாக இருந்தவர் ஔரங்கசீப்) ஒரு செருப்பை யானை மீது உள்ள அம்பாரியில் வைத்துவிடுவார்கள். இந்தச் செருப்பு Farmana, அதாவது 'அரச கட்டளை' என அழைக்கப்படும். செருப்பைச் சுமந்துவரும் இந்த யானையுடன் இரண்டு தளபதிகள், சுமார் நாற்பதாயிரம் காலாட்படையினர், 12 ஆயிரம் குதிரை வீரர்களைக் கொண்ட பிரமாண்டமான படையும் செல்லும்.

அந்தச் செருப்பை இருவர் உயர்ரக விசிறியால் விசிறிவிடுவார்கள். அதனுடன் ஆலவட்டங்கள், குடைகள், மேளங்கள் என அந்த ஊர்வலம் மிக பிரம்மாண்டமாக இருக்கும். இந்த ஊர்வலம், பேரரசின் ஒவ்வொரு நாட்டிற்கும் செல்லும். ஒவ்வொரு நாட்டின் எல்லைக்குள் சென்று முகாமிட்டதும் அந்த நாட்டின் மன்னனுக்கு 'ஃபர்மானா' வந்திருப்பது குறித்து தகவல் அனுப்பப்படும். அந்த நாட்டின் அரசன் தனது படை பரிவாரங்களுடன் வந்து, 'ஃபர்மானா'வை தனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று, தகுந்த மரியாதையுடன் தனது சிம்மாசனத்தில் வைக்க வேண்டும். இதற்குப் பிறகு, பெரிய அளவில் பரிசுப் பொருட்களை அந்தத் தளபதிகளுக்கு தந்து வழியனுப்பிவைக்க வேண்டும்.

ஒளரங்கசீப், ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர், காலணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்

ஆனால், பாண்டிய நாடு வெகு தூரத்தில் இருந்ததால் 'ஃபர்மானா' அதுவரை அங்கே வந்ததில்லை. ஆனால், ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் அரசராக இருக்கும் போது இந்த ஊர்வலம் தென்நாட்டிற்கும் வந்தது. அந்த சமயத்தில் ரங்க கிருஷ்ணர் திருச்சியில் இருந்தார். திருச்சிக்கு சற்று தூரம் இருக்கும்போதே, 'ஃபர்மானா' வந்திருக்கும் தகவல், அரசருக்கு இரண்டு வீரர்கள் மூலம் சொல்லி அனுப்பப்பட்டது.

அந்தத் தருணத்தில் ரங்க கிருஷ்ணர் மிகவும் இளையவராக இருந்ததால், தன்னுடன் இருந்த பிரதானிகளிடம் 'ஃபர்மானா' குறித்துக் கேட்டார். அவர்களும் அதைப் பற்றி விளக்கினார்கள். இதைக் கேட்ட அரசர் ஆத்திரமடைந்தார். இருந்தாலும் தகவல் கொண்டுவந்த வீரர்களுக்கு நல்ல பரிசுகளை அளித்தார். பிறகு தனது தளகர்த்தர்களை அழைத்து, "எங்களுடைய அரசருக்கு உடல்நிலை சரியில்லை. கொள்ளிடக்கரையில் உள்ள சமயபுரத்திற்கு ஃபர்மானாவை நீங்கள் கொண்டுவந்தால், எங்கள் அரசர் உங்களைச் சந்திப்பார்" என்று 'ஃபர்மானா'வுடன் வந்த தளபதிகளிடம் சொல்லச் சொன்னார்.

இதையடுத்து ஃபர்மானா, சமயபுரத்திற்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால், அங்கே அரசர் இல்லை. பாதுஷாவின் வீரர்கள் கோபமடைந்த போது, "நீங்கள் திருச்சிக்கு வந்தால் சந்திப்பதாக அரசர் சொல்கிறார்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. பாதுஷாவின் வீரர்களுக்கு கோபம் வந்தாலும், அவர்கள் திருச்சியைச் சென்றடைந்தனர். அங்கேயும் அவர்களை அரசர் வந்து வரவேற்கவில்லை. இதையடுத்து கோபமடைந்த பாதுஷாவின் வீரர்களை, நாயக்கரின் தளகர்த்தர்கள் சாந்தப்படுத்தினர்.

"அவருக்கு மிகவும் உடல் நலமில்லாமல் இருப்பதால் பல்லக்கில் ஏறிக்கூட, கோட்டை வாயில்வரைதான் வர முடியும். நீங்கள் கோட்டைக்குள் வாருங்கள்" என்று சொல்லப்பட்டது. இதையடுத்து, ஃபர்மானாவைச் சுமந்து வந்த யானையும் உடன்வந்த தளபதிகளும் சில முக்கியமானவர்களும் கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கேயும் மன்னர் வந்து வரவேற்கவில்லை. "உடல் நலமில்லாத காரணத்தால் அரசரால் பல்லக்கிலேயே ஏற முடியவில்லை. மன்னரின் அரண்மனைக்கு வாருங்கள்" எனச் சொல்லப்பட்டது. பாதுஷாவின் வீரர்களும் கோபத்துடன் அரண்மனை வாயிலுக்கு வந்தனர். அங்கேயும் மன்னர் வரவில்லை. இதையடுத்து 'ஃபர்மானா'வை யானையிலிருந்து இறக்கி, அரசரின் தர்பாருக்கே கொண்டுசென்றனர்.

அங்கே நண்பர்களும் அமைச்சர்களும் சூழ அரியணையில் அமர்ந்திருந்தார் ரங்க கிருஷ்ணர். 'ஃபர்மானா'வைக் கொண்டு வந்தவர்களுக்கும் கடும் கோபம் ஏற்பட்டது. 'ஃபர்மானா'வையும் மதிக்கவில்லை, தங்களையும் மதிக்கவில்லை என்று ஆத்திரமடைந்தனர். கூடியிருந்தவர்களை விலக்கிவிட்டு, மன்னரை நெருங்கி 'ஃபர்மானா'வை, அதாவது பாதுஷாவின் செருப்பை எடுத்து ரங்க கிருஷ்ணரிடம் கொடுத்தனர்.

அவர் கையில் வாங்காமல் கீழே போடும்படி சொன்னார். அவர்கள் திரும்பவும் கையில் கொடுத்தனர். இதையடுத்து சவுக்கையும் பிரம்பையும் எடுத்து வரும்படி சத்தம்போட்டுச் சொன்னார் மன்னர்.

இதனால் பயந்துபோன வீரர்கள் செருப்பை கீழே போட்டனர். இதையடுத்து, அந்தச் செருப்பை தனது ஒரு காலில் அணிந்த ரங்க கிருஷ்ணர், பாதுஷாவின் வீரர்களைப் பார்த்து, "இன்னொரு செருப்பு எங்கே? செருப்பை அனுப்பும்போது இரு செருப்புகளை அனுப்ப வேண்டுமென பாதுஷாவுக்குத் தெரியாதா? உடனே போய் இன்னொரு செருப்பை வாங்கி வாருங்கள்" என்று சத்தம் போட்டார். பிறகு, அவர்களை சவுக்கால் கடுமையாக அடித்து விரட்டினார்.

அவமானத்துடனும் கோபத்துடனும் கோட்டைக்கு வெளியில் சென்ற அவர்கள் தங்கள் படையைத் திரட்டி, கோட்டையைத் தாக்க ஆயத்தமானார்கள். இதைக் கேட்டதும் பெரும் எண்ணிக்கையிலான வீரர்களை அனுப்பிய ரங்க கிருஷ்ணர், அந்த படையைத் தோற்கடித்தார். எஞ்சியிருந்த வீரர்கள் பாதுஷாவிடம் சென்று இந்தத் தகவலைத் தெரிவித்தனர். இதைக் கேட்ட பாதுஷா சிறிது நேரம் யோசித்தார். அதற்குப் பிறகு, இதுபோல 'ஃபர்மானா' அனுப்புவதையே அவர் நிறுத்திவிட்டார்.

