You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் சாரிதேவி - என்ன நடந்தது?
ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில்ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது பெயர் சாரிதேவி ஜமானி.
2018 ஆம் ஆண்டு 30 கிராம் ஹெராயின் கடத்தியதாக 45 வயதான சிங்கப்பூர் நாட்டவர் சாரிதேவி ஜமானி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
மூன்றே நாள்களில் போதைப் பொருள் குற்றத்துக்காக தூக்கிலிடப்படும் இரண்டாவது நபர் இவராவர். மூன்று நாள்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது அஜீஸ் தூக்கிலிடப்பட்டார். கடந்த மார்ச் 2022 முதல் இதுவரை 14 பேர் இந்தக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. அவை சமூகத்தைப் பாதுகாக்க அவசியம் என்று அவை வலியுறுத்துகின்றன.
முன்னதாக 50 கிராம் ஹெராயின் கடத்தியதாக அஜீஸ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். சிங்கப்பூரில் 15 கிராமுக்கு மேல் ஹெராயின் மற்றும் 500 கிராமுக்கு மேல் கஞ்சா கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம், சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர் தங்கராஜூ சுப்பையா, 1 கிலோ கஞ்சாவை கடத்தியதற்காக தூக்கிலிடப்பட்டார். அவர் அந்த கஞ்சாவை தொட்டதே இல்லை. எனினும் மொபைல் போன் மூலம் விற்பனையை ஒருங்கிணைத்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சாரிதேவி ஜமானியின் வழக்கு குறித்து சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் பணியகத்திடம் பிபிசி கேட்டபோது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
எனினும் அவருக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்று இதற்கு முந்தைய தனது அறிக்கையில் அந்த அமைப்பு விளக்கம் அளித்திருந்தது. சாரிதேவியின் தண்டனைக்கு எதிரான அவரது மேல்முறையீடு 2018 இல் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தது.
பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன், சிங்கப்பூரின் மரணதண்டனையை மீண்டும் விமர்சித்துள்ளார். மரண தண்டனை என்பது குற்றத்திற்கு எதிரான ஒரு தடுப்பு அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
"சிறிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவி தேவை. ஏனெனில் அவர்களில் பெரும்பாலானவர்கள் சூழ்நிலைகளில் சிக்கியிருக்கிறார்கள்" என்று பிரான்சன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழுவான டிரான்ஸ்ஃபார்மேடிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ் என்ற அமைப்பின் தகவல்படி, சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் சரிதேவியும் ஒருவர்.
2004 ஆம் ஆண்டு சிகையலங்கார நிபுணர் யென் மே வூனுக்குப் பிறகு, சிங்கப்பூரில் தூக்கிலிடப்படும் முதல் பெண் இவரே என்று மனித உரிமைக் குழு தெரிவித்துள்ளது. அவரும் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார்.
இஸ்லாமிய நோன்பு மாதத்தில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ஹெராயின் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்ததாக சரிதேவி விசாரணையின் போது ஒப்புக் கொண்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹெராயின், மெத்தாம்பேட்டமைன் போன்ற போதைப் பொருட்களை தனது குடியிருப்பில் இருந்து விற்பனை செய்வதை அவர் மறுக்கவில்லை. ஆனாலும் போதைப் பொருளின் அளவை அவர் குறைத்துக் கூறினார் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
கடுமையான போதைப்பொருள் சட்டங்கள் சிங்கப்பூரை உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக வைத்திருக்க உதவுகின்றன என்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்படுவது பரவலான மக்கள் ஆதரவைப் பெற்றிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் மரண தண்டனைக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் இதை மறுக்கின்றனர்.
"மரண தண்டனை குற்றங்களைத் தடுக்கிறது என்பதற்கோ போதைப் பொருள் பயன்பாட்டைக் குறைக்கிறது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை" என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
"மரணதண்டனைகள் கூறும் ஒரே செய்தி என்னவென்றால், சிங்கப்பூர் அரசு மரண தண்டனையைப் பயன்படுத்துவதற்கான சர்வதேச நியதிகளை மீண்டும் மீறத் தயாராக உள்ளது என்பதே" என்று அவர் கூறினார்.
சீனா, ஈரான், சௌதி அரேபியா ஆகியவற்றுடன் சமீபத்தில் போதைப்பொருள் தொடர்பான மரணதண்டனைகளை நிறைவேற்றிய நான்கு நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று என்று சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரின் கடுமையான விதிகள் அதன் அண்டை நாடுகளின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு முரணாக உள்ளன.
தாய்லாந்து அரசாங்கம், கஞ்சா வர்த்தகத்தை சட்டபூர்வமாக்கியுள்ளது. அதே நேரத்தில் மலேசியா கடுமையான குற்றங்களுக்கான கட்டாய மரண தண்டனை விதித்தலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்