இந்தியா எதிர்ப்பு நிலைப்பாடு வங்கதேசத்தில் அதிகரிக்க யார் காரணம்?

    • எழுதியவர், தன்ஹா தஸ்னீம்
    • பதவி, பிபிசி வங்க மொழி சேவை

வங்கதேச வெற்றி தினத்திற்கு வெறும் இரண்டு நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 18-ஆம் தேதி இரவு, இரண்டு முக்கிய ஊடக நிறுவனங்கள் மற்றும் சில கலாசார நிறுவனங்களின் மீது முன்னெப்போதும் இல்லாத வகையிலான கும்பல் தாக்குதலை நான் கண்டேன்.

இன்குலாம் மாஞ்ச் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் செய்தித் தொடர்பாளருமான உஸ்மான் ஹாதி கொல்லப்பட்டதையடுத்து கிளர்ந்தெழுந்த கும்பல், பிரதாம் ஆலோ மற்றும் தி டெய்லி ஸ்டார் ஆகிய இரு ஊடக நிறுவனங்களுக்கும், சாயானௌத் பவன் (Chhayanaut Bhavan) எனும் கலாசார நிறுவனத்திற்கும் தீ வைத்து நாசம் செய்தது.

இந்த நிறுவனங்கள் 'இந்தியாவின் முகவர்கள்' என்றும் 'பாசிசத்தின் நண்பர்கள்' என்றும் முத்திரை குத்தப்படுகிறது.

வங்கதேசத்தின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் இந்தியா உதவி செய்தாலும், எல்லைப் பகுதிகளில் கொலைகள் மற்றும் தண்ணீர் பகிர்வு அல்லது உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு போன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக இந்தியாவுக்கு எதிரான மனநிலை பரவியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வங்கதேச அரசியலில் அவ்வப்போது ஏற்படும் இந்தியாவுக்கு எதிரான உணர்வின் பிரதிபலிப்பு தான் சமீபத்திய தாக்குதல்கள் என பலரும் நம்புகின்றனர்.

வங்கதேசத்தின் 16 மாத இடைக்கால ஆட்சியில் சட்டம் மற்றும் ஒழுங்கு முக்கிய பிரச்னையாக இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையற்ற சூழலை தேர்தல்களால் மட்டுமே சரிசெய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலை இடையூறு செய்வதற்காக, இந்தியாவுக்கு எதிரான உணர்வின் மூலம் ஒரு குழு வன்முறையை தூண்டிவிடுவதாக, பல அரசியல் தலைவர்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஹாதி மரணத்தை வைத்து இந்தியாவுக்கு எதிரான அரசியல் நடக்கிறதா?

வங்கதேசத்தில் நீண்டகாலமாக வளர்ந்துவந்த இந்தியாவுக்கு எதிரான மனநிலை, கடந்தாண்டு ஜூலை மாதம் அங்கு நடந்த போராட்டங்கள் காரணமாக புதிய பரிமாணத்தை எட்டியது.

அதைத் தொடர்ந்து, அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா உட்பட அவாமி லீக் கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் இந்தியாவில் அடைக்கலம் புகுந்ததையடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான ராஜீய ரீதியிலான உறவில் பதற்றம் அதிகரித்தது.

"நீண்ட கால நல்லிணக்கத்திற்கு எதிராக எப்போதுமே ஒரு எதிர்ப்பு செயல்பாட்டில் இருந்துள்ளது," என டாக்கா பல்கலைக்கழக பேராசிரியர் காஸி மர்ஃபுல் இஸ்லாம் கூறுகிறார். "ஆட்சியை இழந்த (முந்தைய) அரசாங்கத்திற்கும் இந்திய அரசு ஆதரவளித்துள்ளது."

நாடு கடத்தும் கோரிக்கைக்குப் பிறகும் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திற்கு திருப்பி அனுப்பாதது மற்றும் உஸ்மான் ஹாதியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்படும் நபர் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக சமூக ஊடகத்தில் செய்யப்படும் பிரசாரத்தைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான ராஜீய உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

எனினும், வங்கதேச அரசு மற்றும் நிர்வாகம், குற்றம் சாட்டப்பட்ட நபர் நாட்டிலிருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுவது குறித்து எந்தவொரு உறுதியான ஆதாரமும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளது.

