100 நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்தாரா டிரம்ப்? - இந்தியா இலங்கைக்கு எவ்வளவு வரி?- முழு விவரம்
பரஸ்பர வரி விதிப்பு பற்றி டிரம்ப் என்ன பேசப் போகிறார் என உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், புதன்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
புதிய பரஸ்பர வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட டிரம்ப், இது அமெரிக்காவின் வெற்றிக்கு வித்திடும் என்று குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகை சுமார் 100 நாடுகளின் பட்டியலையும், அவற்றுக்கு அமெரிக்கா விதிக்கும் வரி விகிதங்களையும் வெளியிட்டுள்ளது. டிரம்ப் விதித்துள்ள வரிகள், உலகம் முழுவதும் பொருளாதார அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரஸ்பர வரி விதிப்பு மூலம் எந்த நாட்டுக்கு எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது? உலக நாடுகள் இதை எப்படி பார்க்கின்றன? விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைவாக இருப்பதாகவும், அதே நேரம் பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு எக்கச்சக்க இறக்குமதி வரி விதிப்பதாகவும் டிரம்ப் கூறினார். இது அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதிக்கிறது என்பதும் அவரின் வாதமாக இருந்தது.
பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கில், அனைத்து நாடுகள் மீதும் பரஸ்பர வரி விதிக்க இருப்பதாக டிரம்ப் முன்னதாக கூறியிருந்தார். "அவர்கள் நமக்கு வரி விதித்தால், நாம் அவர்களுக்கு வரி விதிப்போம்," என பிப்ரவரியில் டிரம்ப் பேசினார்.
புதன்கிழமை டிரம்ப் பேசுவதற்கு முன் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், அடிப்படையில் அனைத்து நாடுகளுக்கும் 10% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்றார்.
சரி, டிரம்ப் என்ன பேசினார்?
பரஸ்பர வரிகள் தொடர்பாக, அமெரிக்கா மீது மற்ற நாடுகள் விதித்த வரிகளையும், அந்த நாடுகள் மீதான அமெரிக்காவின் புதிய வரியையும் ஒப்பிடும் ஒரு பெரிய விளக்கப் படத்தைப் பிடித்தவாறு டிரம்ப் பேசினார்.
இந்த நாடுகள் தவிர்த்து, வியட்நாமுக்கு 46 சதவிகிதமும், இலங்கை மற்றும் மியான்மருக்கு 44 சதவிகிதமும், வங்கதேசத்துக்கு 37 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பற்றிப் பேசும்போது டிரம்ப், வரி விதிப்பில் இந்தியா மிக மிகக் கடுமையாக நடந்துகொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும், அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்தார்.
இந்த வரி விதிப்பு ஏப்ரல் 3ஆம் தேதி நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வரும்.
சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளைப் பற்றி டிரம்ப் பேசியபோதும், கனடா மற்றும் மெக்சிகோ பற்றி அவர் பேசவில்லை.
டிரம்ப் ஆட்சியேற்ற பிறகு, எல்லைப் பாதுகாப்பு, அமெரிக்காவுக்குள் போதைப் பொருள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது போன்ற விவகாரத்தில் இந்த நாடுகளுடன் அமெரிக்க மோதல் போக்குடன் செயல்படுகிறது.
முன்னதாக, இந்த நாடுகள் மீது 25% வரி விதிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் சில விலக்குகளைச் செய்யவும், இந்த வரி விதிப்பைத் தள்ளிப் போடவும் டிரம்ப் முடிவு செய்தார்.
இந்த வரி விதிப்புக்கு உலகத் தலைவர்கள் ஆற்றிய எதிர்வினை என்ன?
டிரம்பின் இந்த வரி விதிப்பு நடவடிக்கை பற்றி கனடா பிரதமர் மார்க் கார்னே செய்தியாளர்களிடம் பேசுகையில், டிரம்பின் வரிகளுக்குத் தனது நாடு எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
"ஒரு நோக்கத்தோடும் ஆற்றலோடும் செயல்படுவது அவசியம், அதைத்தான் நாங்கள் செய்வோம்" என அவர் கூறினார். இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி புதிதாக அறிவிக்கப்பட்ட அமெரிக்க வரிகளை "தவறானது" என்றும், இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இந்த வரி விதிப்புகள் "எதிர்பாராதவை அல்ல" ஆனால் அவை "முற்றிலும் தேவையற்றவை" என்று கூறியுள்ளார்.
சுவிஸ் அதிபர் கரின் கெல்லர்-சட்டர் தனது எக்ஸ் பக்கதில், வரி விதிப்புகளுக்கான பதில் நடவடிக்கைகள் என்னவென்று "விரைவில் தீர்மானிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
அயர்லாந்து பிரதமர் மைக்கேல் மார்ட்டின் வரி விதிப்புகளுக்கு "எந்த நியாயமும்" இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். மேலும், அயர்லாந்து "இதை எவ்வாறு சரியாகக் கையாள்வது என்பதை ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளுடன்" சேர்ந்து யோசிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் திட்டம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவுமா?
வெள்ளை மாளிகையின் உற்பத்தி மற்றும் வர்த்தகத்துக்கான மூத்த ஆலோசகரான பீட்டர் நவரோ, தனது கட்டுரையில் டிரம்ப் விதித்துள்ள வரிகளை ஆதரித்து, அவை அமெரிக்காவில் முழு வீச்சிலான உற்பத்தியை மீட்டெடுக்க உதவும் எனக் கூறியுள்ளார்.
வெளிநாட்டு கார்கள், பாகங்கள் மீதான டிரம்பின் 25% வரி, இயந்திரங்கள், டிரான்ஸ்மிஷன்கள் போன்ற முக்கியமான வாகனக் கூறுகளின் உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவுக்கு கொண்டு வர வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் என்று அவர் தெரிவிக்கிறார்.
அதோடு, அதிக ஊதியம், உயர்திறன் கொண்ட வேலைகளை அதிகரிப்பது ஆகியவையும் அமெரிக்க உற்பத்தியை மீட்டெடுக்கும் என்று நவரோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



