நவீன அறிவியல் உலகில் செயற்கை இதயம் எட்டா கனவாகவே இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சியன் இ ஹார்டிங்
- பதவி, பிபிசி ஃப்யூச்சர்
நகரங்களுக்கு அடியில் சுரங்கம் அமைப்பது முதல் நிலவுக்குப் பயணிப்பது வரை மானுட வளர்ச்சி அளப்பரிய சாதனைகளைக் கண்டுள்ளது. ஆனால், செயற்கை இதயத்தை உருவாக்குவது மட்டும் ஏன் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக சவால்களை கொண்டுள்ளது?
செயற்கை இதயத்தைக் கண்டறிவதற்கான வரலாறு, புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு மற்றும் தொடர்ச்சியான மருத்துவ தோல்வி ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது.
நிலவுப் பயணமும் செயற்கை இதயமும்
1962 ஆம் ஆண்டில், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் ஒரு மனிதனை நிலவுக்கு அனுப்பி, அம்மனிதனை பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பி அனுப்ப வேண்டும் என, அறிவியல் சமூகத்திற்கு ஓர் சவால் விடுத்தார் ஜான் எஃப். கென்னடி.
1964ஆம் ஆண்டில் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மைக்கேல் டீபேக்கே, நிலவில் மனிதன் கால் பதிப்பதற்கு முன்பே செயற்கை இதயத்தை வெற்றிகரமாக உருவாக்குவதற்கான பந்தயத்தைத் தொடங்கிவைத்து, செயற்கை இதயத்தை உருவாக்கும் திட்டத்திற்கு நிதியளிக்குமாறு அமெரிக்க அதிபர் லிண்டன் பி. ஜான்சனிடம் வலியுறுத்தினார்.
1969 ஆம் ஆண்டில், அப்பல்லோ - 11 என்ற விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிட்யூட் முழுவதுமாக செயற்கையாக செயல்படக்கூடிய இதயத்தைப் பொருத்தி, இரண்டு சாதனைகளும் கிட்டத்தட்ட ஒரே காலத்தில் செய்து முடிக்கப்பட்டன.
இருப்பினும், நிலவில் தரையிறங்குவதில் ஸ்பேஸ் ஷட்டில், மார்ஸ் ரோவர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையம் என அடுத்தடுத்த சாதனைகள் தொடர்ந்தன. ஆனால், நம்பகமான ஒரு செயற்கை இதயம் இன்னும் நமது கைகளுக்கு எட்டவில்லை.
என்னென்ன சவால்கள்?
ஆரம்பத்தில் செயற்கை இதயம் என்பது இதயம் செயலிழந்தபோது அதற்கென வாழ்நாள் முழுவதுக்குமான மாற்றாக இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டது.
நோயாளியின் உடலில் வெளியிலிருந்து அழுத்தத்தை அளிக்கும் வகையிலான கம்ப்ரசருடன் (compressor) கூடியதாக முதலில் வடிவமைக்கப்பட்ட செயற்கை இதயம் இருந்தது.
உடலின் வெளிப்பகுதியில் இந்த கம்ப்ரசர் இருப்பது பயனுள்ளதாக இருந்தபோதிலும், இயந்திர பாகங்கள் (அவை மிகவும் எளிதில் அணியக்கூடியவை) மாற்றப்படலாம் என்பதால், அளவில் பெரிதான கம்ப்ரசர்களை நோயாளிகள் எப்போதும் உடன் வைத்திருக்கும் நிலைமை ஏற்படலாம். இதனுடன் எப்படி நோயாளி சாதாரண வாழ்க்கையை வாழ முடியும் என்பதில் சவால்கள் நிலவின.
இதய மாற்று அறுவை சிகிச்சையில் புரட்சி
செயற்கை இதயத்தின் வரலாறு எப்போதும் இதய மாற்று அறுவை சிகிச்சையுடன் பிண்ணிப் பிணைந்ததாகும். 1960களின் ஆரம்பங்களில் இதய மாற்று அறுவை சிகிச்சையும் எப்போதும் நம்பிக்கைக்குரிய கனவாகவே இருந்திருக்கிறது.
ஆனால், 1967ஆம் ஆண்டில் கேப் டவுனைச் சேர்ந்த இதய அறுவைசிகிச்சை நிபுணர் கிறிஸ்டியன் பார்னார்டு வெற்றிகரமாக இதய மாற்று அறுவைசிகிச்சையை மேற்கொண்டார். இதனால், செயற்கை இதயங்களை உருவாக்குவதன் நோக்கம் மாறியது.
வாழ்நாள் முழுவதும் பொருத்தியிருப்பதற்கு ஏற்றவாறு செயற்கை இதயங்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாற்று இதயம் கிடைக்கும் வரை நோயாளியை உயிருடன் வைத்திருப்பதே செயற்கை இதயத்தின் நோக்கமாக மாறியது.
பலகட்ட உயர் சிகிச்சைகளுக்குப் பின்னர், எந்த வாய்ப்பும் இல்லாத நோயாளியிடம் முதலில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதயத்தின் இடது வென்ட்ரிக்கிளில் ஏற்பட்ட பெரிய வீக்கத்தை சரிசெய்வதற்காக 27 வயது நபருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதயம் மற்றும் நுரையீரலின் செயல்களை மேற்கொள்ளும் செயற்கை இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, அதன்மூலம் அவரது ரத்த ஓட்டம் சீராக வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அறுவை சிகிச்சையின் முடிவில் அவரது இதயம் பலவீனமாக இருந்ததால், அந்த இயந்திரத்தை அவர் உடலிலிருந்து அகற்ற முடியவில்லை. அவருக்கு உடனடியாக மாற்று இதயத்தைப் பொருத்த வேண்டிய தேவை எழுந்தது. அறுவைசிகிச்சை நிபுணர் டீபேக்கே உடன் இருந்த டென்டன் கூலி எனும் நிபுணர், பரிசோதனை நிலையிலிருந்த முழுமையான செயற்கை இதயத்தை வழங்க முன்வந்தார், அந்நபரும் அதனை ஏற்றுக்கொண்டார்.
அந்த புதிய சாதனத்தின் மூலம் 64 மணி நேரம் அவரது உடல்நிலை சீராக இருந்தது. பின்னர், மாற்று இதயம் கிடைத்த பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
செயற்கை இதயம் கண்டுபிடிப்பில் ஏற்பட்ட பின்னடைவுகள்
முழுமையான செயற்கை இதயத்தின் முதல் வெற்றியாக இது தோன்றலாம். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த நோயாளி செப்சிஸ் (ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்படுதல்) காரணமாக உயிரிழந்தார்.
அதுமட்டுமல்லாமல், அந்த இயந்திரம், சிறுநீரகங்கள் மற்றும் ரத்தத்தை பாதித்தது. செயற்கை இதயத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை இத்தகைய பிரச்னைகள் முறியடித்தன.
வயர் மூலமாக உடலுக்குள் செலுத்தப்படும் எந்தவொரு சாதனத்தாலும் தொற்று மற்றும் செப்சிஸ் ஏற்படுவது தொடர் சவாலாக இருந்தது. ரத்த ஓட்டத்தை மாற்றும் சாதனங்கள், ரத்தத்தின் கலவையை மாற்றி, ரத்தம் உறைவதற்கும் அதனால் பக்கவாதம், ரத்த முறிவு ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.
இத்தகைய செயற்கை இதயம் அடுத்ததாக ஐந்து நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. அதில் ஒரு நோயாளி 620 நாட்களுக்கு உயிர்வாழ்ந்தார். அதில் இரு நோயாளிகளுக்கு கடுமையான பக்கவாதம் ஏற்பட்டு, அதன் தொடர்ச்சியாக செப்சிஸ் அல்லது ரத்தம் தொடர்பான பிரச்னைகளால் அனைவரும் உயிரிழந்தனர்.
இதய மாற்று அறுவை சிகிச்சை சந்தித்த சவால்கள்
இதய மாற்று அறுவை சிகிச்சையும் இத்தகைய பிரச்னைகளுடனேயே ஆரம்பித்தது. மாற்று இதயம் பொருத்தப்பட்ட முதல் நோயாளி 18 நாட்களில் உயிரிழந்தார். பிரிட்டனில் முதன்முறையாக லண்டன் நேஷனல் ஹார்ட் மருத்துவமனையில் ஒருவருக்கு மாற்று இதயம் பொருத்தப்பட்டது. அந்நபர் 45 நாட்கள் உயிர்வாழ்ந்தார்.
மாற்று இதயம் வெற்றி பெறுவதும் மிகுந்த ஏமாற்றத்தையே அளித்தது. புதிய இதயத்தின் ஆரம்ப செயல்பாடோ அல்லது அறுவைசிகிச்சைக்கான செயல்முறையோ பிரச்னை அல்ல.
தானம் அளிப்பவரின் இதயம் அதனை பெறுபவரின் நோயெதிர்ப்பு அமைப்புடன் ஒத்துப்போகாததே இதற்கு காரணம். அப்படியே, தானமாக அளிக்கப்பட்ட இதயம் நோயாளிக்கு மிகவும் பொருந்தினாலும் அந்த இதயம் அவரது உடலால் நிராகரிக்கப்படக் கூடாது என்பதற்காக அவருடைய நோயெதிர்ப்பு அமைப்பு அடக்கப்பட வேண்டும்.
நோயெதிர்ப்பு மண்டலத்தை அடக்குவதற்கான மருந்துகள் ஆரம்ப நாட்களில் சிக்கலானதாக இல்லை. 1980களில் கண்டறியப்பட்ட சைக்ளோஸ்போரின் (ciclosporin) மருந்து, நோயெதிர்ப்புத் தடுப்பில் ஒரு புரட்சியை உருவாக்கியது.
இதனால், இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதன் விகிதம் அதிகரித்தது. இதனால், தற்போது தானம் அளிப்பவர்களை விட இதயம் தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் 7,50,000க்கும் அதிகமானோர் இதய செயலிழப்பால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், 200 பேருக்குத்தான் மாற்று இதயம் பொருத்தப்படுகிறது. இதேபோன்ற புள்ளிவிவரம் தான் உலகம் முழுவதிலுமே காணப்படுகிறது.
இந்த இடைவெளியை நிரப்ப மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை மனிதர்களுக்குப் பொருத்தும் முயற்சியை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நடைமுறை, மிகவும் சிக்கலானது மற்றும் சவாலானது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எட்டா கனவு
பல தசாப்தங்களாக செயற்கை இதயத்தை உருவாக்கும் தொழில்நுட்பங்கள், ஆபத்தை விளைவிக்காத உபகரணங்கள், சிறப்பான வால்வு வடிவமைப்பு, ரத்த ஓட்டத்தை சிறப்பாக கையாளும் வகையில் வடிவமைத்தல் என பல்வேறு மேம்பட்ட மாற்றங்களைக் கண்டுள்ளது.
இதனால், வெற்றி கிட்டியது. செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நோயாளிகளில் 80% பேர் ஓராண்டு வாழ்கின்றனர், சிலர் ஆறு மாதங்கள் வாழ்வதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
செயற்கை இதயத்தால் ஒருவர் அதிகபட்சமாக 1,373 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார். இருப்பினும் மோசமான தொற்று ஏற்படும் பிரச்னைகள் இன்னும் உள்ளன. முழுமையான செயற்கை இதயத்தை வடிவமைப்பது இன்னும் எட்டா கனவாகவே உள்ளது.
மாற்று இதயங்கள் கிடைக்காமல் இருப்பதால், இத்தொழில்நுட்பம் தற்போது வேறு திசையில் பயணிக்கிறது. செயலிழந்த இதயத்தை முழுவதுமாக மாற்றுவதைவிட ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருப்பதற்கு உறுதுணையாக இருக்கும் சாதனங்களே முக்கியமானதாக உள்ளது.
அதற்காகக, VAD எனப்படும் வென்டிரிக்குலர் சாதனம், இதயத்தின் வென்டிரிக்கிளில் இருந்து ரத்தத்தை வெளியேற்றி, அதனை முற்றிலும் வேறு திசைக்கு அனுப்பி, அந்த ரத்தத்தை அதிக அழுத்தத்தில் பெருந்தமனிக்கு அனுப்பும் வேலையை செய்கிறது.
இந்த ரத்தம் இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் ரத்தத்துடன் சேர்ந்து இதய செயல்பாட்டை அதிகரிக்கிறது. வலது மற்றும் இடது இதய ரத்த ஓட்டத்தை சீராக்குவதில் நிலவிய பிரச்னையையும் இது சரிசெய்தது.
இடது வெண்டிரிக்கிளுக்கு உதவிபுரியும் LVAD, இதய செயலிழப்பின் கடைசி நிலையில் உள்ள ஒருவருக்கு துணைபுரிவதில் புரட்சியை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் இதுவரை 15,000க்கும் அதிகமான LVADகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் மூன்றில் ஒருவர் இதய செயலிழப்பின் கடைசி கட்டத்தில் உள்ளவர் ஆவார்.
இதய தானத்தில் நிலவும் இடைவெளியால் இத்தகைய LVAD துணையுடன் நோயாளிகள் பல ஆண்டுகள் உயிர்வாழ முடியும். இதனால் உயிர்பிழைக்கும் விகிதம் 50% என்ற அளவில் உள்ளது. நோயாளிகள் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றனர். சில நோயாளிகள் 13 ஆண்டுகள் வரை கூட உயிர்வாழ்ந்ததாக தகவல்கள் உள்ளன.
இந்த LVAD இல் தற்காலிகமாக ஏதேனும் செயல்பாட்டில் பிரச்னை ஏற்பட்டாலும் அதனை சரிசெய்ய சிறிய பொருத்தப்பட்ட பேட்டரிகளே போதுமானதாக உள்ளது.
முழுமையான செயற்கை இதயத்திற்கான தேடல் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. செயற்கை இதயம் 110 எம்.எம்.ஹெச்ஜி என்ற ரத்த அழுத்த அளவில், ஒரு நிமிடத்திற்கு எட்டு லிட்டர் ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். மேலும், செயற்கை இதயம் முழுவதும் உடலின் வெளிப்புறத்திலிருந்து செயலாற்றுவதாகவே உள்ளது.
சிறிய அளவிலான கம்ப்ரசர்கள் உருவாக்கப்பட்டாலும், அதனை முழுமையாக உடலுக்குள் பொருத்தக்கூடியதாக மாற்றுவது போராட்டமாகவே உள்ளது. ஆதலால், VAD தொழில்நுட்பம் இதற்கான தீர்வாக உள்ளது.
தீர்வை நெருங்கிவிட்டதாக தோன்றுகிறது. ஆனால், எளிதான பயணத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. பல ஆண்டுகளாக ஏற்பட்ட பல தோல்விகள் நிச்சயமாக விஞ்ஞானிகளுக்கு இதயத்தின் இயற்கையான செயல்பாடுகள் மீதான பணிவையும் பிரமிப்பையும் உருவாக்கியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












