இஸ்ரேல் - லெபனான்: பேஜர், வாக்கி டாக்கிகள் வெடிப்பில் தொடரும் மர்மம் - விடை தெரியாத கேள்விகள்

    • எழுதியவர், டாம் பென்னட்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

லெபனானில் இரண்டு வெவ்வேறு தொடர் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்து சிதறின. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். அத்தகைய நடவடிக்கை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது என்பது பற்றிய விவரம் இன்னும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

லெபனான், ஹெஸ்பொலாவின் தகவல் தொடர்பு அமைப்புகள் மற்றும் பொதுமக்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஹெஸ்பொலா இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இஸ்ரேல் இதுகுறித்து இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

பிபிசி இந்த வழக்கை தைவானில் இருந்து ஜப்பான், ஹங்கேரி, இஸ்ரேல் மற்றும் மீண்டும் லெபனானில் இருந்து நெருக்கமாக பின்தொடர்கிறது. பேஜர்கள், வாக்கி டாக்கி சாதனங்கள் வெடித்தது தொடர்பாக நீடிக்கும் விடை தெரியாத கேள்விகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பேஜர்கள் குறிவைக்கப்பட்டது எப்படி?

இந்த சம்பவம் நடந்த பின்னர் ஆரம்பத்தில் எழுந்த சில ஊகங்களில், 'பேஜர்கள் ஒரு சிக்கலான ஹேக்கிங் செயல்பாட்டின் மூலம் குறிவைக்கப்பட்டிருக்கலாம், இதனால் அவை வெடித்துச் சிதறி இருக்கலாம்' என்றனர்.

ஆனால் அந்த ஊகம் நிபுணர்களால் நிராகரிக்கப்பட்டது.

அதிக சேதம் விளைவிப்பதற்காக, பேஜர்கள் ஹெஸ்பொலா கைகளில் சேரும் முன்பே அவற்றில் வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பேஜர்களின் உடைந்த பாகங்களில், `கோல்ட் அப்பல்லோ’ என்ற தைவானைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் லோகோவைக் காண முடிகிறது.

தைவான் தலைநகர் தைபேயின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பெரிய வணிக பூங்காவில் இந்த நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ளது. அதன் அலுவலகங்களை பிபிசி பார்வையிட்டது.

`கோல்ட் அப்பல்லோ’ நிறுவனர் சூ சிங்-குவாங் இந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்றதாக கூறினார். இந்த நடவடிக்கைக்கும் அவர்களின் வணிகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் மறுத்தார்.

"நீங்கள் லெபனானில் இருந்து வெளியான படங்களைப் பாருங்கள். வெடித்த பேஜர்களில் இது தைவானில் தயாரிக்கப்பட்டது என்பதற்கான எந்த அடையாளமும் இல்லை, நாங்கள் அந்த பேஜர்களை தயாரிக்கவில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஐரோப்பாவைச் சேர்ந்த பி.ஏ.சி என்ற நிறுவனத்துடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு பேஜர் தயாரிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டதாக சூ சிங்-குவாங் கூறினார்.

"எங்களது லோகோவை பயன்படுத்த மட்டுமே அங்கீகாரம் தந்துள்ளோம். மற்றபடி, அந்த பேஜரின் வடிமைப்பிலோ அல்லது தயாரிப்பிலோ எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று அவர் கூறினார்.

கோல்ட் அப்பல்லோ நிறுவனர் குறிப்பிட்ட பி.ஏ.சி. நிறுவனம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் செயல்படுகிறது.

பி.ஏ.சி. நிறுவனத்திலிருந்து நடந்த பணப் பரிமாற்றங்கள் "மிகவும் விசித்திரமாக இருந்தன" என்றும் மத்திய கிழக்கிலிருந்து பணம் செலுத்தப்பட்டதால் சிக்கல்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.

ஹங்கேரி நிறுவனத்திற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்டின் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பி.ஏ.சி. கன்சல்டிங் நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திற்கு பிபிசி சென்றது.

இந்த முகவரியில் 12 நிறுவனங்கள் இயங்குகின்றன. கட்டடத்தில் உள்ள எந்த நிறுவனமும் பி.ஏ.சி. நிறுவனத்தைப் பற்றி எங்களிடம் எதுவும் கூறவில்லை.

இந்த நிறுவனம் முதன்முதலில் 2022 இல் ஹங்கேரியில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அங்குள்ள அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த நிறுவனம் அங்கே உற்பத்தியில் ஈடுபடவில்லை. செயல்பாட்டு தளம் இல்லாத வர்த்தக இடைத்தரகராக மட்டுமே செயல்படுகிறது.

லிங்க்ட்இன் (LinkedIn) தளத்தில் வெளியிடப்பட்ட பி.ஏ.சி. க்கான ஒரு தகவல் குறிப்பில், எட்டு நிறுவனங்களுக்காக பணிகளை செய்வதாக கூறி, அந்நிறுவனகங்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பிரிட்டனின் சர்வதேச வளர்ச்சிக்கான DfID துறையின் பெயரும் உள்ளது.

DfID துறையின் பெயர் இருப்பது குறித்து பிபிசியிடம் பேசிய பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தது. ஆனால் ஆரம்ப உரையாடல்களின் அடிப்படையில், DfID துறைக்கும் பி.ஏ.சி. கன்சல்டிங் நிறுவனத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அது கூறியது.

பி.ஏ.சி. இன் இணையதளம் அதன் தலைமை நிர்வாகி மற்றும் நிறுவனர் - கிறிஸ்டியானா பார்சோனி-ஆர்சிடியாகோனோ என ஒருவரை குறிப்பிட்டுள்ளது.

பார்சோனி-ஆர்சிடியாகோனோவை தொடர்புகொள்ள பிபிசி பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை.

அவர் என்பிசி செய்தி ஊடகத்திடம் பேசியதாக கூறப்படுகிறது: "நான் பேஜர்களை உருவாக்கவில்லை. நான் இடைநிலை வேலைகளை மட்டுமே செய்து வருகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

பி.ஏ.சி நிறுவனத்தின் பின்னணியில் இருப்பது யார்?

பிஏசி நிறுவனம் உண்மையில் இஸ்ரேலிய உளவுத்துறையின் கீழ் இயங்குவதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

பேஜர்களை உருவாக்கும் பொறுப்பில் இருந்த இஸ்ரேலிய உளவுத்துறை செயல்பாட்டாளர்களின் அடையாளத்தை மறைக்க மேலும் இரண்டு ஷெல் நிறுவனங்கள் நிறுவப்பட்டதாக மூன்று இஸ்ரேலிய ஆதாரங்களை மேற்கோள் காட்டி அந்த செய்தி கூறுகிறது.

பிபிசியால் இந்த தகவல்களை சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை - ஆனால் பி.ஏ.சி. உடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனத்தை பல்கேரிய அதிகாரிகள் இப்போது விசாரிக்கத் தொடங்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.

லெபனானில் தொலைத்தொடர்பு சாதனங்கள் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடைய 1.6 மில்லியன் யூரோ ($1.8m; £1.3m) பணம் பல்கேரியா வழியாக ஹங்கேரிக்கு அனுப்பப்பட்டதாக பல்கேரிய ஊடகமான bTV வியாழனன்று தெரிவித்துள்ளது.

ரேடியோ சாதனங்கள் குறிவைக்கப்பட்டது எப்படி?

இரண்டாவது அலை தாக்குதல்களில் வெடித்த வாக்கி டாக்கிகள் எங்கிருந்து வந்தன என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

வெடித்து சிதறிய வாக்கி டாக்கிகளில் சில ஜப்பானிய நிறுவனமான ICOM தயாரித்த IC-V82 மாடல் என்பது மட்டும் தெரிய வந்தது.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய காவல்துறை வட்டார அதிகாரி, அந்த சாதனங்கள் ஐந்து மாதங்களுக்கு முன்பு ஹெஸ்பொலாவால் வாங்கப்பட்டவை என்றார்.

முன்னதாக, Icom இன் அமெரிக்க துணை நிறுவனத்தில் உள்ள விற்பனை நிர்வாகி அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமையிடம், லெபனானில் வெடித்த ரேடியோ சாதனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தால் தயாரிக்கப்படவில்லை. அவை போலியான தயாரிப்புகள் (knockoff product) போலத் தோன்றுவதாகக் கூறினார். ஆன்லைனில் போலி பதிப்புகளை வாங்குவது எளிது என்று கூறினார்.

ஆன்லைன் சந்தைகளில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ள Icom IC-V82s-ஐ பிபிசி சில நொடிகளில் கண்டுபிடித்தது.

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன்பு, அக்டோபர் 2014 இல், இந்த மாடலின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக ICOM ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதை இயக்கத் தேவையான பேட்டரிகளின் உற்பத்தியையும் நிறுத்திவிட்டதாகக் கூறியது.

வெளிநாட்டில் உற்பத்தியை அவுட்சோர்ஸ் செய்வதில்லை என்று நிறுவனம் கூறியது. அதன் அனைத்து தயாரிப்புகளும் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.

வெடித்த வாக்கி-டாக்கிகளின் பேட்டரியைச் சுற்றி ஏற்பட்டுள்ள சேதங்களை பார்க்கும் போது அவற்றில் வெடிமருந்து பொருத்தப்பட்டிருக்கலாம் என்று ஐகாம் இயக்குநர் யோஷிகி எனோமோயோ கூறியதாக கியோடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதனங்கள் வெடித்தது எப்படி?

சாதனங்கள் வெடிப்பதற்கு சில நொடிகளுக்கு முன்னதாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பாக்கெட்டுகளில் இருக்கும் சாதனங்களை தொடுவது வீடியோக்களில் பதிவாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் தெருக்கள், கடைகள் மற்றும் வீடுகளில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

ஐ.நா.வுக்கு லெபனான் தூதரகம் அனுப்பிய கடிதத்தின்படி, சாதனங்களுக்கு அனுப்பப்பட்ட "மின்னணு செய்திகள்" மூலம் சாதனங்கள் வெடித்தன என்று அதிகாரிகளால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை பார்த்த ராய்ட்டர்ஸ் செய்தி முகமை இதுபற்றி செய்தி வெளியிட்டது.

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி, நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி அறிக்கையில், "வெடிப்பதற்கு முன், பேஜர்களுக்கு ஹெஸ்பொலாவின் தலைமையிலிருந்து செய்திகள் வந்தன. அதன் பின்னர் சாதனங்கள் வெடித்துச் சிதறின. அந்த செய்திகள் சாதனத்தை ட்ரிகர் செய்துள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்கி டாக்கி சாதனங்களுக்கு என்ன வகையான செய்தி அனுப்பப்பட்டது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

மற்ற சாதனங்களிலும் பிரச்னை உள்ளதா?

லெபனானில் மக்கள் மத்தியில் எழும் மிகப்பெரிய கேள்வி இது தான். மற்ற சாதனங்கள், கேமராக்கள், தொலைபேசிகள் அல்லது மடிக்கணினிகளிலும் வெடிமருந்து நிரப்பப்பட்டிருக்கலாம் என்று நினைப்பது வீண் கற்பனை.

லெபனான் ராணுவம் பெய்ரூட்டின் தெருக்களில் ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும் வெடிகுண்டு செயலிழக்கும் ரோபோவைப் பயன்படுத்துகிறது.

லெபனானில் உள்ள பிபிசி குழுவினர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களின் தொலைபேசிகளையோ கேமராக்களையோ பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

"எல்லோரும் பீதியில் உள்ளனர். எங்கள் மடிக்கணினிகள், தொலைபேசிகளுக்கு அருகில் இருக்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கிறோம். எல்லா பக்கமும் ஆபத்து இருப்பது போல் தெரிகிறது, என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை" என்று கிடா என்ற பெண் பிபிசியிடம் கூறினார்.

சாதனங்கள் வெடிக்க என்ன காரணம்?

குறிப்பாக, இந்த வாரம் சாதனங்கள் தூண்டப்பட்டு வெடித்தது ஏன் என்பதற்கு பல யூகங்கள் உள்ளன.

அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு நாளுக்குப் பிறகு வடக்கு இஸ்ரேல் மீதும் அதைச் சுற்றியும் ஹெஸ்பொலா தாக்குதல்கள் மேற்கொண்டதை தொடர்ந்து, கிட்டத்தட்ட ஒரு வருடமாக எல்லை தாண்டிய பகைமை தொடர்கிறது. ஹெஸ்பொலாவுக்கு மோசமான செய்தியை அனுப்ப இஸ்ரேல் இந்தத் தருணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

அப்படி இல்லையெனில், இஸ்ரேல் இந்த நேரத்தில் அவ்வாறு செய்யும் எண்ணம் இல்லாவிட்டாலும், சதித்திட்டம் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், இஸ்ரேல் தனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம்

அமெரிக்க ஊடக நிறுவனமான ஆக்சியோஸ் கூற்றுப்படி, ஒரு மிகப்பெரிய போரின் தொடக்கமாக, ஹெஸ்பொலா அமைப்பை முற்றிலும் முடக்குவதற்கான ஒரு வழியாக பேஜர் தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம். ஆனால், ஹெஸ்பொலாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதை இஸ்ரேல் அறிந்து கொண்டதால், முன்கூட்டியே தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று அந்த நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்,எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)