நெல்லை - சென்னை வந்தே பாரத்: மற்ற ரயில்களுடன் ஒப்பிட்டால் தென் மாவட்ட மக்களுக்கு என்ன லாபம்?

பட மூலாதாரம், Railway PRO
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
வந்தே பாரத் ரயிலின் அடுத்த ஒரு வாரத்திற்கான டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துவிட்டது. வைகை, நெல்லை, பாண்டியன், முத்துநகர், பொதிகை, போன்ற அதிவிரைவு ரயில்களில் இல்லாத அம்சங்கள் வந்தே பாரத் ரயிலில் இருப்பது என்ன? ஏன் வந்தே பாரத் ரயில் சேவை தென் தமிழகத்திற்கு முக்கியம்? மற்ற ரயில்களுடன் ஒப்பிட்டால் நெல்லை - சென்னை வந்தேபாரத் ரயிலால் தென் மாவட்ட மக்களுக்கு என்ன லாபம்?
மதுரை அருகில் உள்ள மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை மக்கள் சென்னை செல்வதற்கு அதிகாலை கிளம்பி மதுரை ரயில் நிலையம் வந்தால் 7 மணிக்குச் செல்லும் வைகை விரைவு ரயிலில் சென்னை செல்ல முடியும்.
இது தவிர திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்ட மக்கள் குருவாயூர் விரைவு ரயிலை பிடித்தால் மட்டுமே சென்னை செல்லலாம். ஆனால், அதுவும் இரவு தான் சென்னை சென்று சேர முடியும்.
இனி நவீன வசதிகள் உள்ள வந்தே பாரத் ரயில் மூலம் காலை 6:00 மணிக்கு கிளம்ப பிற்பகல் 1:50 மணிக்கு சென்னை சென்றுவிடலாம். பயண நேரம் 7 மணி 55 நிமிடங்கள் மட்டுமே. முழுவதும் குளிரூட்டப்பட்டது இந்த வந்தே பாரத். 500 மீட்டர் தூரத்தை கடப்பதற்குள் 110 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடியது. அதே போல் பிரேக் சிஸ்டம் அதிநவீன தொழில்நுட்பம் 300மீட்டருக்குள் ரயில் வேகத்தை முழுவதும் கட்டுப்படுத்தலாம்.
இதன் கட்டணம் பெரும்பாலான சொகுசு பேருந்து கட்டணத்தைவிட குறைவுதான். பல தருணங்களில் சொகுசு பேருந்து கட்டணம் திருநெல்லேவிலி, மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கு 2000 ரூபாய் வரை இருக்கும்.
அதே போல பிற ரயில்களில் முதல் ஏசி வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணத்தை விட வந்தே பாரத் ரயிலின் சாதாரண ஏசி வகுப்புக் கட்டணம் குறைவுதான். திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வதற்கு 1665 ரூபாய் கட்டணத்தில் இரண்டு வேளை உணவு, ஸ்நாக்ஸ் வழங்கப்படுகிறது.
தென் தமிழகத்தில் இயங்கும் முக்கிய ரயில்கள்
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில், காலை நேரத்தில் இயங்கக் கூடிய ஒரே ரயில் மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வைகை அதி விரைவு ரயில் மட்டுமே.
வைகை அதிவிரைவு ரயில், மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல், கொடை ரோடு, திருச்சி, விருதாசலம், விழுப்புரம், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களின் நின்று பிற்பகல் 2:25 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இதன் மொத்த பயண நேரம் 7 மணி நேரம் 05 நிமிடம். இந்த ரயில் 22 பெட்டிகளை கொண்டது. அதில் 13 சாதாரண இருக்கைப் பெட்டிகள், 3 ஏ.சி. சேர் இருக்கை பெட்டிகள், 5 முன்பதிவு இல்லா அமர்ந்து செல்லும் வசதி கொண்ட பெட்டிகள் இருக்கின்றன. இதில் ஆயிரம் பயணிகளுக்கு மேல் பயணம் செய்யலாம்.
அதேபோல், வைகை ரயிலின் பயண கட்டணம் சாதாரண பெட்டிக்கு 190 ரூபாய், ஏ.சி பெட்டியில் 685 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.

பட மூலாதாரம், PTR Facebook
பகலில் ரயில் வசதி கிடையாது
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில் வசதி கிடையாது. கேரளா மாநிலம் குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை, மதுரை வழியாக சென்னை செல்கிறது.
இந்த ரயில் காலை 9:55 மணிக்கு திருநெல்வேலிக்கு வரும். இரவு 8:55 மணிக்கு சென்னை எழும்பூர் செல்கிறது. இந்த ரயில் 10 மணி நேரம் 50 நிமிடங்கள் சென்னை செல்ல எடுத்துக் கொள்கிறது.
இந்த ரயிலில் இருக்கை கட்டணம் 215 ரூபாய், படுக்கை வசதி கொண்ட பெட்டியில் 365 ரூபாய், ஏ.சி மூன்றாம் வகுப்பில் 990 ரூபாய், இரண்டாம் வகுப்பு ஏ.சியில் 1,410 ரூபாய் பயணக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
நெல்லை விரைவு ரயிலின் கட்டணம் என்ன? பயண நேரம் எவ்வளவு?
நெல்லை விரைவு ரயில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் இரவு 7:55 மணிக்குப் புறப்பட்டு 10 மணி நேரம் 40 நிமிடங்கள் பயணித்து அதிகாலை 6:35 மணி அளவில் சென்னைச் சென்று அடைகிறது.
இந்த ரயிலில் மொத்தம் 22 பெட்டிகள் உள்ளன. அதில் ஒன்பது படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ஆறு மூன்றாம் வகுப்பு ஏசிப் பெட்டிகள், நான்கு 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஏசிப் பெட்டிகள், முதல் வகுப்புப் பெட்டி ஒன்று, இரு முன்பதிவில்லாப் பெட்டிகள் இருக்கும், இதில் ஏசி பெட்டிகளில் சில மாற்றம் இருக்கலாம்.
இந்த ரயிலில் படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு 395 ரூபாய், மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிக்கு 1,040 ரூபாய், இரண்டாம் வகுப்பு பெட்டிக்கு 1,460 ரூபாய், முதல் வகுப்பு பெட்டிக்கு 2,410 ரூபாய் பயணக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர, குருவாயூர் -சென்னை விரைவு ரயில், கன்னியாகுமரி - சென்னை விரைவு ரயில், திருக்குறள் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இரவு நேரத்தில் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்துமே ஏறத்தாழ 11 மணி நேரம் பயணித்து சென்னை சென்றடைகிறது.
தூத்துக்குடி - சென்னை விரைவு ரயில்
தூத்துக்குடி- சென்னை இடையே முத்துநகர் விரைவு ரயில் என்ற ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் இரவு ரயில் தான்.
இந்த ரயில் தூத்துக்குடியில் இருந்து இரவு 8:20 மணி அளவில் புறப்பட்டு காலை 7:30 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

