You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதினை விமர்சித்ததால் கொலையா? சர்ச்சைக்குரிய ரஷ்ய தொழிலதிபர், ஒடிஷா ஹோட்டலில் பிணமாக மீட்பு
- எழுதியவர், பால் கெர்பி
- பதவி, பிபிசி செய்திகள்
ஒடிஷாவில் ஹோட்டல் ஒன்றில் ரஷ்ய தொழிலதிபர் பவெல் ஆன்டோவ் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உடன் சென்ற நண்பர் உயிரிழந்த இரண்டே நாட்களில் அவரும் மரணமடைந்துள்ளார்.
ரஷ்யாவில் பிரபலமான அரசியல்வாதியும், பெரும் தொழிலதிபருமான பவெல் ஆன்டோவ் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக ஒடிஷாவில் உள்ள விடுதிக்கு சென்றுள்ளார்.
மாஸ்கோவுக்கு கிழக்கே உள்ள விளாதிமிர் நகரத்தில் ஆன்டோவ் அனைவராலும் அறியப்பட்டவர்.
கடந்த கோடை காலத்தில், ஆன்டோவின் வாட்ஸ்அப் கணக்கில் தோன்றிய தகவலால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை விமர்சிக்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.
ஒடிஷாவின் ராயகடா நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஜன்னலில் இருந்து கீழே விழுந்து ஆன்டோவ் உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆன்டோவை உள்ளடக்கிய 4 பேர் குழுவில், விளாமிர் புடானோவ் அதே ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று உயிரிழந்தார்.
விளாதிமிர் புடானோவ் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம், நண்பரின் மரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ஆன்டோவும் இறந்திருக்கலாம் என்று ராயகடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா ஷர்மா கூறியுள்ளார்.
ரஷ்யக் குழுவினருக்கு சுற்றுலா வழிகாட்டியாக இருந்த ஜிதேந்திரா சிங், "புடானோவ் மது பாட்டில்களை வைத்திருந்ததை சுடடிக்காட்டி, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருக்கலாம்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
விளாதிமிர் ஸ்டேன்டர்ட் என்ற பெயரில் இறைச்சி பதப்படுத்தும் ஆலையை நிறுவிய பவெல் ஆன்டோவின் சொத்துமதிப்பு, 2019-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் மதிப்பீட்டின் படி, சுமார் 1,161 கோடி ரூபாயாகும். ரஷ்ய எம்.பி.க்கள் மற்றும் மக்கள் பணியாளர்களிடையே பெரும் பணக்காரராக அவர் திகழ்ந்தார்.
விளாதிமிர் பிராந்திய சட்டசபையில் வேளாண் கொள்கை மற்றும் சூழலியல் கமிட்டித் தலைவர் உள்பட பல வழிகளிலும் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். ஆன்டோவ் மோசமான சூழலில் உயிரிழந்து விட்டார் என்று அவையின் துணைத்தலைவர் வியசெஸ்லாவ் கர்துகின் கூறினார்.
கடந்த ஜூன் மாத இறுதியில், யுக்ரேன் தலைநகர் கியவ் அருகே குடியிருப்பு மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் ஒருவர் பலியானார். அவரது மனைவியும், 7 வயது மகளும் காயமடைந்தனர். இந்த தாக்குதலை ஆன்டோவ் கண்டிப்பது போன்று தோன்றியது.
ஆன்டோவின் வாட்ஸ்அப் செய்தி, கட்டட இடிபாடுகளில் இருந்து அந்த குடும்பம் எவ்வாறு வெளியே கொண்டுவரப்பட்டது என்பதை விவரித்தது. "பயங்கரம் என்று அழைப்பதைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில் அந்த செய்தி நீக்கப்பட்டுவிட்டது. பின்னர், தான் புதின் ஆதரவாளர், தேசபக்தர், யுக்ரேன் போர் ஆதரவாளர் என்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டார்.
சர்ச்சைக்குக் காரணமான வாட்ஸ்அப் செய்தி யுக்ரேன் போர் குறித்த யாரோ ஒருவர் அனுப்பிய கருத்து என்றும், அத்துடன் தான் முரண்படுவதாகவும் அவர் கூறினார். அந்த செய்தி தவறுதலாக தனது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டுவிட்டதே உங்களின் தவறான புரிதலுக்குக் காரணம் என்று அவர் விளக்கம் அளித்தார்.
யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் தொடங்கிய பிறகு ரஷ்யாவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பலரும் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர்.
கடந்த செப்டர்பரில், ரஷ்யாவைச் சேர்ந்த லுகாய்ல் (Lukoil) என்ற பெரும் கச்சா எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் ரவ்யூ மகனோவ், மாஸ்கோவில் மருத்துவமனை ஜன்னலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்