You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் போருக்கு நடுவே ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருந்தது?
- எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பர்க்
- பதவி, ரஷ்ய சேவை ஆசிரியர்
- இருந்து, மாஸ்கோ
ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினில் ஸ்பாஸ்கி கோபுரத்தில் உள்ள கடிகாரம் டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு சரியாக 12 மணிக்கு ஒலி எழுப்பியதும் ரஷ்ய தேசிய கீதம் ஒளிபரப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, "நான் ரஷ்யன், உலகத்தை மீறி நான் எல்லா வழிகளிலும் செல்வேன்." என்ற பாப் பாடலுடன் 2023-ம் ஆண்டிற்கான ஒளிபரப்பை ஒன் டி.வி. தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, "நான் சோவியத் யூனியனில் பிறந்தேன், நான் சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்டேன்!" என்ற தேசபக்திப் பாடல் ஒளிபரப்பானது.
நான் சேனல்களை மாற்றினேன். ரஷ்யா-1 சேனலில் ஒளிபரப்பான புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில், போர் குறித்த செய்திகளை வழங்கும் அதன் பிரபலமான செய்தியாளர்கள் மதுபாட்டிலுடன் தோன்றி, 2023-ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று அலசினர். "போர் முனையில் இருந்து நல்ல செய்திகளே அதிகம் வர வேண்டும்" என்று அவர்கள் வாழ்த்தினர். ராணுவ உடையில் உடனிருந்த மற்றவர்கள் சோர்வில் இருந்தனர். யுக்ரைனில் ஆக்ரமித்த பிராந்தியத்தில் ரஷ்யா பணியமர்த்திய அதிகாரி ஒருவர், "நான் அமைதியை விரும்புகிறேன். ஆனால், அது நமது வெற்றியின் மூலம் மட்டுமே சாத்தியம்," என்றார். ரஷ்ய தொலைக்காட்சிகளில் இந்த ஆண்டு பண்டிகைக் கோலாகலங்கள் அனைத்துமே, "போர்க்களத்தில் வெல்வோம், கொண்டாடுவோம்" எனும் வகையில் வித்தியாசமான கலவையாகவே அமைந்திருந்தன. இதன் மூலம் ரஷ்யாவில் புத்தாண்டு கொண்டாட்டம் எப்படி இருந்தது என்பதற்கான சாராம்சத்தை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
ரஷ்யாவில் புத்தாண்டு தினத்தன்று டி.வி.யில் வரும் சராசரி நிகழ்ச்சியாக இது இருக்கவில்லை. இது ஒன்றும் சராசரி புத்தாண்டு இரவு அல்ல. 10 மாதங்களுக்கு முன்பு யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த போதே "இயல்பு நிலை" என்பது காணாமல் போய்விட்டது.
ரஷ்ய மக்களுக்கான அதிபர் புதினின் புத்தாண்டு உரையில் எதுவுமே இயல்பானதாக இல்லை. கிரெம்ளின் மாளிகைக்கு வெளியே தனி ஆளாக நின்று அவர் வருடாந்திர உரையை நிகழ்த்துவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில் அவருக்குப் பின்னே ராணுவ உடை தரித்த ஆண்களும், பெண்களும் நின்றிருந்தனர்.
கடந்த ஆண்டு பேசுகையில், "புத்தாண்டு தினம் உண்மையில் நல்ல உற்சாகம் மற்றும் மகிழ்ச்சியான எண்ணங்கள் நிறைந்தது" என்று அவர் கூறினார். அதுபோன்ற நேர்மறை வார்த்தைகள் இம்முறை அவரிடம் இருந்து அதிகம் வெளிப்படவில்லை. 10 மாதங்களாக நீடிக்கும் போரில் ரஷ்யாவை நாயகனாகவும், யுக்ரைன் மற்றும் மேற்குலகை வில்லனாகவும் சித்தரிக்க புதின் தனது புத்தாண்டு உரையை பயன்படுத்திக் கொண்டார். "அமைதி, சமாதானத்தையே விரும்புகிறோம் என்று பல ஆண்டுகளாக மேற்கு நாடுகள் பாசாங்கு செய்து வந்தனர். ஆனால், உண்மையில் சாத்தியமான அனைத்து வழிகளிலும் நவ-நாஜீக்களை அவர்கள் ஊக்கப்படுத்தினர்," என்றார் அவர்.
"தாய்நாட்டைக் காப்பது புனிதமான கடமை. நமது முன்னோருக்கும், அடுத்து வரும் சந்ததிக்கும் நாம் கடன்பட்டுள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.
"தாய்நாட்டைக் காப்போம்" என்ற கிரெம்ளின் வார்த்தைகளை படிக்கும் போது, ரஷ்யாதான் யுக்ரேன் மீது போர் தொடுத்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். போரை யுக்ரேன் தொடங்கவில்லை.
2022-ம் ஆண்டின் திருப்பம் மிகுந்த நிகழ்வுகளால் ரஷ்யா பெருமளவில் பலன் அடைந்திருப்பதாக புதின் கூறினார். "ரஷ்யாவின் முழு இறையாண்மையை நோக்கி முக்கிய அடிகளை எடுத்து வைத்த ஆண்டு இது" என்பது அவரது கருத்து.
"நமது எதிர்காலத்திற்கும், உண்மையான சுதந்திரத்திற்கும் நாம் அடிக்கல் நாட்டியுள்ளோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் போரில், ரஷ்யா தனது இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காகப் போராடுகிறது என்ற அவரது கூற்று புதிராக இருக்கிறது.
முதலில், ரஷ்யா நீண்ட காலமாகவே இறையாண்மை மிக்க, சுதந்திர நாடாகவே இருந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யா முழு இறையாண்மையை எட்டவில்லை என்ற புதினின் கூற்றை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில், அது ஏன்? புதின் அதிகாரத்திற்கு வந்து 23 ஆண்டுகளாகின்றன. விரும்பியதை சாதிக்க இவ்வளவு காலம் போதாதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
யுக்ரேன் மீதான போரை ஆதரிப்பவர்கள், ஆதரிக்காதவர்கள் என்று தனது புத்தாண்டு உரையில் குறிப்பிட்ட அவர், ரஷ்யர்களையே நீங்கள், நாங்கள் என்று பிரித்தாண்டார்.
"இந்த ஆண்டு பல முக்கிய காரியங்களை சாதித்த ஆண்டு," என்றார் புதின். "ஒருபுறம் துணிச்சல் - ஹீரோயிசம், மறுபுறம் துரோகம் - கோழைத்தனம் ஆகியவற்றை தெளிவாக பிரித்துணர்ந்தோம்," என்றும் அவர் கூறினார். 2023-ம் ஆண்டில் இந்த வகைப்பாட்டை ரஷ்யா மேலும் தெளிவாக்கும் என்று எடுத்துக் கொள்ளலாம். யுக்ரேன் மீதான படையெடுப்புக்காக ரஷ்யா தனது அனைத்து வளங்களையும் மடைமாற்றுகிறது.
இங்கே விவாதத்திற்கோ, ஆலோசனைக்கோ இடமில்லை. அதிபர் புதினை மக்கள் ஆதரித்து அப்படியே பின்தொடர வேண்டும் என்று ரஷ்ய அரசு எதிர்பார்க்கிறது. அவ்வாறு செய்யாத ரஷ்யர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு துரோகம் செய்வதாக உணரச் செய்யப்படுவார்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்