You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அண்ணாமலை மீது அமித் ஷா நம்பிக்கை வைப்பது ஏன்? அவர் அப்படி என்ன சாதித்தார்?
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி செய்தியாளர்
'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார்.
வரப்போகும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசின் சாதனைகளை தமிழ்நாட்டு மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுவதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபயணம் 168 நாட்களுக்கு மொத்தம் 5 பகுதிகளாக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுகிறது. 234 தொகுதிகளிலும் திட்டமிடப்பட்டுள்ள இந்த நடைபயணத்தில் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் தொடக்க விழா ராதநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு நடைபயணத்தைத் தொடங்கி வைத்ததோடு அவரும் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போதைய அமித் ஷாவின் பேச்சில் அண்ணாமலை மீது அவர் வைத்திருக்கும் அபார நம்பிக்கை வெளிப்பட்டது.
அண்ணாமலை தலைமையில் தமிழ்நாடு பாஜகவில் கட்சிக்கு உள்ளும் சரி கூட்டணியிலும் சரி பல்வேறு சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்த நிலையிலும் அமித் ஷா அவர் மீது பெரியளவில் நம்பிக்கை வைக்க என்ன காரணம்? அண்ணாமலையின் இந்த நடைபயணம் தமிழக அரசியலில் புயலை கிளப்புமா?
திமுக ஆட்சியை விமர்சித்த அமித் ஷா
நடைபயணம் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "பிரதமர் மோதி ஒரு சாமானியன். தற்போது இந்தியாவில் சாமானியர்களுக்கான சாமானியர்களின் ஆட்சி நடக்கிறது.
குஜராத்தில் இருந்து வந்த ஒரு சாமானியன் இந்த 9 ஆண்டுகளில் இந்திய மக்களை பெருமைப்படுத்தி இருக்கிறார். பாரத தாய் விழித்து எழுந்திருக்கிறார். ஆனால் தமிழ் தாய் விழித்து எழுந்துவிட்டாளா என்பதுதான் தற்போதைய கேள்வி.
ஒரு சாமானியன் இந்த அரசில் பங்கேற்க முடியும் என்ற நிலைமை தமிழகத்தில் உள்ளதா என்றால் இல்லை. தமிழகத்தில் நடக்கும் அரசு என்பது ஒரு குடும்பம் சார்ந்து அவர்களுக்காக கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகச் செயல்படும் அரசு இயந்திரமாக இருக்கிறது," என்று கூறினார்.
மேலும், தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை இந்த யாத்திரை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாத யாத்திரையை 'பாவ யாத்திரை' என விமர்சித்த முதல்வர்
நேற்று அமித் ஷா திமுக ஆட்சியையும் மு.க.ஸ்டாலின் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த நிலையில், இன்று மு.க.ஸ்டாலின் திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலையின் பாத யாத்திரையை விமர்சித்துப் பேசியுள்ளார்.
அதில் பேசியவர், “பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல, பாவ யாத்திரை” என்று கடுமையாக விமர்சித்தார்.
மேலும், “பாத யாத்திரையை தொடங்கி வைக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தமிழகம் வந்தார். பாஜக நடத்துவது பாத யாத்திரை அல்ல,” என்று குறிப்பிட்டவர், “குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நடந்தவற்றுக்கும் தற்போது மணிப்பூரில் நடந்து கொண்டிருப்பதற்கும் மன்னிப்பு கேட்கும் பாவ யாத்திரை,” என்று கூறினார்.
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரலாமா?
நடைபயணத்தின் தொடக்கவிழாவில் பேசிய அமித் ஷா, "எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஏழைகளுக்கான நலத் திட்டங்களை இந்த பயணம் மீண்டும் கொண்டு வரும்.
தமிழகத்தில் குடும்ப ஆட்சியை ஒழிக்கவும், ஊழலில் இருந்து தமிழகத்தை விடுவிக்கவும், சட்டம் ஒழுங்கை சீர்படுத்தவும் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது," என்றார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, "நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு என்றால் அது திமுக அரசுதான். அமலாக்கத்துறையால் ஊழல் வழக்கில் அமைச்சர் ஒருவர் கைதாகி சிறையில் இருக்கிறார்.
சிறையில் இருப்பவர் அமைச்சராக நீடிக்கலாமா?
கைதாகி சிறையில் இருக்கும் அமைச்சரிடம் ராஜினாமா செய்யும்படி முதலமைச்சர் கூறமாட்டார். ராஜினாமா கடிதத்தை வாங்கினால், அவர் எல்லா ரகசியத்தையும் வெளியே சொல்லிவிடுவார் என்பது முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியும்," என விமர்சித்தார்.
அண்ணாமலையின் ட்வீட்டால் ஆட்சியில் பூகம்பம்
மேலும், "அண்ணாமலை ஒரு ட்வீட் போட்டாலே திமுக ஆட்சிக்கு பூகம்பம் ஏற்படுகிறது. அப்படியென்றால், இந்த நடைபயணத்தின் முடிவில் என்ன ஆகும்?
சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என ஆசை. ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று விருப்பம்.
லாலு பிரசாத் யாதவுக்கு பிகாரில் தனது மகன் தேஜஸ்வி யாதவை முதலமைச்சராக்க வேண்டும் என ஆசை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு தனது மருமகனை முதலமைச்சராக்க ஆசை. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரேவிற்கு தனது மகனை முதலமைச்சராக ஆசை.
அவர்கள் நாட்டையோ, தமிழ்நட்டையோ வலுப்படுத்த விரும்பவில்லை, தனது குடும்ப உறுப்பினர்களை வளப்படுத்தவே விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு இந்த நடைபயணம் முடிவுகட்டும்," என்றும் அமித்ஷா பேசியிருந்தார்.
அண்ணாமலை மீது முழு நம்பிக்கை
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதிமுகவின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை நாளிதழ் ஒன்றுக்குக் கொடுத்த பேட்டி இரு கட்சிகளுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.
அதிமுக தலைவர்கள் பலரும் அண்ணாமலையை விமர்சித்திருந்தனர். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கெனவே, பாஜகவை சேர்ந்த ஒருசிலர் அண்ணாமலை மீது அதிருப்தி தெரிவித்து அந்தக் கட்சியில் இருந்து விலகியது, உட்கட்சியில் அண்ணாமலை மீது எதிர்ப்பு அலை இருப்பதாகச் சொல்லப்படுவது போன்ற சூழல் நிலவுகிறது. இதனுடன் சேர்த்து அதிமுகவுடனான அண்ணாமலையின் போக்கும் அவருக்கு கட்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பேசப்பட்டது.
ஆனால், இந்த சர்ச்சைகளுக்கு நடுவில் தமிழகம் வந்திருந்த அமித் ஷா, அண்ணாமலையை வெகுவாகப் புகழ்ந்து பேசியிருந்திருந்தார்.
வேலூரில் நடைபெற்ற பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், "என் அன்புத் தம்பி அண்ணாமலை பட்டி தொட்டியெங்கும் பெயர் எடுத்துள்ளார்," என்று கூறியததோடு அண்ணாமலையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும், அவர் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் பாராட்டி இருந்தார்.
இதேபோல், சென்னை தாம்பரத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், "நான் நீண்ட நாட்களாக அரசியலில் இருக்கிறேன். ஒருவரை பார்த்தாலே அவரைப் பற்றிக் கூறிவிட முடியும். அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு மட்டும் தலைவர் அல்ல மொத்த இந்தியாவுக்கும் தலைவராக வருவார்," என்று கூறினார்.
அண்ணாமலையின் அணுகுமுறை மேலிடத்திற்கு பிடித்துள்ளதா?
பாஜகவின் மேலிடம் இந்த அளவுக்கு அண்ணாமலைக்கு முக்கியத்துவம் தருவது ஏன், தற்போது அவர் தொடங்கியுள்ள நடைபயணம் எந்த அளவுக்கு பலன் தரும் என்று மூத்த ஊடகவியலாளர்களிடம் பேசினோம்.
