You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜோ பைடன் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் மோதி அமெரிக்கா செல்வதன் முக்கியத்துவம் என்ன?
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி ஹிந்தி
அமெரிக்கா தனது புதிய அதிபரை அறிவிப்பதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோதி மூன்று நாள் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய நிர்வாகம் கமலா ஹாரிஸ் அல்லது டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமையும். பிரதமர் மோதியின் இந்தப் பயணத்தின் போது பல்வேறு முக்கிய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
திங்களன்று ஐ.நா பொதுச் சபையில் 'எதிர்காலத்திற்கான உச்சிமாநாடு' (Summit of the Future) என்னும் நிகழ்வில் பிரதமர் மோதி உரையாற்றுகிறார்.
இந்த நிகழ்வில் பல உலகத் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். சமத்துவமின்மை, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம் போன்ற முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதே உச்சிமாநாட்டின் நோக்கம்.
அதற்கு முன்னதாக, சனிக்கிழமையன்று, அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான வில்மிங்டனில் நடைபெறும் வருடாந்திர குவாட் உச்சிமாநாட்டில் பிரதமர் மோதி கலந்து கொண்டார். மேலும் பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்துகிறார்.
இதற்கிடையில், தொழில்துறை தலைவர்களைச் சந்திக்கும் மோதி, ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே உரையாற்றுகிறார்.
பைடனை தாண்டிய இந்தியா-அமெரிக்க உறவுகள்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2006ஆம் ஆண்டில், மூத்த செனட்டராக இருந்தபோது, மூத்த இந்திய பத்திரிகையாளர் அஜீஸ் ஹனிஃபாவுக்கு அளித்த பேட்டியில், "2020ஆம் ஆண்டில், அமெரிக்காவும் இந்தியாவும் உலகின் மிக நெருக்கமான இரண்டு நாடுகளாக இருக்கும்” என்று கணித்திருந்தார்.
இந்தியா – அமெரிக்கா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை அமெரிக்க செனட் பரிசீலிப்பது பற்றிய விவாதங்கள் நடக்கையில் இந்த நேர்காணல் எடுக்கப்பட்டது.
நேர்காணலின் போது, 21ஆம் நூற்றாண்டில் தூண்களாகத் திகழும் மூன்று அல்லது நான்கு நாடுகள் மீது உலகளாவிய பாதுகாப்பு கட்டமைக்கப்படும். அதில் அமெரிக்காவும் இந்தியாவும் அடக்கம் என்றும் பைடன் நம்பினார்.
"கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதியில், டிரம்ப் ஆட்சியில் கீழ் செய்யப்பட்ட மூன்று முக்கிய மாற்றங்களை பைடன் நிர்வாகம் கடைப்பிடிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து ராணுவ இருப்பின் பயனற்ற தன்மையை அங்கீகரிப்பது, பாகிஸ்தானுடனான உறவுகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பது மற்றும் ஆசியாவில் சீனாவின் உறுதியை எதிர்கொள்வது" என்று ஆய்வாளர் சி ராஜா மோகன் குறிப்பிட்டார்.
"முதல் இரண்டு விஷயமும் அமெரிக்க மூலோபாயத்தில் இருந்து பாகிஸ்தானை விலக்குவதைக் குறிக்கின்றன. மூன்றாவது விஷயம் சீனா அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதைக் குறிக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சீனா அமெரிக்காவின் நட்பு நாடாகக் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது."
ஜோ பைடன் அமெரிக்க-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் ஆர்வம் கொண்டவர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"பைடன் இந்தியா உடனான உறவை, 21ஆம் நூற்றாண்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க கூட்டாண்மைகளில் ஒன்று எனக் குறிப்பிட்டார். இந்த உறவை வலுப்படுத்துவதில் உண்மையான ஆர்வம் கொண்டவர் பைடன்” என்று வாஷிங்டன் டிசியின் வில்சன் மையத்தில் உள்ள தெற்காசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறினார்.
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தகம் 200 பில்லியன் டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளிகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. சீனாவிற்கு மாற்றாக உலகளாவிய உற்பத்தி மையமாக உருவெடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே இந்தச் சமயத்தில் இந்தியாவுக்கு அமெரிக்காவின் ஆதரவு முக்கியமாகக் கருதப்படுகிறது.
ஜனவரி 2023இல் `சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முன்முயற்சி’ (Initiative on Critical and Emerging Technologies) மேற்கொள்ளப்பட்டது.
"இருநாடுகளின் அரசுகள், வணிகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையில் மூலோபாய தொழில்நுட்பக் கூட்டாண்மை மற்றும் பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் இது முக்கியமான முன்னெடுப்பாகப் பார்க்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள அரசியல் விமர்சகர்கள், பிரதமர் மோதியின் ஆட்சியின் கீழ் இந்தியாவின் 'ஜனநாயகம் வீழ்ச்சியடைவதாக’ கேள்வியெழுப்பிய அதேவேளையில், இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவில் இருதரப்பு ஒப்பந்தமும் உள்ளது.
இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் எழுச்சியை சமநிலைப்படுத்த இந்தியா முக்கியம் என்ற கோணத்தில் அமெரிக்கா இதை அணுகுகிறது.
இதை இந்தியா வேறு கோணத்தில் பார்க்கிறது.
"சர்வதேச அரங்கில் இருப்பது மோதிக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் நல்லது. பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் மோதி கவனம் செலுத்துவார்" என்கிறார் ஸ்டீவ் எச். ஹான்கே.
இவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு பொருளாதாரப் பேராசிரியர் மற்றும் அதிபர் ரீகனின் பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினர்.
வரலாற்று ரீதியான உறவுகள்
பைடனின் அதிபர் காலகட்டம் நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ளது. இந்தச் சமயத்தில் மோதி உடனான அவரது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
அமெரிக்கா உடனான இந்தியாவின் மிக முக்கியமான ஒப்பந்தமான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் அக்டோபர் 2008இல் அதிபர் புஷ் ஆட்சியில் இருந்து வெளியேறும் சமயத்தில் கையெழுத்தானது.
இதேபோல், 2000ஆம் ஆண்டில், அதிபர் பில் கிளிண்டன், தனது இரண்டாவது பதவிக் காலத்தின்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திய இந்திய பயணத்தை மேற்கொண்டார். 1998ஆம் ஆண்டு இந்தியாவின் அணுசக்தி சோதனைகளைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழலை இந்தப் பயணம் முடிவுக்குக் கொண்டு வந்ததால், அது "முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய பயணம்" எனப் பாராட்டப்பட்டது.
ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டில் தெற்காசிய நிபுணர் அபர்ணா பாண்டே, இந்த இருதரப்பு உறவு தேர்தல் முடிவுகளைச் சார்ந்தது அல்ல என்று குறிப்பிடுகிறார்.
"ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இந்தியாவை ஒரு முக்கியமான பங்காளியாகவும் நட்பு நாடாகவும் பார்க்கிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.
குவாட் உச்சி மாநாடு
பைடன் அதிபராக பங்கேற்கும் கடைசி குவாட் உச்சிமாநாட்டில் மோதியின் பங்கேற்பு முக்கியமானது. குவாட் உச்சிமாநாடு (Quad summit) 2004இல் நிறுவப்பட்டது. டிரம்ப் மற்றும் பைடன் அதை உச்சிமாநாடாக உயர்த்தும் வரை குவாட் கவனம் பெறவில்லை.
இது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒத்துழைப்பை உள்ளடக்கியது. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை சமநிலைப்படுத்துவதற்கான ஒரு தளமாக இது கருதப்படுகிறது.
"குவாட் ஒரு ராணுவக் கூட்டமைப்பாக உருவாக்கப்படாமல், இந்தோ-பசிபிக்கில் பொது பொருட்களை (Public Goods) வழங்கும் அமைப்பாக உருவாக்க வேண்டும் என்ற இந்திய கண்ணோட்டத்துடன் வழிநடத்த பைடன் முடிவு செய்தார்" என்று ஆய்வாளர் சி ராஜா மோகன் குறிப்பிட்டுள்ளார்.
"குவாட் கூட்டமைப்பு கடல்சார் கள விழிப்புணர்வு, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், இணையப் பாதுகாப்பு, தொலைத்தொடர்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பிராந்திய ஒத்துழைப்பின் நிலையான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது."
உலகளாவிய வர்த்தகம் மற்றும் பாதுகாப்பிற்கு இன்றியமையாத பகுதியாகத் திகழும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதில் இந்த குவாட் உச்சிமாநாடு கவனம் செலுத்தும். அதேநேரம், ரஷ்யா-யுக்ரேன் போர் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது இன்னும் உறுதிபடுத்தபடவில்லை.
"குவாட் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை; இது சீனாவை கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க முயற்சிகளின் ஓர் அம்சம்." என்று பேராசிரியர் ஹான்கே கூறுகிறார்.
குவாட் ஒரு பாதுகாப்பு சார்ந்த கூட்டமைப்பு அல்ல என்றாலும், அதன் மூன்று உறுப்பு நாடுகள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளனர் என்று அபர்ணா பாண்டே சுட்டிக்காட்டுகிறார்.
"சீனாவின் விரிவாக்கவாதத்தை முறியடிக்க வடிவமைக்கப்பட்ட பல பிராந்திய சிறு முன்னெடுப்புகளில் குவாட் கூட்டமைப்பும் ஒன்று" என்கிறார் அவர்.
மைக்கேல் குகல்மேனின் கூற்றுப்படி, குவாட் ஆரம்பத்தில் கவனம் பெறுவதில் சிக்கல் இருந்தபோதிலும், சீனாவுடனான நான்கு உறுப்பு நாடுகளின் உறவுகள் மோசமடைந்ததால் அது மேம்பட்டது.
"குவாட் உறுப்பு நாடுகளின் பொதுவான அனுபவம் அவர்களை ஒன்றிணைத்து, உறுதியான செயலை ஊக்குவிக்கிறது" என்று அவர் கூறுகிறார்.
"நான்கு உறுப்பு நாடுகளில் ஒவ்வொன்றும் சீனாவுக்கு எதிரான அவர்களின் உறவுகள் மிகக் குறைந்த மட்டத்திற்கு மோசமடைந்ததைக் கண்டன. மேலும் அவர்களின் ஒரே மாதிரியான அனுபவம் அவர்களை ஒன்றிணைத்து சில உறுதியான கட்டத்துக்கு முன்னேற்றியுள்ளது.”
'எதிர்காலத்திற்கான உச்சி மாநாடு'
குவாட் உச்சிமாநாட்டின்போது ஐ.நா. மீது, குறிப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மீது (UNSC) நிறைய அதிருப்தி இருக்க வாய்ப்புள்ளது. மேலும் நிரந்தர உறுப்பினர் கோரிக்கை மற்றும் ஐ.நா. சீர்த்திருத்தம் ஆகியவற்றுக்கு இந்தியா மீண்டும் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"எதிர்காலத்திற்கான ஐ.நா. உச்சி மாநாட்டில் (Summit of the Future), மோதி 'சாங் ஆஃப் சவுத் என்னும் பாடலை' (Song of the South) பாடுவார், அது சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறது" என்கிறார் ஸ்டீவ் ஹான்கே.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்தை "நீண்ட மற்றும் சிக்கலான செயல்முறை" என்று அபர்ணா பாண்டே விவரிக்கிறார், அது ஒரே இரவில் நடக்காது.
ஐ.நா போன்ற பெரிய அதிகாரத்துவ அமைப்புகள் மூலம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் உள்ள சிரமத்தை மைக்கேல் குகல்மேன் ஒப்புக்கொள்கிறார்.
"சீர்திருத்தங்கள் சவாலானவை, ஆனால் இன்றைய எதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. மற்றும் பிற நீண்டகால சர்வதேச அமைப்புகளைச் சீர்திருத்துவதற்கு உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் ஆதரவு அதிகரித்து வருகிறது" என்று அவர் கூறினார்.
அபர்ணா பாண்டே குறிப்பிடுகையில், மேற்கத்திய நாடுகள் இந்த சீர்திருத்தங்களை கொள்கையளவில் ஆதரிக்கின்றன, வீட்டோ வைத்திருக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்கள் இடையிலும் உடன்பாட்டைப் பெறுவதில்தான் உண்மையான சவால் உள்ளது. உறுதியான நடவடிக்கை எடுப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)