You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காஸாவில் 27 பேர் பலி: இஸ்ரேல் படை வெளியேறிய பிறகு ஹமாசுடன் மோதும் ஆயுதக்குழு - என்ன நடக்கிறது?
- எழுதியவர், ரஷ்தி அபுஅலௌஃப்
- பதவி, காஸா செய்தியாளர் (இஸ்தான்புல்)
காஸா நகரில் ஹமாஸ் பாதுகாப்புப் படைகளுக்கும் துக்முஷ் குடும்பத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய உறுப்பினர்களுக்கும் இடையே நடந்த கடுமையான மோதல்களில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தப் பகுதியில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கை முடிவுற்ற பிறகு நடந்த மோசமான மோதல்களில் ஒன்றாகும் இது.
"முகமூடி அணிந்த ஹமாஸ் படையினர் ஜோர்டானிய மருத்துவமனை அருகே துக்முஷ் போராளிகளுடன் துப்பாக்கிச் சூடு நடத்தினர்" என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படைகள் அவர்களைச் சுற்றி வளைத்து தடுத்து வைக்க கடுமையான சண்டையில் ஈடுபட்டனர் என்றார்.
"போராளிகளின் ஆயுதமேந்திய தாக்குதலில்" எட்டு ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை சண்டை தொடங்கியதில் இருந்து 19 துக்முஷ் உறுப்பினர்கள் மற்றும் எட்டு ஹமாஸ் உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன?
தெற்கு காஸா நகரில் உள்ள டெல் அல்-ஹவா சுற்றுப்புறத்தில் 300 க்கும் மேற்பட்டவர்களை கொண்ட ஹமாஸ் படை, துப்பாக்கி ஏந்திய துக்முஷ் உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் இருந்த குடியிருப்பு கட்டடத்தை தாக்க முன்னேறியதை அடுத்து மோதல்கள் வெடித்தன என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
"கடுமையான துப்பாக்கிச் சூட்டினால் பல டஜன் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அப்பகுதியில் மக்கள் பீதி அடைந்தனர்" என்று குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அவர்களில் பலர் போரின் போது பல முறை இடம்பெயர்ந்தவர்கள்.
"இந்த முறை மக்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடவில்லை, அவர்கள் தங்கள் சொந்த மக்களிடமிருந்து ஓடிக் கொண்டிருந்தனர்" என்று அப்பகுதியில் வசிப்பவர் ஒருவர் கூறினார்.
காஸாவின் மிக முக்கியமான குடும்பங்களில் ஒன்றான துக்முஷ் குடும்பம் நீண்ட காலமாக ஹமாஸுடன் பதற்றமான உறவைக் கொண்டுள்ளது. அதன் ஆயுதமேந்திய உறுப்பினர்கள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் ஹமாஸ் குழுவுடன் மோதியுள்ளனர்.
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா உள்துறை அமைச்சகம், அதன் படைகள் காஸாவில் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுக்க முயன்று வருவதாக கூறியுள்ளது.
மோதலுக்கு என்ன காரணம்?
மோதல்களுக்கு யார் காரணம் என்பது குறித்து இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
துப்பாக்கி ஏந்திய துக்முஷ் உறுப்பினர்கள் தனது இரண்டு போராளிகளைக் கொன்றதாகவும், அதில் ஐந்து பேர் காயமடைந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ள ஹமாஸ், அதுவே மோதலை தூண்டியதாக கூறியுள்ளது.
எனினும் சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதலில் அல்-சப்ரா சுற்றுப்புறத்தில் தங்களது வீடுகள் அழிக்கப்பட்ட பின்னர் துக்முஷ் குடும்பம் ஒரு கட்டடத்தில் தஞ்சம் புகுந்தது. அது ஒரு காலத்தில் ஜோர்டானிய மருத்துவமனையாக செயல்பட்டது. அந்த கட்டடத்துக்குள் ஹமாஸ் நுழைந்ததாக துக்முஷ் குடும்பத்தின் வட்டாரம் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தனது படைகளுக்கு ஒரு புதிய தளத்தை நிறுவுவதற்காக அந்த கட்டடத்திலிருந்து துக்முஷ் குடும்பத்தை வெளியேற்ற முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலிய துருப்புகளால் சமீபத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டிருந்த காஸாவின் பகுதிகளில் தனது கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த ஹமாஸ் தனது பாதுகாப்புப் படைகளின் சுமார் 7,000 உறுப்பினர்களை திரும்ப அழைத்துள்ளது என்று உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதமேந்திய ஹமாஸ் பிரிவுகள் ஏற்கனவே பல பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் காஸா காவல்துறையின் நீல நிற சீருடைகளில் உள்ளனர், சிலர் சீருடைகள் அல்லாமல் பொதுமக்கள் போன்ற ஆடைகளை அணிந்துள்ளனர். ஹமாஸ் ஊடக அலுவலகம் "தெருக்களில் போராளிகளை" நிறுத்தியிருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு