You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மாலை மரியாதையா? என்ன நடந்தது?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பெங்களூரில் இருந்து, பிபிசி ஹிந்திக்காக
பத்திரிகையாளரும், செயற்பாட்டாளருமான கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தனர். இதனை தொடர்ந்து, இருவருக்கும் கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள கோவிலில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கலவையான எதிர்வினைகளை எழுப்பியுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட பரசுராம் வாகமோர் மற்றும் மனோகர் யாத்வே இருவரும் கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மேலும் 6 பேருக்கும் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி, கெளரி லங்கேஷ் பெங்களூருவில் அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு பெங்களூரு காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி - SIT) இந்த வழக்கை விசாரித்தது.
பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) தலைவர் கோவிந்த் பன்சாரே, அறிஞர் எம்.எம். கல்புர்கி ஆகியோரது கொலைக்கும் கெளரி லங்கேஷ் கொலைக்கும் தொடர்பு இருப்பது எஸ்.ஐ.டி விசாரணையில் தெரியவந்தது.
கோவிலில் மாலை அணிவித்து மரியாதை
ஜாமீனில் வெளிவந்த பரசுராம் வாக்மோர், மற்றும் மனோகர் யாத்வே, கோவிலை அடைவதற்கு முன், விஜயபுரா நகரில் உள்ள சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கோவிலுக்குள் ஆதரவாளர்கள் முன்னிலையில் இருவரையும் ஸ்ரீ ராம் சேனாவின் மாவட்டத் தலைவர் நீலகண்ட் கண்ட்கல் மற்றும் பலர் மாலை அணிவித்து கெளரவித்தனர். இந்தச் சம்பவங்களைப் பற்றி ஊடகங்களுக்கு தகவல் வழங்கப்படவில்லை. அந்த கோவிலுக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஸ்ரீ ராம் சேனாவின் மாவட்டத் தலைவர் நீலகண்ட் கண்ட்கல் பிபிசி ஹிந்தியிடம், “அவர் ஒரு இந்து செயற்பாட்டாளர். அவர் ஜாமீனில் வெளிவந்ததால், அவரை மலர் மாலை அணிவித்து வரவேற்றோம். நீதிமன்றம் அவரை விடுவிக்க வேண்டும் என்று காளி கோவிலில் வழிபாடு செய்தோம்,” என்றார்.
'பாலியல் குற்றவாளிகளுக்கு மலர் மாலையா?’
கௌரி லங்கேஷின் சகோதரியும் இந்த வழக்கில் புகார்தாரருமான கவிதா லங்கேஷ் பிபிசி ஹிந்தியிடம் பேசுகையில், "பாலியல் வன்புணர்வு வழக்கு குற்றவாளிகளுக்கு கூட சிலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கின்றனர். தற்போது கொலை குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் மரியாதை செலுத்தியுள்ளனர். நமது சமூகம் எங்கே செல்கிறது?" என்றார்.
குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விடுவித்து அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதைக் குறிப்பிட்டு கவிதா இவ்வாறு கூறினார்.
பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்து, மீண்டும் அவர்களை சிறைக்கு அனுப்பியது.
"இந்த வழக்கில் அவருக்கு தொடர்பில்லை என்று நாங்கள் நம்புகிறோம், அவர் நிரபராதி," என்று நீலகண்ட் கண்ட்கல் கூறியுள்ளார்.
ஜாமீன் வழங்கப்பட்டது ஏன்?
கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் 16 பேருக்கு ஜாமீன் கிடைக்க முக்கியக் காரணம், விசாரணை தாமதமானது தான்.
குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள 527 சாட்சிகளில் இதுவரை சுமார் 140 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். எனவே விசாரணைகள் விரைவில் முடிவடைய வாய்ப்பில்லை.
சம்பாஞ்சே என்கிற மோகன் நாயக்கிற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது, ஆனால் அரசுத் தரப்பு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இதற்குப் பிறகு, கே.டி. நவீன் குமார், அமித் திக்வேகர் மற்றும் சுரேஷ் எச்.எல் ஆகியோரும் ஜூலை 2024-இல் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றனர். அதன் பிறகு, பாரத் குமார், ஸ்ரீகாந்த் பங்கர்கர், சுஜித் குமார் மற்றும் சுதனா கோந்த்கர் ஆகியோர் செப்டம்பர் 2024-இல் ஜாமீன் பெற்றனர்.
வாக்மோர், யாத்வே உள்ளிட்ட 8 பேருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது. ஆக மொத்தம் 16 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இருவர் இன்னும் நீதிமன்றத்தை நாடவில்லை.
இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் 'தாதா’ என்று அழைக்கப்படும் விகாஸ் படேல் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி), இந்திய ஆயுதச் சட்டம் மற்றும் கர்நாடகா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் ஆகிய விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மாலை மரியாதையா?
எக்ஸ் சமூக வலைதளத்தில் இந்தச் கோவிலில் நடந்த இந்தச் சம்பபத்தின் வீடியோவைப் பகிர்ந்த ஹர்மிந்தர் கவுர், “கௌரி லங்கேஷ் கொலையாளிகளுக்கு ஜாமீன் கிடைத்தது. கொலையாளிகளை இந்து அமைப்புகள் வெளிப்படையாக வரவேற்றன. இது மிகவும் மோசமான நடத்தை,” என்று பதிவிட்டார்.
நடிகர் பிரகாஷ் ராஜ், தன் எக்ஸ் பக்கத்தில், "இந்த நாட்டில் கொலைகாரர்கள் மற்றும் பாலியல் குற்றவாளிகளுக்கு மட்டுமே ஜாமீன் வழங்கும் விதிகள் உள்ளன. இது வெட்கக்கேடானது," என்று பதிவிட்டார்.
ஆனால், ஆர்வலரும் கட்டுரையாளருமான சிவசுந்தர் இந்த முழு சம்பவத்தின் வித்தியாசமான கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்.
பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், “கோட்பாட்டு அடிப்படையில் பார்க்கும்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் விசாரணை முடியும் வரை சிறையில் இருக்கக் கூடாது என்று சொல்வது சரிதான். பிரச்னை என்னவென்றால், இந்தக் கொள்கை மிகவும் பாரபட்சமாக செயல்படுத்தப் படுகிறது,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு இந்தக் கோட்பாடு பொருந்தாது. ஆனால் வலதுசாரிகளுக்கு இது பொருந்தும். மனித உரிமைக் கொள்கைகளின் படி, குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக் காலம் முழுவதும் சிறையில் அடைத்து வைக்கக் கூடாது. ஆனால் இதில் பாரபட்சம் காட்டக் கூடாது. வலதுசாரிகள், இடதுசாரிகள் என யாராக இருந்தாலும் இந்த கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்,” என்றார்.
சிவசுந்தர் மேலும் கூறுகையில், “விரைவான விசாரணைக்காகச் சிறப்பு நீதிமன்றம் வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கும் முயற்சியில் சுமார் 150 சாட்சிகளை விடுவிக்க அரசுத் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளது,” என்றார்.
"ஆனால், பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை வரவேற்று மாலை அணிவித்த நிகழ்வு அச்சுறுத்தும் ஒன்று,” என்றார்.
“அதே போன்று கௌரியின் விஷயத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொண்டாடப்படுவது, அவரது கொலையைக் கொண்டாடுவது போன்றது. இது பயங்கரமானது. இப்படியான நடத்தையை சமூகத்திற்குக் கற்று கொடுப்பது மிகவும் ஆபத்தானது,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)