ஒளரங்கசீப், ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர், காலணி
படக்குறிப்பு, மதுரை நாயக்கர்களின் வரலாற்றை History of the Nayaks of Madura என்ற பெயரில் எழுதியிருந்தார் ஆர். சத்தியநாத அய்யர்

'இதுபோன்ற வேலையை ஔரங்கசீப் செய்திருக்க வாய்ப்பில்லை'

இந்தக் கதை கேட்பதற்கு வெகு சுவாரஸ்யமாக இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வு நடந்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை என்கிறார் மதுரை நாயக்கர்களின் வரலாற்றை History of the Nayaks of Madura என்ற பெயரில் எழுதிய ஆர். சத்தியநாத அய்யர். பெர்ஷிய மன்னர்கள், தங்கள் தளபதிகளை சிற்றரசர்களிடம் அனுப்பி, கீழ்படிதலுக்கு அடையாளமாக சிறிது 'தண்ணீரையும் மண்ணையும்' பெற்றுவரச் செய்யும் வழக்கம் இருந்ததைச் சுட்டிக்காட்டும் அவர், முகலாய மன்னர்களிடமும் இதுபோன்ற வழக்கம் இருந்திருக்கலாம் என்கிறார். ஆனால், ரங்க கிருஷ்ண முத்து வீரப்பரின் ஆட்சிக் காலத்தில் இதுபோல ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் அவர். அதற்கு சில காரணங்களை அவர் முன்வைக்கிறார்.

அதாவது ரங்க கிருஷ்ணர், நாயக்க மன்னராக இருந்த காலகட்டத்தில் பாதுஷாவாக இருந்தவர் ஔரங்கசீப். அந்த காலகட்டத்தில் ஔரங்கசீப் பீஜப்பூர், கோல்கொண்டா நாடுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பீஜப்பூர் 1686லும் கோல்கொண்டா 1687லும் கட்டுப்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, மராத்தாக்களின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார் ஔரங்கசீப். 1689ஆம் ஆண்டு ஜனவரியில் மராத்தா மன்னரான சம்பாஜி பிடிக்கப்பட்டார். அவர், மார்ச் மாதவாக்கில்தான் கொல்லப்பட்டார்.

மராத்தா போரும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அக்டோபரில்தான் ராய்கட் வீழ்ந்தது. ஆகவே, 1689ஆம் ஆண்டின் இறுதிவரை ஔரங்கசீப் இந்த விவகாரங்களில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். ஆகவே, நிலைமை இப்படியிருக்கும்போது இதுபோன்ற வேலையை ஔரங்கசீப் செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிடும் சத்தியநாத அய்யர், இது போன்ற நடைமுறைகளில் முகலாயப் பேரரசருக்கு விருப்பம் இருந்ததாகவும் தெரியவில்லை எனக் குறிப்பிடுகிறார்.

வெனிஸ் நகரைச் சேர்ந்த யாத்ரீகரான நிக்கோலா மனுச்சி (Niccolao Manucci) இந்த காலகட்டத்தில் இந்தியாவில்தான் இருந்தார். அவர் முகலாய அரசர்களான ஷாஜஹான், ஔரங்கசீப் காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை Storia do Mogor என்ற பெயரில் விரிவாகத் தொகுத்திருக்கிறார். "மனுச்சிக்கு இதுபோன்ற சம்பவங்களைப் பதிவுசெய்வதில் ஆர்வம் அதிகம். ஆனால், அவரும் இப்படி எந்த நிகழ்வையும் பதிவுசெய்யவில்லை" என்று சுட்டிக்காட்டுகிறார் ஆர். சத்தியநாத அய்யர்.

ஒளரங்கசீப், ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர், காலணி
படக்குறிப்பு, மதுரை மாவட்டத்தின் வரலாற்றை The Madura Country: A Manual (கி.பி. 1868) என்ற பெயரில் விரிவாகத் தொகுத்தார் ஜே.எச். நெல்சன்

இதேபோல, மதுரை மாவட்டத்தின் வரலாற்றை The Madura Country: A Manual (கி.பி. 1868) என்ற பெயரில் விரிவாகத் தொகுத்த ஜே.எச். நெல்சனும் இந்தக் கதை உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்கிறார். அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த ஏசு சபையினரின் கடிதங்களில் இதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை என்பதைக் குறிப்பிடும் நெல்சன், வேறொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.

அதாவது, அந்தக் காலகட்டத்தில் முகலாயப் பேரரசில் தக்காணப் பகுதியின் ஃபௌஜ்தாராக (ராணுவத் தளபதியைப் போன்ற பதவி) இருந்த சுல்ஃபிகர் கான் 1693க்கு சற்று முன்பாக, தஞ்சாவூரையும் திருச்சியையும் ஆண்ட மன்னர்களிடமிருந்து வரி வசூலித்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கும் நிலையில், ரங்க கிருஷ்ணர் அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக இப்படி ஒரு செயலில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என்கிறார் ஜே.எச். நெல்சன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு