எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு: அதிமுக, பாஜக மற்றும் பிற கட்சி தலைவர்கள் கருத்து

பட மூலாதாரம், Getty Images and FB/Nainar Nagendran
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் காலக்கெடுவை அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் விதித்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் மக்கள் செல்வாக்குடன் ஆளுமை மிக்க தலைவர்களாக இருந்த போதிலும் தங்களுடன் முரண்பட்டவர்களை அரவணைத்து, கட்சி நலனுக்காக செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால், பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்குமாறு தான் உள்பட 6 மூத்த தலைவர்கள் நேரில் வலியுறுத்திய போதிலும் கட்சியின் பொதுச் செயலாளர் அதனை ஏற்கும் மனநிலையில் இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மனம் திறந்து பேசப் போவதாக சில நாள் முன்னதாகவே அவர் அறிவித்திருந்ததால், இன்றைய பேட்டி தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது. செங்கோட்டையன் பேசி முடித்த கணத்தில் இருந்தே அதிமுக, அக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மட்டுமின்றி பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கூட தங்களது கருத்துகளை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
சசிகலா கூறியது என்ன?
செங்கோட்டையனின் பேட்டி தொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 'ஜெயலலிதா கூறியதுபோல 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் மக்களுக்காக இயங்கும். எந்த சக்தியாலும் அழிக்க முடியாத இயக்கம் என்பதை செங்கோட்டையன் நிரூபித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் செங்கோட்டையன் உடன் இருந்துள்ளதாகக் கூறியுள்ள சசிகலா, ' தனது உடலில் ஓடுவது அ.தி.மு.க ரத்தம் தான் என்பதை அவர் நிரூபித்துள்ளார்' எனக் கூறியுள்ளார்.
'அ.தி.மு.க ஒன்றிணைய வேண்டும் என்பது தான் அ.தி.மு.க தொண்டர்களின் கருத்தாக உள்ளது. தமிழக மக்களின் கருத்தும் இது தான். செங்கோட்டையன் போன்ற உண்மையான தொண்டர்கள் இருக்கும்வரை எந்தவிதத்தில் தி.மு.க முயற்சி செய்தாலும் அவர்களின் எண்ணம் ஈடேறாது' எனவும் சசிகலா தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து தனது அறிக்கையில், 'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கிய இந்த இயக்கம், காட்டாற்று வெள்ளம் போன்றது. அ.தி.மு.க ஒன்றுபடுவதற்கு எதிராக எத்தனை தடை போட்டு தடுத்தாலும் அவற்றைத் தவிடுபொடியாக்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்புவது உறுதி' எனக் கூறியுள்ளார்.
'ஒன்றுபட்ட அ.தி.மு.க தான், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகை செய்யும்' எனவும் வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் கூறியது என்ன?
அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறிய கருத்துக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், "அ.தி.மு.கவை தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை கட்சிக்காக செங்கோட்டையன் உழைத்து வருகிறார். பல்வேறு பிரச்னைகள் வந்தபோதும் இயக்கத்தையும் அனைத்து மக்களையும் அரவணைக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்" எனக் கூறினார்.
"அ.தி.மு.க ஒருங்கிணைக்கப்பட்டால் தான் மீண்டும் அ.தி.மு.க ஆட்சி மலரும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்" எனக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், "அதற்காகத் தான் நாங்களும் போராடி வருகிறோம். அ.தி.மு.க உள்ள சக்திகள் பிரிந்திருப்பதால் பல்வேறு சோதனைகளை சந்தித்து வருகிறோம். அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும்" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "கடந்த நான்கைந்து ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழல் அ.தி.மு.கவில் நீடித்து வருகிறது. இது தொண்டர்கள் இயக்கம். இங்கிருந்து யாராலும் தொண்டர்களை வெளியேற்ற முடியாது. கட்சி ஒன்றிணைய வேண்டும் என யார் கூறினாலும் அவர்களுக்குப் பக்கபலமாக இருப்போம்" எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
செங்கோட்டையன் பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சரும், இன்றைய சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், "செங்கோட்டையன் விவகாரத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவு தான் எங்கள் முடிவு. அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் கருத்து குறித்துப் பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான வைத்திலிங்கம், "அதிமுக கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் ஆட்சியைக் கொண்டுவர முடியும் எனபதை மக்களும் தொண்டர்களும் உணர்ந்திருக்கிறார்கள். அதைத் தான் செங்கோட்டையன் வெளிப்படுத்தியிருக்கிறார். அது வரவேற்கத்தக்கது. புரட்சி தலைவர் மற்றும் புரட்சித் தலைவியின் நன்மதிப்பை பெற்றவர், பல ஆண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் செங்கோட்டையன். கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன், இதை அவர் கூறியுள்ளார். அவரது கருத்தை மனதார வரவேற்கிறேன்." என்று கூறினார்.

ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கழகத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் செங்கோட்டையன் அவர்களின் கருத்து, ஒவ்வொரு தொண்டனின் அடி மனதில் குவிந்திருக்கும் விருப்பம். இதை நான் ஒரு தொண்டனாக மனதார வரவேற்கிறேன்."
"நமது கழகம் வலிமை பெற மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனவுகளை நனவாக்கிட அனைத்து கழக உண்மை தொண்டர்களும் விருப்பு, வெறுப்புகளை விலக்கி ஒன்றிணைவோம்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கருத்து என்ன?
செங்கோட்டையனின் பேட்டி குறித்து பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
"இது அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரம். இதில் நான் கருத்து கூறுவது சரியானதாக இருக்காது. அவர்கள் இதுவரை ஒன்றாக இருந்தனர். அவர்கள், தங்களின் கருத்தைப் பேசுகின்றனர். அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க ஆட்சியை அகற்ற முடியும்" எனக் கூறினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடுவை செங்கோட்டையன் விதித்துள்ளது குறித்துப் பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "கெடு விதித்துள்ளது குறித்துக் கேட்டபோது, அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனக் கூறுவது நல்ல விஷயம்" எனத் தெரிவித்தார்.
'பா.ஜ.க கூட்டணியில் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?' எனக் கேட்டபோது, "அரசியலில் எதுவும் நிரந்தரமாக இருக்காது. தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. கடைசி ஒரு மாதத்தில் கூட மாற்றம் வரலாம். ஆட்சி மாற்றமும் காட்சி மாற்றமும் நடக்கும்" என்று மட்டும் பதில் அளித்தார்.

பட மூலாதாரம், TWITTER/H.RAJA
காங்கிரஸ், தேமுதிக கருத்து
அதேசமயம், "அதிமுக ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பத்திற்கு பாஜகவே காரணம்" என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் செங்கோட்டையன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஆனால், அது அவர்களின் உட்கட்சி விவகாரம் என்பதால் மேற்கொண்டு நான் ஒன்றும் கூற முடியாது." என்று தெரிவித்தார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