"பாஜக தொடங்கி பல ஆண்டுகள் ஆனாலும் 2014ஆம் ஆண்டில் மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் கவனம் பெறத் தொடங்கியது. இதற்கு முன்பு தமிழக பாஜகவில் பலர் தலைவராக இருந்துள்ளனர்.
இருப்பினும், பிற கட்சிகள் மீது ஊழல் புகார் கொடுப்பது போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டது இல்லை. இதை அண்ணாமலை துணிந்து செய்கிறார். அவர் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பது காலப்போக்கில்தான் தெரியவரும்," என்கிறார் மூத்த ஊடகவியலாளர் ப்ரியன்.
தமிழ்நாட்டில் பாஜக என்ற கட்சி இருக்கிறது என்பதற்கான தோற்றத்தை அண்ணாமலை ஏற்படுத்துவதாகக் கூறிய ப்ரியன், திராவிட கட்சிகள் மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறும் அவரது அணுகுமுறை பாஜக தலைமைக்கு பிடித்துள்ளது என்றும் விளக்கினார்.
அதனால்தான் "அண்ணாமலை மீது புகார்கள் கூறப்பட்டாலும் தொடர்ந்து அவருக்கு பாஜக தலைமை ஆதரவாக இருக்கிறது," என்றும் ப்ரியன் தெரிவித்தார்.
"மூன்றாவது முறையாக பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோதி முன்னிலைப்படுத்தப்படும் சூழலில் தமிழகத்தில் அண்ணாமலை அவருக்கு ஒரு கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறார்.
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக 1.5 சதவீதம் வாக்கு பெறும் என்ற எண்ணம் நிலவியபோது அதை 5 சதவீதமாக அண்ணாமலை உயர்த்தினார்.
அந்த அளவுக்கு கட்சிக்கு சாதகமாக இருக்கும் அண்ணாமலையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுகொடுப்பதற்கு டெல்லி தலைமை தயாராக இல்லை," என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி.
மேலும், 2024 மக்களவை தேர்தலுக்குப் பிறகு மிகப் பெரிய பதவியையும் பாஜக தலைமை அவருக்குத் தரக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.
"மக்களவைத் தேர்தலுக்கான இடப் பங்கீட்டில் அதிமுகவிடம் இருந்து இரட்டை இலக்க இடங்களைப் பெற்றுவிட்டாலே அண்ணாமலைக்கு வெற்றிதான்.
அதற்கு இந்த நடைபயணம் உதவுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமியும் அவ்வளவு சீக்கிரத்தில் இடங்களை விட்டுக்கொடுக்க மாட்டார். எனவே, இடப்பங்கீடு, கூட்டணி போன்றவற்றை வைத்தே அண்ணாமலையின் முயற்சி வெற்றியா தோல்வியா என்பதைப் பார்க்க முடியும்," என்றார் ரவீந்திரன் துரைசாமி.
2024 தேர்தல் முடிவு - அண்ணாமலைக்கு பலப்பரீட்சை
அண்ணாமலையின் நடைபயணம் பலனளிக்குமா என்பதை 2024 தேர்தல் முடிவுகள் மூலம்தான் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறுகிறார் ஊடகவியலாளர் ப்ரியன்.
"எல்.முருகன் தமிழக பாஜக தலைவராக இருந்தபோது வேல்யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டார். அதுவும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடைபெற்றது. அதேபோல் தற்போது பாஜக திட்டமிட்டுள்ளதையும் முழு நடைபயணம் என்று கூறிவிட முடியாது. சில இடங்களில் அது பேருந்து பயணமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் அமித் ஷா கலந்துகொண்ட நடைபயணத்தின் தொடக்க விழாவில் பிரதான கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.
தேமுதிக சார்பில் முக்கிய தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதுதான் அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜகவுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம்.
சமூக ஊடகங்களில் பாஜக தீவிரமாக இயங்கி வருகிறது. சமூக ஊடகங்களில் இருக்கும் பாஜகவை தனது நடைபயணத்தின் மூலம் சமூகத்திற்கு இடையேயும் அண்ணாமலை கொண்டு செல்வாரா என்பதற்கு 2024 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் கிடைக்கும் ரிசல்ட் மூலம்தான் பதில் கிடைக்கும்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்