"குற்றம் சாட்டப்பட்ட நபர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டாரா அல்லது இல்லையா என்பது குறித்து எங்களால் இன்னும் உறுதி செய்ய முடியவில்லை." என வங்கதேச காவல்துறையின் கூடுதல் ஐஜி கன்டகெர் ரஃபிகுல் இஸ்லாம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அதற்கு அடுத்த நாளான திங்கட்கிழமை வங்கதேச உள்துறை அமைச்சகத்தின் ஆலோசகர் செய்தியாளர் சந்திப்பில், "குற்றம் சாட்டப்பட்ட நபர் எங்கிருக்கிறார் என்ற உறுதியான தகவல் கிடைத்தால், அவர் கைது செய்யப்படுவார்." என தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான உணர்வை வைத்து வன்முறை தூண்டப்படுகிறதா?

இந்தியாவுக்கு எதிரான மனநிலை வங்கதேச அரசியலில் அவ்வப்போது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஊடக நிறுவனங்கள் மற்றும் கலாசார நிறுவனம், தன்மொன்டி-32 இல்லம் (வங்கதேச நிறுவன தலைவர் மறைந்த ஷேக் முஜிபுர் ரஹ்மானின் இல்லம்) ஆகியவற்றை சேதப்படுத்தும் போது இந்தியாவுககு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த தாக்குதல்களின் போது, ஜமாத்-இ-இஸ்லாமி உட்பட மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் இந்த நிறுவனங்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததை பார்க்க முடிந்தது.

உஸ்மான் ஹாதியின் மரண செய்தி பரவத் தொடங்கியதும், கடந்த வியாழக்கிழமை போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து நடந்த கூட்டத்தில் ராஜ்ஷாஹி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் முஸ்தாகூர் ரஹ்மான், "நாங்கள் பிரதாம் ஆலோ மற்றும் தி டெய்லி ஸ்டார் ஆகிய செய்தித்தாள்களை மூடுவோம்." என அறிவித்தார்.

அதே நாளில், ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமி சத்ரா கேம்ப் கிளை செயலாளர் முஸ்தாஃபிஸுர் ரஹ்மான் கூறுகையில், "அரசியல் போராட்டம் இல்லாமல் வங்கதேசம் உண்மையான சுதந்திரத்தை அடைவது சாத்தியமில்லை. உஸ்மான் ஹாதியின் இன்குலாம் மாஞ்ச் அமைப்பின் கலாசார போராட்டத்திலிருந்து நம்முடைய போராட்டம் தொடங்கும். நாளை பாம் (Bam) ஷாபாகி, சாயாநௌத், உடிச்சி (Udichi) ஆகியவை அழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் வங்கதேசம் உண்மையான சுதந்திரத்தை அடையும்." என்றார்.

பாம் என்பது இடதுசாரிகளை குறிக்கும் வார்த்தை. ஷாபாகி என்பது 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களை குறிக்கிறது, சாயாநௌத் என்பது முக்கியமான கலாசார நிறுவனமாகும் மற்றும் உடிச்சி என்பது நாட்டின் மிகப்பெரிய கலாசார அமைப்பாகும்.

பிபிசி வங்கமொழி சேவை தொடர்பு கொண்டபோது அவர்கள் தங்கள் கருத்துகளை மறுக்கவில்லை, ஆனால் அதை வேறு வழிகளில் விளக்கினர். அவாமி லீக் கட்சிக்கு கலாசார நிறுவனங்கள் வழங்கியுள்ள சட்டபூர்வ தன்மை முடிவுக்கு வர வேண்டும் என்றும் இரண்டு ஊடக நிறுவனங்களின் ஒருதலைபட்சமான அணுகுமுறையை ஒடுக்க வேண்டும் என்பதையே தாங்கள் வலியுறுத்துவதாக அவர்கள் கூறினர்.

மற்றொருபுறம், தங்கள் அமைப்பின் தலைவர்கள் தவறுதலாக கூறிய கருத்துகள் காரணமாக, இந்த தாக்குதல்களுக்கு தங்கள் மீது குற்றம் சுமத்துவதற்கு சதி செய்வதாக இஸ்லாமிய மாணவர் அணி கூறியுள்ளது.

வங்கதேச பத்திரிகையாசிரியர் மன்றத்தின் தலைவரான நுருல் கபீர் கூறுகையில், "மத ரீதியிலான அரசியலை வலுப்படுத்த நினைக்கும் குழுக்களுக்கு இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்புவது வசதியாக உள்ளது. ஜூலை மாதம் நிகழ்ந்த கிளர்ச்சிக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான கோபம் அதிகரித்துள்ளது. இப்போது, ஹாதியின் மரணத்துக்குப் பிறகு மத அடிப்படையிலான அரசியலை வளர்த்தெடுக்க நினைக்கும் தனிநபர்கள் அல்லது அமைப்புகள், இந்தியாவுக்கு எதிரான உணர்வை புதிய மற்றும் இன்னும் செயலூக்கத்துடன் சுரண்டுவதற்கு நினைக்கின்றன." என்றார்.

அவர் கூறுகையில், "இந்த நாட்டில் ஒரு பிரிவினர் அதன் ஜனநாயக நிறுவனங்களை அழிக்க முயற்சிக்கும் போது, இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களுக்குப் பின்னால் அடைக்கலம் புகுவது வசதியாக உள்ளது." என்றார்.

வன்முறைக்கு உடந்தையாக இருந்ததாக அரசு மீது குற்றச்சாட்டு

தாக்குதல் நடத்துபவர்கள் அங்கு வருவதற்கு முன்பாக, அரசின் உயர்மட்டம் வரை உதவி கோரியும், தங்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என, பிரதாம் ஆலோ மற்றும் தி டெய்லி ஸ்டார் ஆகிய ஊடக நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

பாதுகாப்புப் படைகள் சம்பவ இடத்திற்கு வந்தும் கும்பலை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். இதனால் தான் வன்முறை மற்றும் தீவைப்பு ஆகியவற்றில் அரசின் பங்கு குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

பேராசிரியர் காஸி மர்ஃபுல் இஸ்லாம் கூறுகையில், "இது முற்றிலும் இடைக்கால அரசாங்கத்தின் தோல்வி. எந்த நிறுவனத்தின் மீதான தாக்குதலையும் அரசு கட்டுப்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. சொல்லப்போனால், இந்த தூண்டுதல் மற்றும் வன்முறையை இடைக்கால அரசாங்கம் ஊக்குவித்ததற்கான சாத்தியம் உள்ளது போல தோன்றுகிறது." என்றார்.

சாயானௌத் தாக்குதல் தொடர்பாக அடையாளம் தெரியாத 300 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதாம் ஆலோ மற்றும் தி டெய்லி ஸ்டார் மீது நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், சமூக ஊடகங்களில் பரவிய பல வீடியோக்களில், தாக்குதல் நடத்துபவர்களை ஒடுக்குவதற்கு பதிலாக ராணுவ அதிகாரி ஒருவர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை பார்க்க முடிந்தது. அவர் கட்டடத்திற்கு உள்ளே சிக்கியிருந்த செய்தியாளர்களை மீட்பதற்கு 20 நிமிடங்கள் வேண்டும் என தாக்குதல் நடத்துபவர்களிடம் கேட்டதையும் பார்க்க முடிந்தது.

இத்தகைய வன்முறை சம்பவங்கள் அரசின் ஒரு பகுதியினரின் ஆதரவாலேயே நடப்பதாக நுருல் கபீர் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "அரசாங்கம், நிர்வாகம் மற்றும் முகமது யூனுஸ் அரசின் அமைச்சரவை ஆகியவற்றில் இந்த சம்பவங்கள் நடக்க வேண்டும் என நினைத்தவர்கள் நிச்சயம் உண்டு என நான் கூறுவேன்." என்றார்.

வங்கதேச தேசிய குடிமக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாமும் இதே குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அக்கட்சியில் பொறுப்பேற்பதற்கு முன்பு இவர் இடைக்கால அரசாங்கத்தின் ஆலோசகராக ஏழரை மாதங்கள் இருந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை பத்திரிகையாசிரியர்கள் மன்றம் மற்றும் செய்தித்தாள் உரிமையாளர்கள் சங்கம் நடத்திய கூட்டு போராட்டத்தில் நஹித் இஸ்லாம் கூறுகையில், "எங்களின் முழக்கத்தைப் பயன்படுத்தி அவர்கள் தாக்குதல்களை நடத்தி, அதற்குச் சாதகமாக ஒருமித்த கருத்தை உருவாக்கினார்கள். இந்தத் தாக்குதல்களில் அரசாங்கத்தில் உள்ள ஒரு குழுவுக்கும் தொடர்பு இருப்பதாக நாங்கள் கூறுகிறோம்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு