You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆசியாவின் பணக்காரரான கௌதம் அதானி என்டிடிவியை எவ்வாறு நடத்துவார்?
- பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனத்தின் இயக்குநர்கள் பதவியை ராஜிநாமா செய்தனர்.
- மேம்பாட்டுக் குழுவின் புதிய இயக்குநர்களாக சுதிப்தா பட்டாச்சார்யா, சஞ்சய் புக்லியா, செந்தில் செங்கல்வராயன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
- இந்த மாற்றங்கள் ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் என்ற மேம்பாட்டுக் குழுவில் நடந்துள்ளன. பிரனாய் ராய் தற்போது என்டிடிவி நிர்வாக இணைத் தலைவராக உள்ளார்.
- அதானி குழுமம் என்டிடிவியை கையகப்படுத்தத் தயாராகி வருகிறது. என்டிடிவியில் கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்கான திறந்த சலுகையை அதானி குழுமம் வழங்கியுள்ளது.
இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான என்டிடிவியின் நிறுவனர்களான பிரனாய் ராய், ராதிகா ராய் ஆகியோர் அந்த நிறுவனத்தின் வாரிய இயக்குநர்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனர். இது அந்த ஊடக நிறுவனத்தைக் கையகப்படுத்தும் அதானியின் முயற்சிக்குச் சாதகமாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் செய்தித் தொலைக்காட்சிகளின் எதிர்காலம் எப்படியுள்ளது என்பதை பிபிசி அறிந்து கொள்ள முயன்றது.
ராதிகா ராய் தனது கணவரும் ஒளிபரப்பாளருமான பிரனாய் ராயுடன் இணைந்து என்டிடிவி-ஐ நிறுவியதை ஒரு “மகிழ்ச்சிகரமான விபத்து” என்று விவரித்தார்.
1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு நடத்தும் தூர்தர்ஷனில் தி வேர்ல்ட் திஸ் வீக் என்ற ஒற்றை நிகழ்ச்சியுடன் என்டிடிவியை ராய் தம்பதி அறிமுகத்தினர். அதற்கென எந்தவித பெரிய திட்டமும் அவர்களிடம் இருக்கவில்லை.
ஒரு சராசரி வாராந்திர நிகழ்ச்சியை தயாரிக்கும் நிலையில் இருந்து, இந்தியாவின் முதல் தனியார் 24/7 செய்தித் தொலைக்காட்சி மற்றும் சுதந்திரமான செய்தி ஒளிபரப்பாளராக அது வளரும் என்றும் அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்த இந்த தம்பதியின் செய்தித் தொலைக்காட்சி கை மாறுகிறது.
உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான கௌதம் அதானி, உலகின் தவிர்க்க முடியாத ஊடகச் சந்தையைக் கொண்டிருக்கும் என்டிடிவியை வாங்கத் தயாராக உள்ளார்.
60 வயதான கோடீஸ்வரர் அதானி, துறைமுகம் முதல் எரிசக்தி கூட்டு நிறுவனம் வரை நடத்தி வருகிறார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும், அவரது அரசுக்கும் நெருக்கமானவராகப் பலரால் பார்க்கப்படுகிறார்.
உண்மையைச் சொல்வதானால், “அரசியல், சமூகத் தலைவர்களுடனான அவரது உறவு, அனைத்து வகையான கட்சிக் கொள்கைகளையும் தாண்டி, ஒவ்வோர் அரசாங்கமும் அவரை ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது,” என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர் ஆர்.என்.பாஸ்கர் கூறுகிறார்.
மார்ச் மாதம், அதானியின் புதிய நிறுவனமான ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் லிமிடெட், டிஜிட்டல் வணிக செய்தி நிறுவனமான குயின்டில்லியனின் மைனாரிடி பங்குகளை வாங்கியது.
“குவின்டில்லியன் முதலீடு அதானியின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு இல்லை. ஆக அவரிடம் பெரிய திட்டங்கள் இருக்கின்றனவா?” என்று பாஸ்கர் தனது நூலில் வியந்துள்ளார்.
இப்போது நமக்குத் தெரியும். சுமார் 51 மில்லியன் டாலர் வருவாய், 10 மில்லியன் டாலர் அளவிலான லாபம் கொண்ட என்டிடிவி, 260 பில்லியன் டாலர் சந்தை மூலதனம் கொண்ட பரந்த குழுவான அதானிக்கு ஒரு லாபகரமான கையகப்படுத்தலாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், என்டிடிவி என்பது இந்தியாவின் மிகவும் பிரபலமான நெட்வொர்க். இது தரவு சார்ந்த வாக்குகள் பகுப்பாய்வு, காலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி தொழில்நுட்பங்கள், வாழ்க்கை முறை நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் முன்னோடியாக உள்ளது. இன்று, இதுவொரு வலுவான இணைய இருப்பைக் கொண்டுள்ளது. தனது தளங்களில் சுமார் 35 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளது.
என்டிடிவி, தமது பார்வையை வழங்குவதற்கு மிகவும் பொருத்தமான ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளம் என்று அதானி குழுமம் நம்புகிறது.
அந்தப் பார்வை என்னவென்பது குறித்துச் சில குறிப்புகளை அதானி வழங்கியுள்ளார்.
“ஓர் ஊடக நிறுவனத்தைச் சுதந்திரமாகவும் உலகளாவிய தடம் பெறவும் ஏன் ஆதரிக்கக்கூடாது?
ஃபினான்ஷியல் டைம்ஸ் அல்லது அல் ஜசீராவுடன் ஒப்பிடுவதற்கு இந்தியாவிடம் ஒரு நிறுவனம் கூட இல்லை,” என்று அவர் ஃபினான்ஷியல் டைம்ஸிடம் கூறினார்.
இந்த விற்பனையை விமர்சிப்பவர்கள் அதிக சந்தேகம் கொண்டுள்ளனர்.
என்டிடிவியை இந்தியாவின் ஒரு சில சுயாதீன செய்தி நெட்வொர்க்களில் ஒன்றாகவும் மற்ற பல கூச்சலிடும் சேனல்களிடம் இருந்து இது விலகி நிற்பதாகவும் பலரும் கருதுகின்றனர். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் இதழியல் படிப்புக்கான ராய்ட்டர்ஸ் நிறுவனமும் நடத்திய ஆய்வில், பதிலளித்தவர்களில் 76% பேர் என்டிடிவி அளிக்கும் தகவல்களை நம்புகின்றனர்.
அதானியின் கையகப்படுத்தல், என்டிடிவியின் இதழியல் நேர்மை பாதிக்கப்படலாம் என்ற கவலையைத் தூண்டியுள்ளது.
ஊடகங்களில் பன்முகத்தன்மை இருந்தபோதிலும், இந்தியாவில் சுதந்திரமான இதழியல் துறை நன்றாக இல்லை.
பாரிஸை தளமாகக் கொண்ட ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ என்ற உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்த ஆண்டு தரவரிசையில் உள்ள 180 நாடுகளில் இந்தியா 150வது இடத்திற்குச் சரிந்தது. இது எப்போதும் இல்லாத மிகப் பின்தங்கிய நிலை. மோதியின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி இதை நிராகரிக்கிறது. குறியீட்டு முறை “கேள்விக்குரியது, வெளிப்படையானதில்லை” என்று கூறுகிறது.
ஊடகங்களின் பன்முகத்தன்மை உரிமையின் செறிவை மறைப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சான்றாக, நான்கு தினசரி செய்தித்தாள்கள் இந்தியில் முக்கால்வாசி வாசகர்களைக் கொண்டுள்ளன என்று ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் தெரிவிக்கின்றனர்.
220 பில்லியன் டாலர் அளவுக்கு சில்லறை விற்பனை முதல் சுத்திகரிப்பு நிறுவனம் வரை வைத்திருக்கும் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான நெட்வொர்க்18-ஐயும் தன் கையில் வைத்துள்ளார்.
அதானி, அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்திற்குச் சமமான வருவாயை ஈட்டுகின்றன.
என்டிடிவை கையகப்படுத்துவது, இந்தியாவில் செய்தி வணிகத்தைப் பாதிக்கும் பிரச்னைகளுக்கு அடையாளமாக உள்ளது என்று ஊடக நிபுணரான வனிதா கோலி-கண்டேகர் கூறுகிறார்.
இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட செய்தி சேனல்கள் உள்ளன. அவை பெரும்பாலும் தனியாருக்குச் சொந்தமானவையாகவும் பிராந்திய மொழிகளிலும் உள்ளன. 2021ஆம் ஆண்டில் தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் சேனல்கள் பெற்ற 423 மில்லியன் டாலர்களில் இப்போது 8% அதிகரித்துள்ளன.
“செய்திகள் எங்கும் இருக்கக்கூடிய கடினமான வணிகங்களில் ஒன்று” என்கிறார் கோலி-கண்டேகர்.
மேலும், “இந்தியாவில், தொலைக்காட்சி செய்திகள் மிகவும் லாபகரமான, அரசியல்ரீதியாக ஆபத்தான மற்றும் ஏமாற்று வணிகங்களில் ஒன்று. இரண்டு முதல் மூன்று நிறுவனங்கள் மட்டுமே அவ்வப்போது பணம் சம்பாதிக்கின்றன” என்று அவர் கூறுகிறார்.
மக்கள் பெரும்பாலும் செய்திகளுக்காகப் பணம் செலுத்தத் தயாராக இல்லாத காரணத்தால், சேனல்களுக்கான வருவாயில் பெரும்பகுதி விளம்பரத்தை நம்பியுள்ளது.
நெட்வொர்க்குகளின் நம்பகத்தன்மை குறைந்துவிட்டதாகப் பலர் நம்புகிறார்கள். ரேட்டிங்குகள் ஆகியவற்றால் “கொடூரமான சுரண்டல்” செய்திகள் மற்றும் பாரபட்சமான கவரேஜ் ஆகியவை இருப்பதாக ஒரு நிபுணர் குற்றம்சாட்டுகிறார்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் பொருளாதார வீழ்ச்சியின்போது என்டிடிவியின் சொந்த நிதிச் சிக்கல்கள் தொடங்கின. ஏற்கெனவே உள்ள கடன்களுக்கு மறுநிதியளிக்க அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து 44 மில்லியன் டாலர் கடன் வாங்க வேண்டியிருந்தது.
“என்டிடிவி நீண்ட காலத்திற்குக் கடினமாகப் போராடியது. அந்தப் போராட்டத்தில் தோற்றுப் போவதைப் போல் தெரிகிறது. ஊடக வணிகத்திற்கு இதுவொரு தோல்வியாகத் தெரிகிறது,” என்கிறார் கோலி-கண்டேகர்.
புதிய உரிமையாளரின் கீழ் அதன் இதழியல் நெறிசார் உள்ளடக்கமும் குணமும் மாறுமா என்பதற்க்குக் காலம்தான் பதில் சொல்லும்.
தொலைக்காட்சி செய்திகள் பல்வேறு விதமாக இருக்கும் நேரத்தில், என்டிடிவி “மிகவும் இடதுசாரி மையமாக இருந்தது. மற்றவை எடுத்துக் கொள்ளத் தயங்கிய அரசை விமர்சிக்கும் கதைகளை எடுத்துப் பேசியது. ஊடக நெறி கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் இப்போது தங்கள் நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொள்வார்களா என்ற கேள்வி எழுகிறது” என்று ஊடக ஆலோசனை நிறுவனமான ஓர்மாக்ஸ் மீடியாவை சேர்ந்த ஷைலேஷ் கபூர் கூறுகிறார்.
பயப்பட ஒன்றுமில்லை என்று அதானி நம்புகிறார். “அரசாங்கம் ஏதாவது தவறு செய்திருந்தால், அது தவறு என்று கூறுவதே சுதந்திரம்” என்று அவர் ஃபினான்ஷியல் டைம்ஸிடம் கூறினார். மேலும், “ஆனால் அதேநேரத்தில், அரசாங்கம் சரியானதைச் செய்யும்போது அதையும் நீங்கள் சொல்ல வேண்டும். அதற்கு தைரியம் வேண்டும்,” என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்