பட மூலாதாரம், MDU RAILWAY PRO
வந்தே பாரத் ரயிலால் தென்மாவட்ட மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
மதுரை அருகில் உள்ள மாவட்டங்களான விருதுநகர், சிவகங்கை மக்கள், சென்னை செல்வதற்கு அதிகாலைக் கிளம்பி மதுரை ரயில் நிலையம் வந்தால் 7 மணிக்குச் செல்லும் வைகை விரைவு ரயிலில் சென்னை செல்ல முடியும்.
இதுதவிர திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்ட மக்கள், குருவாயூர் விரைவு ரயிலை பிடித்தால் மட்டுமே சென்னை செல்லலாம். ஆனால், அதுவும் இரவு தான் சென்னை சென்று சேர முடியும் என்ற நிலை தான் இதுவரை இருந்து வருகிறது.
ஆனால், இனி அதிநவீன வசதிகள் உள்ள வந்தே பாரத் ரயில் மூலம் காலை 6:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டால், பிற்பகல் 1:50 மணிக்கு சென்னை சென்றுவிடலாம். பயண நேரம் 7 மணி 55 நிமிடங்கள் மட்டுமே. முழுவதும் குளிரூட்ட வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், 500 மீட்டர் தூரத்தில் 110 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடியது.
சென்னையில் வேலை இருந்தால் அதை முடித்துவிட்டு, அன்றிரவே ரயில் பிடித்து, மறுநாள் ஊர் திரும்பி விடலாம். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பயண நேரம் 3 முதல் 4 மணி நேரம் மிச்சமாகும்.
வந்தே பாரத் ரயிலில் கட்டணம் எவ்வளவு?
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சாதாரணக் குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணம் செய்ய உணவுக்கு 364 ரூபாய் உட்பட 1665 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிறப்பு பெட்டியில் உணவுக்கு 419ரூபாய் உட்பட 3055 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
முன்பதிவின் போது உணவு இல்லாமலும் முன்பதிவு செய்யலாம். அதற்கு ( NO Food) உணவு வேண்டாம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதேபோல், விருதுநகரில் இருந்து சாதாரண பெட்டியில் 1505 ரூபாய், சிறப்பு வகுப்புப் பெட்டியில் 2725 ரூபாய், மதுரையில் இருந்து செல்ல சாதாரணப் பெட்டியில் 1425 ரூபாய், சிறப்பு பெட்டியில் 2535 ரூபாய், திண்டுக்கலில் இருந்து சாதாரணப் பெட்டியில் 1330 ரூபாய், சிறப்பு வகுப்பு பெட்டியில் 2350 ரூபாய், திருச்சியில் இருந்து சாதாரணப் பெட்டியில் 1070 ரூபாய், சிறப்பு பெட்டியில் 1895 ரூபாய், விழுப்புரத்தில் இருந்து சாதாரணப் பெட்டியில் 755 ரூபாய், சிறப்பு பெட்டியில் 1280 ரூபாய் என கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
இனி திருநெல்வேலியில் இருந்து சென்னையில் சிறு வேலை இருந்தால் முடித்து அன்று இரவே ரயில் பிடித்து மறுநாள் ஊர் திரும்பி விடலாம். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு காலை முழுவதும், அல்லது இரவு முழுவது பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருக்காது
“வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை”
வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோதி நேற்று துவங்கி வைத்தார். இன்று பிற்பகல் சென்னையில் இருந்து நெல்லைக்கு பயணத்தை துவங்கி இருக்கிறது.
நான் மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றேன். ஆனால் ஒரு வார காலத்திற்கு முன்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்து இருக்கின்றன என்கிறார் ரயில் பயண ஆர்வலரான அருண் பாண்டியன்.
தொடர்ந்து பேசிய அவர், “இதுதவிர வார விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களுக்கான முன்பதிவுகள் அனைத்து நிறைவடைந்துவிட்டன.
வந்தே பாரத் ரயில் சேவை, தென் மாவட்டங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். 1,400 ரூபாய் இருந்தாலே மதுரையில் இருந்து சென்னை சென்று விடலாம். 1,600 ரூபாய் இருந்தால் திருநெல்வேலியில் இருந்து இரு வேளை உணவுடன் சென்னைச் சென்று விடலாம்.
இது போன்ற பாதுகாப்பான அதிநவீன வசதிகள் கொண்ட ரயில் சேவைகளை தென் மாவட்டங்களுக்கு அதிகப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது” என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








