You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதானியின் அசுர வளர்ச்சி: அவரது 'வழிகாட்டுதல் தத்துவம்' ஏன் நமக்கு ஆச்சரியத்தை தராது?
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி இந்திக்காக
2008, நவம்பர் 26ஆம் தேதி இரவு, இந்தியாவின் 10ஆவது பணக்காரராக இருந்த கௌதம் அதானி, மும்பை ஆடம்பர தாஜ் ஹோட்டலின் உணவகத்தில் இரவு உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, அனைத்து திசைகளிலும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சிலர் உள்ளே வருவதைக் கண்டார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய 10 தீவிரவாதிகள், அன்று மாலை கடல் வழியாக இந்தியாவுக்குள் வந்து, சில குழுக்களாகப் பிரிந்து, இரு உயர்தர ஹோட்டல்கள் உட்பட தங்களது இலக்குகளைத் தாக்கினர். 60 மணிநேர முற்றுகைக்குப் பிறகு 166 பேர் பலியாகியிருந்தனர்.
இந்தச் சம்பவம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவை மோசமாக்கியது.
பின்னர் இந்தியா டுடே பத்திரிகையிடம் பேசிய அதானி, உணவருந்திக் கொண்டிருந்தவர்களை ஹோட்டல் ஊழியர்கள் இரண்டு மணி நேரம் அடித்தளத்தில் இருக்க வைத்ததாகவும், பின்னர் மேல் தளத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் கூறினார்.
அந்த அறையில் 100 விருந்தினர்கள் இருந்தனர். சிலர் சோஃபாக்களுக்கு அடியில் ஒளிந்திருந்தனர். மற்றவர்கள் தங்கள் உயிருக்காக பிரார்த்தனை செய்தனர்.
தான் ஒரு சோபாவில் அமர்ந்து, அங்கிருந்தவர்களிடம் கடவுள் மீது நம்பிக்கை வைக்கச் சொன்னதாகவும், தன்னுடைய சொந்த ஊரான அகமதாபாத்தில் உள்ள குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியதாகவும் அதானி நினைவுகூர்ந்தார்.
அவருடைய கார் ஓட்டுநரும், பாதுகாவலர்களும் பதட்டத்தோடு வெளியே காத்திருந்தனர்.
மறுநாள் காலை இந்திய படைவீரர்கள் ஹோட்டலை சுற்றி வளைத்த பிறகு, அதானியும் மற்றவர்களும் பின்புற நுழைவாயில் வழியாக வெளியே அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் தன்னுடைய தனிவிமானத்தில் அகமதாபாத் திரும்பிய அதானி, "நான் மரணத்தை வெறும் 15 அடி தொலைவில் பார்த்தேன்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று அதானி உலகின் மூன்றாவது பணக்காரர். 230 பில்லியன் அமெரிக்க டாலர் மூலதனத்துடன் பெரிய துறைமுகம் முதல் எரிசக்தி நிறுவனங்கள் வரை ஏழு பொது வர்த்தக நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவர் நிறுவனத்தில் 23,000 பணியாளர்கள் உள்ளனர்.
பிரபல செய்தி ஊடகமான என்டிடிவியை வாங்கும் முயற்சியில் இறுதிகட்டத்தை அவர் நெருங்கிவிட்டதால் இந்த வாரம் மீண்டும் செய்திகளில் பேசுபொருளாகியிருக்கிறார் அதானி.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய அதானி கோடீஸ்வரராக மாறுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஓர் ஆபத்தில் இருந்து நூலிலையில் தப்பினார்.
1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அகமதாபாத்தில் அதானியும் அவரது கூட்டாளியும் ஒரு குழுவினரால் துப்பாக்கி முனையில் பணத்திற்காக கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பல முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அதானியும் அவரது கூட்டாளியும் நேரில் ஆஜராகாததால் இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட இருவர், கடந்த 2018ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
என்னுடைய வாழ்க்கையில் இரண்டு அல்லது மூன்று துரதிருஷ்டவசமான சம்பவங்கள் நடந்துள்ளன என்று ஒரு பத்திரிகையாளரிடம் கூறியதைத் தவிர்த்து, இந்தச் சம்பவம் குறித்து அதானி பொதுவெளியில் அதிகம் பேசியதில்லை.
16 வயதில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய அதானி, வைர வியாபாரம் செய்ய மும்பை சென்றார்.
ஆனால், அந்தத் தொழிலில் அவர் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருடைய சகோதரின் பேக்கேஜிங் தொழிலை நடத்துவதற்காக மீண்டும் குஜராத்திற்கு திரும்பினார்.
ஜவுளி வியாபாரம் செய்த நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அதானி, 1998ஆம் ஆண்டு தன்னுடைய முதல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
அடுத்த 24 ஆண்டுகளில், அவரது நிறுவனங்கள் துறைமுகங்கள், சுரங்கங்கள், ரயில்வே, உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் எனப் பலவகையாக மாறின.
இதுதான் அதானியை இந்தியாவின் புதிய தலைமுறை தொழிலதிபர்களில் மிகவும் ஆக்ரோஷமானவர் என்று ஒரு வர்ணனையாளரை குறிப்பிட வைத்தது.
இன்று இந்தியாவின் மறுக்கமுடியாத உள்கட்டமைப்பு அதிபராகவும் உள்ள அதானி, இந்தியாவின் இரண்டாவது பெரிய சிமென்ட் நிறுவனத்தை நடத்துகிறார்.
நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான முந்த்ரா உட்பட 13 துறைமுகங்கள் மற்றும் ஏழு விமான நிலையங்களை நடத்துகிறார். மேலும், டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலையை உருவாக்கி வருகிறார்.
