பங்காரு அடிகளார் காலமானார்: யார் இவர்? என்ன செய்தார்?

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரான பங்காரு அடிகளார்(83) மாரடைப்பு காரணமாக காலமானார். அவர் நிறுவிய ஆதிபராசக்தி ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம், மாதவிடாய் காலத்திலும் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம் என்ற வழிமுறைகளை அறிமுகம் செய்ததால், 1980களில் மிகவும் பிரபலம் அடைந்தவராக இருந்தார்.

மேல்மருவத்தூரைச் சேர்ந்த பங்காரு அடிகளார், பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் வசித்த பகுதியில், அருள்வாக்கு சொல்வதில் தொடங்கி, ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தை நடத்தியதில் பிரபலம் அடைந்தார். ஆதிபராசக்தியின் வெளிப்பாடாகத் தன்னை அவர் அறிவித்துக்கொண்டதால், அவருக்கு பக்தர்கள் அதிகரிக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் அவரை 'அம்மா' என்று அழைத்தனர்.

அவரின் வழிபாட்டு மன்றங்கள் காஞ்சிபுரத்தை அடுத்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் 1980களின் தொடக்கத்தில் பரவியது. தற்போது, 7,000க்கும் மேற்பட்ட பங்காரு அடிகளாரின் வழிபாட்டு மன்றங்கள் இந்தியா உள்பட 10 நாடுகளில் செயல்படுவதாக அவர் நடத்தி வந்த அறக்கட்டளை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலைக்கு ஆண்கள் மட்டும் மாலை போட்டுச் செல்வது போல, பெண்கள் மாலை போட்டுக்கொண்டு ஆதிபராசக்தி கோவிலுக்கு வரும் வழிமுறையை அவர் கொண்டு வந்ததால், பல கிராமங்களில் இருந்தும் பெண்கள் கூட்டமாக அவரது கோவிலுக்கு வந்தனர்.

பின்தொடர்ந்த சர்ச்சைகள்

ஒரு கட்டத்தில், அவரது அறக்கட்டளை மூலமாக, மேல்மருவத்தூர் பகுதியில் ஏராளமான கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், கடைகள் இவரின் கீழ் தொடங்கப்பட்டன. 2019இல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. தமிழ்நாட்டில் உள்ள பிரதான அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் இவரது பக்தர்களாக இருந்து வருகின்றனர்.

பெண் பக்தர்களை அதிகளவில் ஆதிபராசக்தி வழிபாடு மூலமாகத் தன்பக்கம் திருப்பிய இவர் மீது சர்ச்சைகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, இவரது கல்வி நிறுவனங்களில் அதிக அளவு சேர்க்கை கட்டணம் (capitation fee) வசூலிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தீவிர வருமான வரி சோதனைகள் 2010இல் நடைபெற்றன.

பங்காரு அடிகளாரின் வீட்டை சோதனை செய்த அதிகாரிகள், அவரது படுக்கை அறை உள்பட அவரின் வீட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்பது கோடி ரூபாய் பணத்தை மீட்டதாக செய்திகள் வெளியாகின. அவரது கல்வி நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் கணக்கு காட்டப்படாத பணம் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அதேபோல, அவரது அறக்கட்டளையின் கீழ் செயல்பட்ட மருத்துவக் கல்லூரியில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளை மீறியதாக மத்தியப் புலனாய்வுத் துறை வழக்கு ஒன்றையும் பதிவு ஜூலை 2010இல் செய்தது.

விமர்சனத்திற்கு உள்ளான பத்மஸ்ரீ விருது

அடுத்ததாக, 2012இல் பங்காரு அடிகளார் மற்றும் அவரது மனைவி லஷ்மி ஆகியோர் நிர்வகிக்கும் ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்புக்கான அனுமதி பெறுவதற்காக இந்திய பல் மருத்துவக் கழகத்திடம் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பத்திருக்கிறது.

அந்த அனுமதியைப் பெறுவதற்கு, கல்லூரியின் நிர்வாகிகள் சிலர், இந்திய பல் மருத்துவக் கழகத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக சர்ச்சை எழுந்ததது. அதில், கல்லூரி நிர்வாகத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் கைதாகினர்.

கடந்த 2019ஆம் ஆண்டு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கபட்டபோது, சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான ஒரு நபருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டது சரியல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா அப்போது விமர்சித்திருந்தார்.

மார்ச் 2022இல் திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேரு, பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாக ஒரு புகைப்படம் வெளியானது. அதில், பங்காரு அடிகளார் நாற்காலியில் அமர்ந்த நிலையிலும், நேரு கீழே தரையில் அமர்ந்த நிலையிலு இருந்த படம் வைரலானது. அந்தப் புகைப்படத்ம் சமூக ஊடகங்களில், அதிக விமர்சனத்திற்கு உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)