டிடிஎஃப் வாசன் ஓட்டுநர் உரிமம் 2033 வரை ரத்து: காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ அதிரடி

டிடிஎஃப் வாசன், யூடியூப், சென்னை உயர்நீதிமன்றம்

யூடியூப் பிரபலமான டிடிஎஃப் வாசனின் பைக்கை ‘எரித்துவிடலாம்’ என சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்த நிலையில், அவரது ஓட்டுநர் உரிமத்தை காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

2023 அக்டோபர் 6 ஆம் தேதி முதல், 2033 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய விவகாரத்தில் கைதாகி புழல் சிறையில் உள்ளார் டி.டி.எஃப். வாசன்.

அதிவேகமாக மோட்டர் பைக்கை ஓட்டி விபத்தைச் சந்தித்த யூடியூப் பிரபலம் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரது பைக்கை எரித்துவிடலாம் என்றும் அவரது யூடியூப் சேனலை முடக்கிவிடலாம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

டிடிஎஃப் வாசன், யூடியூப், சென்னை உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், Screengrab

படக்குறிப்பு, டி.டி.எஃப். வாசனை பாலுச்செட்டி சத்திரம் காவல்துறையினர் அவரை செப்டம்பர் 19-ஆம் தேதியன்று கைதுசெய்தனர்

என்ன வழக்கு?

கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதியன்று சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுச்செட்டி சாத்திரம் அருகே பைக்கில் அதிவேகமாகச் சென்ற டி.டி.எஃப் வாசன், கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். வீலிங் செய்ய முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த அவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதற்குப் பிறகு, அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த பாலுச்செட்டி சத்திரம் காவல்துறையினர் அவரை செப்டம்பர் 19-ஆம் தேதியன்று கைதுசெய்தனர். அவருக்கு அக்டோபர் 4-ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

அதற்கு நடுவில் சிகிச்சைக்காகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த காலகட்டத்திலேயே தனக்கு ஜாமீன் கோரி மூன்று முறை நீதிமன்றத்தை அவர் அணுகினார். மூன்று முறையும் அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று நான்காவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்றோடு அவரது நீதிமன்றக் காவலும் முடிவுக்கு வந்தது.

இதனால், இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

டிடிஎஃப் வாசன், யூடியூப், சென்னை உயர்நீதிமன்றம்
படக்குறிப்பு, நீதிபதி டி.டி.எஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு சிறையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்

‘டி.டி.எஃப் வாசனின் பைக்கை எரித்து விடலாம்’

அப்போது அவரது காவலை அக்டோபர் 16-ஆம் தேதிவரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவருக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.டி.எஃப் வாசன் தரப்பினர் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் தான் வீலிங் செய்யவில்லையென்றும் கால்நடைகள் குறுக்கிட்டதால் திடீரென பிரேக் போட்டதாகவும் அதனால்தான் விபத்து ஏற்பட்டு தூக்கி வீசப்பட்டதாகவும் வாசன் தரப்பு கூறியிருந்தது. ஆகவே தனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. அந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

டி.டி.எஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. “விபத்தின்போது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு ஆடை அணிந்திருந்ததால் அவர் உயிர் தப்பினார். அவருடைய யூடியூப் சேனலை 45 லட்சம் பேர் பின்தொடர்ந்து தவறான வழிக்கு செல்கின்றனர்," என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.

மருத்துவக் காரணங்களுக்காக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என டி.டி.எஃப் வாசன் தரப்பில் கோரப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "இது போன்ற செயலில் ஈடுபடும் டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை மூடிவிடலாம். அவரது பைக்கை எரித்து விடலாம்" என்று கருத்தைத் தெரிவித்து, டி.டி.எஃப் வாசனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அவருக்கு சிறையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

டிடிஎஃப் வாசன், யூடியூப், சென்னை உயர்நீதிமன்றம்

பட மூலாதாரம், YOUTUBE/TWIN THROTTLERS

படக்குறிப்பு, டி.டி.எஃப் வாசனின் இயயற்பெயர் வைகுண்ட வாசன்

யார் இந்த டி.டி.எஃப் வாசன்?

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டி.டி.எஃப் வாசன் என்ற வைகுண்ட வாசன். இவர் தனது பைக்கை வேகமாக ஓட்டி, அதனை யு டியூபில் நேரலை செய்வதன் மூலம் பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களை ஈர்த்துவந்தார். அவருடைய யூடியூப் சேனலை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.

இதற்கு முன்பாக, இன்னொரு யூடியூபரான ஜி.பி.முத்துவை பைக்கில் அமரவைத்துக்கொண்டு, கோவை பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கிரி அருகே வேகமாக வாகனத்தை இயக்கி, அதனை வீடியோவாக வெளியிட்டார்.

இதனை அடிப்படையாக வைத்து போத்தனூர் காவல்துறையினர் இ.பி.கோ. 279, மோட்டார் வாகன சட்டம் 184 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் யூடியூபர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டதற்காக, அந்த நிறுவனம் அளித்த புகாரில் காரமடை காவல்துறையினர் வாசன் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)