எண்ணூர் அம்மோனியா கசிவு: கடலில் அல்லாமல் நிலத்தில் ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? மக்கள் அச்சம்

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம், CCAG/X

படக்குறிப்பு, நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

சென்னை, எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் உள்ளது கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலை. நேற்று நள்ளிரவு இந்த ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. கோரமண்டல் ஆலை கடலில் அமைத்துள்ள திரவ அமோனியா வாயு எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா கசிந்ததுள்ளது.

காற்றில் கலந்த அமோனியாவை சுவாசித்து மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. பலர் பயத்தில் அந்த பகுதிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய வெள்ளத்தினால் எண்ணெய்க் கழிவுகள் வெள்ள நீரில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பாதிப்பிலிருந்து எண்ணூர் பகுதி மக்கள் மீள்வதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கோரமண்டல் ஆலைக்கான அமோனியா, எண்ணூர் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள 2.5 கி.மீ நீளமுள்ள பைப்லைனைப் பயன்படுத்தி கோரமண்டல் ஆலைக்கு அனுப்பப்படுகிறது.

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம், CCAG/X

படக்குறிப்பு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் மக்கள்

நள்ளிரவில் கசிந்த அமோனியா

நேற்று இரவு 11.30 மணிக்கு அந்த குழாயிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டது. அமோனியா கசிவு குறித்த தகவல் கிடைத்தவுடன், கோரமண்டல் ஆலையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் குழுவினர் அங்கு விரைந்து சென்று கசிவை சரி செய்துவிட்டதாக கோரமண்டல் ஆலை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமோனியா கசியத் தொடங்கியவுடன், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித நெடி பரவத் தொடங்கியதால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்கள் வாகனங்களில் அந்த பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

எண்ணூர் அம்மோனியா கசிவு

மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக கோரமண்டல் நிறுவனத்தில் செய்யப்பட்ட சோதனையில், ஆலையின் வளாகத்தில் 400 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய அமோனியா 2090 கிராமாக இருந்தது. அதாவது வழக்கத்தை விட ஐந்து மடங்கு அமோனியா காற்றில் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கடல் நீரில் லிட்டருக்கு 5 மி.கி இருக்க வேண்டிய அமோனியா 49 மி.கி என இருந்துள்ளது. இதனால் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே இனி குழாயை பதிக்க வேண்டும் மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம், CCAG/X

படக்குறிப்பு, வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

அன்புமணி ராமதாஸ் கூறியது என்ன?

இது குறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தனியார் தொழிற்சாலையின் அலட்சியம் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அதிர்ச்சியளிக்கிறது.

எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்களில் இருந்து ஆலைக்கு அமோனியா வாயு கொண்டு வருவதற்காக குழாய் சேதமடைந்தது தான் வாயுக்கசிவுக்கு காரணம் ஆகும்.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனத்தில் இருந்து கச்சா எண்ணெய் கசிந்ததால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் முழுமையாக களையப்படாத நிலையில் அடுத்து வாயுக்கசிவு ஏற்பட்டிருக்கிறது.

எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.” என்று கூறினார்.

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம், Getty Images

கோரமண்டல் ஆலை மீது நடவடிக்கை தேவை- பூவுலகின் நண்பர்கள்

பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், "நேற்று நள்ளிரவு கோரமண்டல் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் பெரிய குப்பம் மீனவர் கிராமத்தில் இரவு தூங்கிக் கொண்டிருந்த மீனவமக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுவிட முடியாமல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர்"

"ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என ஒட்டுமொத்த மக்களும் பயந்து நள்ளிரவில் ஊரை விட்டு வெளியேறி 8 முதல் 10 கி.மீ. தொலைவு தாண்டி சமுதாயக் கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர்.

திருவொற்றியூர் முதல் எண்ணூர் தாழங்குப்பம் வரை உள்ள கிராம மக்கள் அனைவரும் தெருக்களில் மாஸ்க் அணிந்தவாறு அச்சத்துடன் கூட்டம் கூட்டமாக இருந்துள்ளனர்"

"30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மூலம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை நிலவரப்படி 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள செய்தி வருத்தமளிக்கிறது.

இதுமட்டுமின்றி எண்ணூரில் கடற்கரையோரம் மீன்கள், நண்டுகள், இறால்கள் ஏராளம் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடல் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

"கசிவால் பாதிப்படைந்த கிராமங்கள் ஒவ்வொன்றிலும் சுகாதாரத்துறை சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும், பொதுமக்களுக்கு ஏற்பட்ட சுகாதார பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரமண்டல் நிறுவனமே வழங்க வேண்டும்" என்று அந்த இயக்கத்தின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோரமண்டல் உள்ளிட்ட சிவப்பு வகை தொழிற்சாலைகளின் உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டு ஆலைகளின் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககமும், தமிழ் நாடு கொதிகலன்கள் இயக்குனரகம் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் இணைந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்தியுள்ளது.

அரசு சார்பில் என்ன நடவடிக்கை- அமைச்சர் விளக்கம்

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம், Siva.V.Meyyanathan/X

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், "நேற்று நள்ளிரவு, எண்ணூரில் உள்ள கோரமண்டல் உர நிறுவனத்திற்கு அமோனியா அனுப்பப்படும் குழாய்களிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. உடனே ஆலை நிர்வாகத்தால் அந்த கசிவு சரிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "தகவல் அறிந்ததும் உடனே மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த பகுதி முழுவதும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இப்போது அந்த இடத்தில் அமோனியா அளவை மீண்டும் பரிசோதித்து பார்த்ததில் பூஜ்ஜியமாக இருந்தது. எனவே இயல்பு நிலை திரும்பிவிட்டது" என்றார்.

மேலும், "கோரமண்டல் ஆலை சிவப்பு வகை தொழிற்சாலை. எண்ணூரில் உள்ள அனைத்து சிவப்பு வகை தொழிற்சாலைகளும் மறுஆய்வு செய்யப்படும். இதற்காக ஒரு குழு விரைவாக அமைக்கப்படும். தற்காலிகமாக அந்த தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. இனிமேல் தமிழ்நாட்டின் எந்த பகுதியிலும் இது போன்ற பிரச்சனைகள் நடக்காதவாறு முதல்வர் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் அமைச்சர் மெய்யநாதன்.

ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன

பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் பாலாஜி, "இன்று அதிகாலை 6 பேர் நச்சு வாயுவை சுவாசித்ததாக எண்ணூரிலிருந்து கொண்டு வரப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 2 ஆண்கள், 2 பெண்கள் என நான்கு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள்"

"அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டனர். ஆனாலும் கூட இன்று முழுவதும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர்கள் இருப்பார்கள்" என்று கூறினார்.

"கடலில் அல்லாமல் நிலத்தில் கசிவு ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?"

எண்ணூர் வாயுக் கசிவு

பட மூலாதாரம், CCAG/X

கோரமண்டல் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆலையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய பெரியகுப்பத்தைச் சேர்ந்த ஒருவர், "இதே கசிவு கடலில் ஏற்படாமல், நிலத்தில் ஏற்பட்டிருந்தால் இந்த பகுதியில் குடியிருக்கும் அனைவரும் இந்நேரம் இறந்திருப்போம். பலமுறை இந்த ஆலை குறித்து புகார் அளித்துள்ளோம், எந்த நடவடிக்கையும் இல்லை. சாக்லேட் தொழிற்சாலை என 1967-இல் தொடங்கப்பட்டது. பின்னர் இது உர தொழிற்சாலையாக மாற்றப்பட்டது. நிரந்தரமாக இந்த ஆலையை மூடும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை" என்று கூறினார்.

"இந்த ஊரில் பலருக்கு குழந்தை இல்லை. பிறக்கும் குழந்தைகளும் ஊனத்துடன் பிறக்கின்றன. முதியவர்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சனைகள், இதய நோய்கள் உள்ளன. சிறு பிள்ளைகளுக்கு கூட புற்றுநோய் வருகிறது. இந்த தொழிற்சாலை எங்களுக்கு வேண்டாம். இதனால் இந்த பகுதி மக்களுக்கு எந்த உபயோகமும் இல்லை.

தற்காலிகமாக மூடிவிட்டோம் என்கிறார்கள். நாங்கள் கேட்டுப் பழகிய இயந்திரங்களின் சத்தத்தை வைத்தே சொல்வேன், இப்போதும் ஆலை இயங்கிக்கொண்டு தான் இருக்கிறது" என்று கூறுகிறார் பெரியகுப்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)