ஆறு நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை நடத்திவரும் அதானி குழுமம், இந்தியாவின் மின்சார உற்பத்தில் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகும்.
அதே நேரத்தில், பசுமை ஹைட்ரஜனில் 50 பில்லியன் டாலர் முதலீடு செய்யவும் அவர் உறுதிஎடுத்துள்ளார். மேலும், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கங்களையும் வாங்கியுள்ளார்.
2030க்குள் புதிப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் உலகளவில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்றும் இலக்கு வைத்திருக்கிறார்.
அதானியின் விரிவாக்க வேகமும் அளவும் முந்தைய காலங்களின் தொழில்துறை ஜாம்பவான்களுடன் ஒப்பிடத்தக்கது என்று கொள்கை ஆய்வாளரான ஜேம்ஸ் கிராப்ட்ரீ, தன்னுடைய The Billionaire Raj: Journey Through India's New Gilded Age என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவின் மோசமான உள்கட்டமைப்பை நம்பாமல், அவர் தனது சொந்த இரயில்வே மற்றும் மின் வழித்தடங்களை உருவாக்கினார். உள்நாட்டு நிலக்கரியை எளிதில் எடுக்க முடியாததால், இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் சுரங்கங்களை வாங்கி, அவற்றை தன்னுடைய துறைமுகத்தின் மூலம் எடுத்து வருகிறார்" என்று க்ராப்ட்ரீ குறிப்பிடுகிறார்.
அதானியின் விரிவாக்கம் இந்தியாவின் விரிவாக்கத்தை நெருக்கமாக பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதேநேரம், ஏராளமான சர்ச்சைகளையும் அதானி சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோதியுடனான நெருக்கத்தால், அவரது வணிக சாம்ராஜ்யம் குரோனி (அரசு அதிகாரிகளுடனான நெருக்கத்தின் காரணமாக கிடைக்கும் அனுகூலம்) முதலாளித்துவத்திற்கான எடுத்துக்காட்டு என்று விமர்சிக்கப்பட்டது.
“இருவருமே ஒருவருக்கொருவரால் பயனடைந்தனர். மோதியின் வணிக சார்பு கொள்கைகள் அதானியின் விரிவாக்கத்திற்கு உதவியது. அதானியின் சொந்த நிறுவனங்கள் மோதியின் குஜராத் மாடலை அடையாளப்படுத்தும் பல பெரிய திட்டங்களை உருவாக்கியுள்ளன" என்கிறார் கிராப்ட்ரீ.
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தின் கலிலி படுகையில் உள்ள அதானிக்கு சொந்தமான நிலக்கரிச் சுரங்கம், நிலக்கரி எதிர்ப்பாளர்களின் போராட்டம் காரணமாக 2019ஆம் ஆண்டு இறுதிக் கட்டுமானம் தொடங்குவதற்கு முன், சுற்றுச்சூழல் அனுமதிக்காக பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட லாப நோக்கற்ற நிறுவனத்தால் நடத்தப்படும் ‘AdaniWatch’ என்ற இணையதளம், பூமி முழுவதும் அதானி குழுமம் செய்யும் தவறான செயல்கள் மீது ஒளி பிரகாசிப்பதாக கூறுகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை என்று அதானி குழுமம் கூறுகிறது.
2012ஆம் ஆண்டில் அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி, அதானி மற்றும் பிற தொழிலதிபர்களுக்கு அரசு நடத்தும் எரிவாயு நிறுவனத்திலிருந்து மலிவு விலையில் எரிபொருள் வழங்கியதாக இந்திய அரசு தணிக்கையாளர் குற்றம் சாட்டினார்.
மோதியின் ஒப்புதலுடன் அதானி நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக பத்திரிகையாளர் ஒருவர் 2017ஆம் ஆண்டு தொடர் கட்டுரைகள் எழுதினார்.
ஆனால், அதானியின் நிறுவனங்களும், மோதி அரசாங்கமும் இத்தகைய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகின்றன.
“அதானியின் உறவை உருவாக்குதல் மற்றும் அதைத் தொடரும் திறன் அவரது வளர்ச்சிக்கு உதவியது. அனைத்து அரசியல் மற்றும் சமூக தலைவர்களுடனும் அவர் நட்பில் உள்ளார்.
கேரளாவில் அதானியின் துறைமுகத் திட்டத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தற்போது மாநிலத்தை ஆட்சி செய்யும் கம்யூனிஸ்டுகளும் அதை ஆதரிக்கின்றனர்” என்கிறார் அதானியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதிய ஆர்என் பாஸ்கர்.
ஒரு வணிகம் லாபம் ஈட்ட தொடங்கும் முன் முதலீடு செய்யும் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட விரும்பாததே மற்ற தொழிலதிபர்களிடம் இருந்து அதானியை வேறுபடுத்திக் காட்டுவதாக ஆர்என் பாஸ்கர் கூறுகிறார்.
மிக முக்கியமாக, ஒரு வணிகக் குழுவின் நலன்கள், தேசிய நலன்களுடன் நெருக்கமாக இணைந்திருக்கும் போது வளர்ச்சி உறுதி என்று அதானி நம்புவதாகவும் ஆர்என் பாஸ்கர் கூறுகிறார்.
எனவே அதானி குழுமத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘நன்மையுடன் கூடிய வளர்ச்சி மூலம் இயக்கப்படும் தேசத்தைக் கட்டியெழுப்புதல்’ என்ற அவர்களின் வழிகாட்டுதல் தத்துவத்தில் எந்த ஆச்சரியமும் இல்லை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்