லியோ பட விமர்சனம்: விஜய்க்கு இன்னொரு 'கில்லி'யாக காலம் கடந்து நிலைக்குமா?

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘லியோ’ படம் இன்று (வியாழன், அக்டோபர் 19) ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்திடையே வெளியாகியுள்ளது.

பல சிக்கல்களையும் சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களுக்கு இடையே வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்கள் விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்றன.

இந்தப் படம் என்ன மாதிரியான விமர்சனங்களைப் பெற்று வருகிறது? படம் எப்படி இருக்கிறது?

முக்கியமாக, 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் - LCU' வெற்றி பெற்றதா?

பொதுவாக எல்லா விமர்சனங்களும் இந்தப் படம் 'A History of Violence' என்ற ஆங்கில திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றன.

இருந்தாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை சற்று தொய்வடைவதால் இப்படம் அசலான படமாக அமையவில்லை எனவும் பெரும்பாலான விமர்சனங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதோடு, ஊடக விமர்சனங்கள் லோகேஷ் சினிமேடிக் யூனிவர்ஸுக்கான தொடர்பு வலிந்து திணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.

விஜய்யின் ‘ஒன் மேன் ஷோ’

‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ், லோகேஷ் கனகராஜ், நன்கு அறியப்பட்ட பழைய கதையான ‘ஊரை விட்டு வெளியேறி வாழும் ஹீரோ’ கதையைத் தேர்ந்தெடுத்து, அதை படைப்பூக்கமுள்ள ஆக்ஷன் காட்சிகளுடன் அழகுபடுத்தியுள்ளார், என்று கூறியிருக்கிறது. இந்தப் படத்தில் ரத்தம் அதிகமாகவே இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.

“தியேட்டருக்குள் நுழைந்த அரை மணிநேரத்திற்குள் படத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடிந்தாலும், லோகேஷ் தனது ‘புதுமையான வன்முறை மற்றும் அதிரடி காட்சிகளில்’ ஜொலிக்கிறார்,” என்று எழுதியிருக்கிறது.

மேலும், இப்படத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தாலும், இது ஒரு ‘ஒன் மேன் ஷோ’, படத்தில் விஜய் ஜொலிக்கிறார் என்றும் எழுதியிருக்கிறது.

திரிஷா, வெறுமனே நாயகனுக்கு ஜோடியாக மட்டும் சில காட்சிகளில் தோன்றாமல், அவரது கதாபத்திரத்துக்கும் நல்ல கவனம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

‘லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்’ எனப்படும் LCU படங்களான கைதி, விக்ரம் ஆகியவை முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்களாக இருந்தபோதும் விக்ரம் படத்தில் குடும்ப சென்டிமென்ட் இருந்தது.

ஆனால், லியோ படத்தில் இருக்கும் குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் படத்தின் அதிரடி நகர்வைப் பாதிக்கிறது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா எழுதியிருக்கிறது.

அதேநேரம், ‘LCU’ பகுதியும் வலிந்து திணிக்கப்பட்டதுபோல் தெரிந்தாலும், ‘லியோ’ படத்தின் மூலம் அடுத்த படத்திற்கான வலுவான கதையைப் பெற்றுள்ளார் என்று, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.

லியோ விஜய்க்கு இன்னொரு ‘கில்லி’ ஆனதா?

இந்து தமிழ் திசை, தனது விமர்சனத்தில், இப்படம், விஜய்யின் ஹிட் லிஸ்ட்டில் இன்னொரு படமாக அமைந்திருப்பதாகத் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறது.

அதிவேகமாக நகரும் படத்தின் முதல் பாதி போலவே இரண்டாம் பாதியும் அமைந்திருந்தால், ‘லியோ இன்னொரு கில்லியாக காலம் கடந்தும் விஜய்யின் மகுடத்தில் நின்றிருக்கும்,’ என்று கூறியிருக்கிறது.

“படத்தின் ஆகப் பெரும் குறை, உருக்கமான செண்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களிடையே எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாததுதான். படம் முழுக்க வரிசையாய் வில்லன்கள் இருந்தாலும் யாருடைய கதாபாத்திரமும் அழுத்தத்தை ஏற்படுத்தவில்லை.

சிங்கிள் சீனில் வந்தாலும், ‘ரோலக்ஸ்’ சூர்யா போன்ற மிரட்டல் காட்சிகள் வில்லன்களுக்கு இல்லை,” என்று எழுதியிருக்கிறது தி இந்து தமிழ் திசை.

மேலும், படம் முழுக்கவே தொடர்ந்து சண்டைக் காட்சிகள் வருவதும் அயர்சியைத் தருகிறது என்றும் விமர்சித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் - த்ரிஷா ஜோடி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது என்றும் இந்து தமிழ் திசை எழுதியிருக்கிறது.

படத்தின் திரைக்கதை அதிரடியை தக்க வைத்ததா?

தி இந்தியன் எக்ஸ்பிரெஸ் நாளிதழ், ‘லியோ’ படம் அதிரடியாகத் தொடங்கினாலும், திரைக்கதை இரண்டாம் பாதியில் தொய்வடைவதாக எழுதியிருக்கிறது.

‘A History of Violence’ திரைப்படத்தை மறு உருவாக்கம் செய்திருந்தாலும், இப்படத்தில் அசல் தன்மை இல்லை, என்று கூறுகிறது இந்த விமர்சனம்.

‘இருண்ட கடந்த காலம் கொண்ட நல்ல மனிதன்’ என்னும் கதைக்களம் இந்தியத் திரைப்படங்களில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு கதை வகை என்பதாலும், இப்படத்தில் எழுத்தாளரும் இயக்குநரும் அதை மேலும் மேம்படுத்தத் தவறியதாலும், லியோவின் திரைக்கதை லோகேஷின் திரைக்கதைகளிலேயே சுமாரானதாக இருக்கிறது, என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் கூறியிருக்கிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தைப் போலவே, இந்த விமர்சனமும், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பகுதியாக இப்படம் அமைந்திருந்தாலும், அந்தத் தொடர்பு செயற்கையாகவும் வலிந்து திணிக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது, என்று எழுதியிருக்கிறது.

இது லோகேஷ் யூனிவர்ஸா? விஜய் யூனிவர்ஸா?

ஆங்கில இணைய இதழான ஸ்க்ரோல், லியோ மெதுவாகத் தொடங்கி கிளைமேக்ஸையும் மெதுவாகவே அடைகிறது என்று எழுதியிருக்கிறது.

“இப்படத்தின் திரைக்கதை தேவையான இடங்களில் ஆர்வத்தைத் தூண்டுகிறது, ஆனாலும் இது பழக்கப்பட்ட கதைதான்,” என்று கூறியிருக்கிறது.

மேலும், லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் இந்தப் படம் ஒரு பகுதியாக இருந்தாலும், விஜய்தான் தனது யூனிவர்ஸின் மாஸ்டர் என்று கூறியிருக்கிறது.

அனிருத்தின் இசை எப்படி?

சமீபகாலமாகத் தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவாகி வரும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தின் இசையைப் பற்றி அனைத்து விமர்சனங்களும் பொதுவாகச் சாதகமாகவே எழுதியிருக்கின்றன.

இந்து தமிழ் திசை, “அனிருத் மீண்டுமொரு முறை இளைஞர்களை வசியம் செய்திருக்கிறார். படம் முழுக்கவே அனிருத் இசை விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டங்களை தரத் தவறவில்லை,” என்று எழுதியிருக்கிறது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், அனிருத் ரவிச்சந்தரின் ஒலிப்பதிவும் பின்னணி இசையும் படத்தின் வேகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன என்று கூறியிருக்கிறது.

“அவரது வழக்கமான ‘நட்சத்திர வழிபாட்டு’ இசையமைப்பில் இருந்து விலகி, அனிருத் மிக நல்ல பாடல்களுடன் லியோவுக்கு தனித்துவமான இசையைச் சேர்த்திருக்கிறார்,” என்று கூறியிருக்கிறது.

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, படத்தின் இரண்டாம் பாதியில் அனிருத்தின் இசை உச்சத்தைத் தொடுவதாகக் கூறுகிறது. “முதல் பாதியில் ஒரு மெதுவான பாடல் மற்றும் இரண்டாம் பாதியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘நா ரெடி தான்’ ஆகியவை, படத்தை சமநிலையில் வைத்திருக்கின்றன. ஆனால் முதல் பாதியில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு இன்னும் கொஞ்சம் ஆற்றல் மிகுந்த பின்னணி இசை தேவை,” என்று எழுதியிருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)