You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கட்சி மாறிய விஜயதரணி - பா.ஜ.க.வில் என்ன எதிர்பார்க்கிறார்?
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்களில் ஒருவரான விஜயதரணி தற்போது பாஜக தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து தனது காங்கிரஸ் உறுப்பினர் பொறுப்பையும், சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் விட்டு விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
2024 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? இது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்க்கலாம்.
பாஜகவில் இணைந்த விஜயதரணி
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ். விஜயதரணி. அது மட்டுமின்றி நீண்ட காலமாகவே காங்கிரஸ் கட்சியில் மாநில மற்றும் அகில இந்திய அளவிலான பொறுப்புகளை அவர் வகித்து வந்தார்.
2024 மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைமை மாற்றியமைக்கப்பட்டு புதிய தலைவராக கு.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அப்போதே கட்சிக்குள் சலசலப்பு எழுந்தது. குறிப்பாக அதன் பிறகு வந்த நாட்களில் விஜயதரணி பாஜகவில் இணைய உள்ளார் என்று பல முன்னணி ஊடகங்களும் தெரிவித்து வந்தன.
அதனை உறுதி செய்யும் வகையில் அவரும் டெல்லியிலேயே முகாமிட்டிருந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, விஜயதரணி ஒரு வழக்குக்காக டெல்லி சென்றுள்ளதாகவும், அவர் போன்ற திறமையானவர்களை அப்படியெல்லாம் பாஜக வலைக்குள் சிக்க வைக்க முடியாது என்றும் கூறினார்.
இந்நிலையில், சனிக்கிழமையன்று(24.2.2024) டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் எஸ்.விஜயதரணி.
பாஜகவில் இணைய காரணம் என்ன?
சமீப காலமாகவே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான விஜயதரணிக்கு தலைமை பொறுப்பு கொடுக்காத காரணத்தால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்தும், அவர் பாஜக சென்றதற்கான காரணம் குறித்தும் அவரிடம் கேட்டோம்.
டெல்லியில் பாஜக தலைமை அலுவலக பரபரப்புகளுக்கு மத்தியில் நம்மிடம் பேசிய அவர், “ காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பெண்களை தலைவர்களாக பார்க்கவோ, ஏற்கவோ அவர்களுக்கு மனநிலை இல்லை. பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.”
“ஒரு கட்சியின் சட்டமன்ற தலைவர் பொறுப்புக் கூட தர மறுக்கிறார்கள். ஆனால், முத்தலாக்கில் இருந்து விடுதலை, பெண்களுக்கான சொத்துரிமை என பாஜக பெண்களுக்கான பல முன்னேற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கட்சி முதல் நாடாளுமன்றம் வரை பல பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. எனவே அந்த கட்சியில் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.
மேலும், “பாஜக ஆட்சியில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பல மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். கன்னியகுமாரியிலும் தேசிய சாலை திட்டம் முதல் பல மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன.” என்றார் அவர்.
அதே போல், பாஜக வாய்ப்பளித்தால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
"பாஜக சித்தாந்தமே பெண்களை வீட்டுக்குள் அடக்குவது தானே!"
தமிழக காங்கிரஸ் பெண் தலைவர்களில் ஒருவரும், கரூர் மக்களவை உறுப்பினருமான ஜோதிமணியிடம் விஜயதரணியின் கட்சி மாற்றம் குறித்தும், காங்கிரசில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்தும் கேட்டோம்.
இதற்கு பதிலளித்த அவர், “பெண்களுக்கு எங்குமே சரியான இடம் கிடையாது தான். எங்கும் சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்க மாட்டார்கள், அழுத்தங்கள், பிரச்னைகள், ஒதுக்குதல் என எல்லாமே இருக்கும். அதை எதிர்த்து போராடிதான் வர வேண்டும். அதற்காக அப்படியே எதிர் சித்தாந்தம் உள்ள கட்சியில் சென்று சேருவது எப்படி சரியான பாதையாக இருக்கும். நீண்டகாலமாக பயணித்த ஒரு தலைவர், அதுவும் ஒரு பெண் தலைவர் இப்படி செய்வது எப்படி சரியாக இருக்கும்” என்றார் அவர்.
“பாஜகவின் சித்தாந்தமே பெண்களை வீட்டுக்குள் அடக்கி வைக்க சொல்வது தானே. அதுவே பெண்களுக்கு எதிரானது தானே? நாடு தற்போது எதிர்நோக்கி இருக்கும் பிரச்னையில் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்பது இருக்கிறது. அல்லவா? பாஜக பெண்களுக்கு ஆதரவு தரும் கட்சியா என்ன?”
“அந்த கட்சியின் பல தலைவர்கள் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் நபர்களுக்கு, குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தரும் நபர்களாக தானே இருக்கிறார்கள். அதற்கு நிஹல் சந்த் ஒரு உதாரணம் இல்லையா, காஷ்மீரில் பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக பாஜக பேரணி நடத்தியது உதாரணமில்லையா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் அவர்.
பா.ஜ.க. கூறுவது என்ன?
தற்போது விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள பாஜகவின் மாநிலத்துணை தலைவர் நாராயணன் திருப்பதி அவர்களை தொடர்புக் கொண்டோம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மரியாதை இல்லை, முக்கியத்துவம் இல்லை என்பதை விஜயதரணி மிகத்தெளிவாக கூறியிருக்கிறார். நீண்ட கால அரசியல் அனுபவம் வாய்ந்த அவர், மோதி அவர்களின் ஆட்சியின் சாதனைகளை புரிந்துக் கொண்டு பாஜகவில் சேர்ந்ததை வரவேற்கிறோம். இன்னும் அங்கிருந்து பலரும் சீக்கிரம் பாஜகவில் வந்து இணைவார்கள் என்று எதிர்பார்க்கலாம்” என்றார்.
மேலும் பெண்களுக்கான முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், “நிர்மலா சீதாராமன், சுஷ்மா ஸ்வராஜ், தமிழிசை சவுந்தர்ராஜன், வசுந்தரா ராஜே சிந்தியா என பதவியில் இருந்த பல பெண் தலைவர்களை பாஜகவால் கூற முடியும். இதே காங்கிரசால் முடியுமா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.”
பாஜக பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவு வழங்குவதாக விமர்சனம் முன்வைக்கப்படுவது குறித்து கேட்டபோது, “யார் வேண்டுமானாலும் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் சுமத்தலாம். யாரோ ஒரு நபர் தவறு செய்தால் ஒட்டுமொத்த கட்சியையும் சொல்ல கூடாது. பாஜக ஒட்டுமொத்தமாக பெண்களுக்கு என்ன செய்துள்ளது என்பதை பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார் அவர்.
"அரசியல் வாழ்க்கைக்கு முடிவு"
ஆனால், தனது முடிவின் மூலம் தனது அரசியல் வாழ்க்கையையே முடித்துக் கொண்டுவிட்டார் விஜயதரணி என்கிறார் பத்திரிகையாளர் பிரியன்.
விஜயதரணி பாஜகவில் இணைந்தது குறித்து பேசுகையில், “ஆந்திராவில் இருக்கும் மாநில தலைவரே பெண் தானே? உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சொல்லுங்கள். கடந்த பல ஆண்டுகளாகவே நீங்கள் சந்தேகத்திற்கிடமான ஆளாக இருந்ததால் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அவ்வளவுதான். கரூரில் ஜோதிமணிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அவர் பெண் இல்லையா?” என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
மேலும், “பாஜகவில் பெண்களுக்கு என்ன நிலைமை என்று கௌதமி மற்றும் காயத்ரி ரகுராமிடம் கேட்டாலே தெரியும். இல்லை இவர் டெல்லியில் தான் இருக்கிறார் என்பதால் மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷனிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளட்டும். இப்படி பெண்களுக்கு அதிக மரியாதை கொடுக்கும் பாஜகவில் அவர் இணைந்துள்ளது அவரது அரசியல் புரிதல் போதாமையையே காட்டுகிறது” என்கிறார் அவர்.
“இவர் பாஜகவிற்கு சென்றதை விளவங்கோடு காங்கிரஸ் கட்சி தொண்டர்களே இனிப்பு கொடுத்து கொண்டாடுகின்றனர். அந்தளவுக்கு அவர்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். ஒரு தேசிய கட்சியில் தனிமனித பிரச்னைகள் இருக்கும் தான். ஆனால் உங்களுக்கு மூன்று முறை எம்எல்ஏ வாய்ப்பு கொடுத்து கட்சிக்கு துரோகம் செய்யலாமா? இப்படி குலாப் நபி ஆசாத், அசோக் சவாண் என்று ஒரு பட்டியலே உள்ளது.”
நாளைக்கு கன்னியாகுமரியில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் கூட அங்கு இருக்கும் பாஜகவினரே இவருக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்கிறார் பிரியன்.
‘தமிழ்நாடு மன்னிக்காது’
விஜயதரணியின் துரோகத்தை தமிழ்நாடு மன்னிக்காது என்று காங்கிரஸின் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் காட்டமாக தெரிவித்தார். விஜயதரணியின் திடீர் முடிவு குறித்து அவரிடம் கேட்டபோது, “பாஜகவில் எத்தனை பெண் தலைவர்கள் இருக்கிறார்கள்? அங்கு முதலில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. ஆனால், அங்குதான் இவர் இணைந்திருக்கிறார். இவரது துரோகத்தை தமிழ்நாடோ, கன்னியாகுமாரியோ, விளவங்கோடோ ஒரு போதும் மன்னிக்காது. பெண்களிலும் பதவியாசை பிடித்த எட்டப்பர்கள் இருப்பார்கள் என்பதற்கு இவரே சிறந்த உதாரணம். பாஜகவிற்கு சென்று அவர் தேர்தலில் நின்றாலும் கூட வெற்றிபெற எந்த வாய்ப்பும் இல்லை.” என்றார் அவர்.
அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், “அவரை தகுதிநீக்கம் செய்யக்கோரி சட்டமன்றத்தில் கடிதம் கொடுக்க உள்ளோம். ஏற்கனவே கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து அவரே ராஜினாமா செய்துவிட்டார்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜயதரணி ராஜினாமா செய்துள்ளார். இதனை தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தனது ராஜினாமா கடிதத்தையும் இணைத்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)