You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆடுகளம், ஆயிரத்தில் ஒருவன்: ஜி.வி.பிரகாஷ் குமார் இசையால் ஈர்த்த 6 திரைப்படங்கள்
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
'வாத்தி' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை கடந்த செவ்வாய்கிழமை (செப்டம்பர் 23) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் பெற்றுக்கொண்டார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
சூரரைப் போற்று (2020) திரைப்படத்திற்குப் பிறகு அவருக்கு கிடைத்துள்ள இரண்டாவது தேசிய விருது இது.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே 'நடிகர்' ஜி.வி. பிரகாஷ் குமார் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், 'இசையமைப்பாளர்' ஜி.வி. பிரகாஷ் குமார் தொடர்ந்து கொண்டாடப்பட்டே வருகிறார்.
'வெயில்' (2006) தொடங்கி 'குட் பேட் அக்லி' (2025) வரை அவரது பாடல்களும் இசையும் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கின்றன.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்த திரைப்படங்களில் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட 6 திரைப்படங்கள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
வெயில் (2006)
"வெயில் திரைப்படத்தின் வெற்றி ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு எக்கச்சக்க திரைப்பட வாய்ப்புகளை வழங்கியது. அப்போது அவரது சிறிய ஸ்டுடியோவுக்கு சென்றால், செல்வராகவன், பி.வாசு, வெற்றிமாறன் என இயக்குநர்கள் அவரது இசைக்காக காத்திருப்பார்கள்" என வெயில், அங்காடித் தெரு திரைப்படங்களின் இயக்குநர் வசந்த பாலன் ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.
தனது முதல் திரைப்படத்திலேயே ஒரு இசையமைப்பாளர் பிரபலமாவது தமிழ் சினிமாவில் புதிதல்ல, ஆனால் 'வெயில்' படத்தின் அழுத்தமான கிராமத்து கதையையும், பசுபதி, ஜி.எம்.குமார், பரத் ஆகியோரின் நடிப்பையும் மீறி, ஜி.வி-யின் இசை ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நா. முத்துக்குமார் வரிகளில் உருவான 'வெயிலோடு விளையாடி', 'உருகுதே மருகுதே' பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகின.
"வெயில் திரைப்படத்தின் போது எனக்கு 19 வயது. அப்போது நான் 'சின்னப் பையன்' எனக் கூறி பல இயக்குநர்கள் என்னுடன் பணிபுரிய மறுத்துவிட்டனர். என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தவர் வசந்த பாலன்தான். ஆனால், முதலில் நான் போட்ட 4 டியூன்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. 5வதாக போட்டது தான் 'வெயிலோடு விளையாடி' பாடல்" ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
ஆயிரத்தில் ஒருவன் (2010)
2009- ஆம் ஆண்டு ஜி.வி. பிரகாஷ் மூன்று திரைப்படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார், ஆயிரத்தில் ஒருவன், அங்காடித் தெரு, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்- மூன்றுமே முற்றிலும் மாறுபட்ட கதைக்களங்கள்.
குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், இயக்குநர் செல்வராகவனின் படம். செல்வராகவன்- யுவன் கூட்டணி எவ்வளவு பிரபலம் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை, அப்படியிருக்க மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகும் செல்வராகவனின் ஒரு வரலாற்று புனைவு திரைப்படத்தில் யுவன் விலகி, ஜி.வி. இடம்பெற்றது, ஜி.வி-க்கு ஒரு வகையில் அழுத்தமாகவே இருந்தது.
ஆனால், ஆயிரத்தில் ஒருவன் வெளியாகி 15 வருடங்களைக் கடந்தும், அத்திரைப்படத்தை பாராட்டுபவர்கள் ஜி.வி-யின் பின்னணி இசையும் மறக்காமல் குறிப்பிடுகிறார்கள்.
திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் 'உண்மையான தூதன்' யார் என சோழ தேசத்து மக்கள் அறிந்துகொள்ளும் காட்சி ஒன்று வரும். 3 நிமிடங்களுக்கு வசனம் ஏதும் இல்லாமல், ஜி.வி-யின் பின்னணி இசை மட்டுமே அந்த காட்சியின் உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்திவிடும்.
"ஆயிரத்தில் ஒருவன் ஜி.வி-யின் சிறந்த இசை என்று சொல்லலாம். ஆனால், அந்தப் படத்தின் பின்னணி இசைக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என எனக்குப் புரியவில்லை." என்று இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் பார்த்திபன் ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.
மதராசபட்டினம் (2010)
'மறந்துட்டியா' என எமி ஜாக்சன் கேட்டவுடன் வரும் 'தான தோம் தன' ஜதி இசையும், அதைத் தொடர்ந்து வரும் 'பூக்கள் பூக்கும் தருணம்' பாடலும் இன்றும் பலரால் இன்ஸ்டாகிராம் ரீல்களில் பயன்படுத்தப்படுகிறது.
யுவன்- நா.முத்துக்குமார் கூட்டணி பேசப்படும் அளவுக்கு, ஜி.வி. பிரகாஷ்- நா. முத்துக்குமார் கூட்டணி பேசப்படுவதில்லை. ஆனால், வெயில், அங்காடித் தெரு, பொல்லாதவன் படங்களைத் தொடர்நது 'மதராசபட்டினம்' திரைப்படத்திலும் அவர்களது கூட்டணி ரசிகர்களை ஈர்த்தது.
"ஜிவி.பிரகாஷிடம் இருக்கும் தனித்துவமே சில நிமிடங்களில் ஒரு நல்ல 'டியூனைக்' கொடுத்துவிடுவார். குறிப்பாக 'மெலடி' என்றால், அவர் அள்ளிக்கொடுத்துவிடுவார். எது வேண்டும், வேண்டாம் என முடிவு செய்வதுதான் நமக்கு மிகவும் கஷ்டம்" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் 'கிரீடம்', 'மதராசபட்டினம்' திரைப்படங்களின் இயக்குநர் விஜய்.
பொல்லாதவன் (2007) மற்றும் ஆடுகளம் (2011)
பொதுவாக ஒரு திரைப்படத்தின் பாடல்கள் அல்லது பின்னணி இசை மக்களிடம் பிரபலமானால், அவை 'ரிங்க்டோனாக' மாறும். ஆனால், பொல்லாதவன் படத்தில் கதாநாயகனின் 'பைக்' படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். அதற்கு ஜி.வி போட்ட பின்னணி இசை, பலரின் 'பைக்கில்' ஒலிக்கும் இசையாக இருந்தது.
"பொல்லாதவன் படம் உருவான சமயத்தில் நானும் ஜி.வி-யும் புதியவர்கள். புதிதாக எதையாவது செய்ய வேண்டுமென்ற வேட்கை அவருக்கு எப்போதும் உண்டு. அவருடன் வேலை செய்வது மிகவும் எளிது." என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருப்பார்.
ஒரு இசையமைப்பாளர் என்பதைத் தாண்டி, ஒரு சிறந்த பாடகராக ஜி.வி.பிரகாஷ் குமாரை மக்களிடம் கொண்டு சேர்த்த படம் என்றால் 'ஆடுகளம்'தான். இதில் இடம்பெற்ற 'யாத்தே யாத்தே' பாடல் ரசிகர்களை திரையரங்கில் ஆட்டம் போட வைத்தது. ஒரு மெலடி பாடலுக்கு திரையரங்கில் ரசிகர்களை ஆட வைத்த பெருமை ஜி.விக்கு உண்டு.
"என் இசையில் பாடுவதைத் முடிந்தவரை நான் தவிர்த்து வந்தேன். ஆடுகளம் படத்தில் இயக்குநர் வெற்றிமாறன்தான் என்னை வற்புறுத்தி 'யாத்தே யாத்தே' பாட வைத்தார். இன்றும் கல்லூரி விழாக்களுக்கு செல்லும்போது அந்தப் பாட்டை தான் பாட சொல்கிறார்கள்." என்று ஒரு மேடையில் தெரிவித்திருந்தார் ஜி.வி.
'ஒத்த சொல்லால' பாடலும், தனுஷின் நடனமும் ரசிகர்களிடம் பிரபலமாகின. 'மெலடி', 'குத்துப் பாடல்', 'ஆங்கிலம் மற்றும் தமிழில் ராப் பாடல்கள்' என ஜி.வி-யின் வெவ்வேறு வகையான பாடல்களும், அவை ஆடுகளம் படத்தில் பயன்படுத்தப்பட்ட விதமும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
58வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் ஆடுகளம் திரைப்படத்திற்கு ஆறு தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. ஆனால், ஜி.வி-யின் இசைக்கு தேசிய விருது கிடைக்கவில்லை. இருப்பினும், ஆடுகளம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான 'ஃபிலிம்ஃபேர் விருது (சௌத்)' பெற்றார் ஜி.வி.
அசுரன் (2019)
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் வெற்றிமாறனுடன் ஜி.வி.பிரகாஷ் இணைகிறார் என்பதால் ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பை, இந்தக் கூட்டணி மீண்டும் பூர்த்தி செய்தது.
குறிப்பாக 'எள்ளுவயப் பூக்கலையே' என்ற யுகபாரதியின் வரிகளில் சைந்தவி பாடிய பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
"ஒரு நிகழ்வில் சீமான் ஒரு நாட்டுப்புறப் பாடலை பாடும் காணொளி பார்த்து, அதை ஜி.வி-யிடம் காண்பித்தேன். நாயகன்- நாயகி தனது மூத்த மகனை இழக்கும் இடத்தில வரவேண்டிய சோகப்பாடல் என்பதால் சிறப்பாக வரவேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் இருந்தது. பின்னர் சீமானை சந்தித்து, பேசி இந்தப் பாடலை ஜி.வி உருவாக்கினார்." என இயக்குநர் வெற்றிமாறன் ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார்.
அதேபோல, படத்தின் தீம் இசையான 'பிளட் பாத்' ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் ஒருசேர பாராட்டப்பட்டது. "நாயகனின் கோபத்தை, அவனது வன்முறை செயல்களுக்குப் பின் உள்ள நியாயத்தை ஜி.வி-யின் பின்னணி இசை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்துகிறது. பல காட்சிகளை தாங்கிப் பிடிப்பதும் அவரது பின்னணி இசைதான்" விமர்சகர்கள் பாராட்டினர்.
அசுரன் திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. அப்போதும் ஜி.வி-யின் இசைக்கு விருது வழங்கப்படாதது குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன.
அதற்கு அடுத்த ஆண்டு (2020) வெளியான சூரரைப் போற்று படத்திற்காக தனது முதல் தேசிய விருதை வென்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்.
"ஜி.வியை நான் சூரரைப் போற்று படத்திற்காக அணுகும்போது, அவர் 8 படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சிலர் 'அவர் குறித்த நேரத்தில் பாடல்களை தரமாட்டார்' என பயமுறுத்தினர். ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு வருடம் முன்பே அனைத்து பாடல்களையும் சொன்னது போலவே இசையமைத்துக் கொடுத்தார். அவரின் இசை ஆற்றல் அபாரமானது" என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் சூரரைப் போற்று திரைபபடத்தின் இயக்குநர் சுதா கொங்கரா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு