'ரூ.4,100 கடன் தவணைக்காக தந்தை, மகன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய ஏஜென்ட்கள்' - என்ன நடந்தது?

- எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
- பதவி, பிபிசி செய்தியாளர்
ராஜேந்திர பிரசாத் சோனி, மத்தியப் பிரதேச மாநிலம் சாட்னா பகுதியில் சமோசா கடை நடத்தி வருகிறார். 4,100 ரூபாய் தவணையை செலுத்தாததால், கடனை திருப்பி வசூலிக்கும் முகவர் இவர்கள் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றியதாக இவரின் மகன் குற்றம்சாட்டுகிறார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கடனை திருப்பி வசூலிக்கும் முகவர்களின் வேலை தொடர்பாக நிறைய கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவத்திற்கு பிறகு உடனடியாக ராஜேந்திர சோனி மற்றும் அவரது மகன் நிஷாந்த்-ன் புகாரை அடுத்து தனியார் நிதிநிறுவனத்தை சேர்ந்த 2 ஊழியர்கள் சானியா சிங் பரிஹார் மற்றும் ஹர்ஷ் பாண்டே மீது தாக்குதல், மிரட்டுதல், கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டதாக சாட்னா காவல் கண்காணிப்பாளர் ஹன்ஸ்ராஜ் சிங் பிபிசி இந்தியிடம் பகிர்ந்தார்.
சானியா சிங்கின் புகாரின் பேரில், தந்தை, மகன் தாக்குதல் நடத்தியதாகவும் போலீசார் பதில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடந்தது என்ன?
சாட்னா மாவட்டத்தில் உள்ள நாகாட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வார்ட் எண் 6 கார்ஹி டோலாவில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த 9 மாதங்களுக்கு முன் ராஜேந்திராவின் மகன் நிஷாந்த் சோனி தொழில் தொடங்குவதற்காக ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் 75,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
"கடையை நடத்த எனது மகன் முடிந்தளவு முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. அதை மூடிய பிறகு அவன் வேறு வேலைக்கு சென்றால். அந்த சமயத்தில் நாங்கள் ஒருபோதும் எங்கள் தவணையை செலுத்தத் தவறியதில்லை. ஆனால் செப்டம்பர் தொடக்கத்தில் அவனுக்கு வேலை போய்விட்டது. வீட்டின் நிதி நிலைமை மோசமானது. எங்களால் 4,100 ரூபாய் தவணையை செலுத்த முடியவில்லை" என தந்தை ராஜேந்திர சோனி கூறினார்.
இவர்கள் தவணையை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் சானியா சிங் பரிஹார் மற்றும் ஹர்ஷ் பாண்டே கடந்த வியாழன்கிழமை அன்று தவணையை வசூலிக்க அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
"நான் சமோசா விற்கிறேன். சமோசாவிற்கான உருளைக்கிழங்கை வீட்டில் அடுப்பில் வைத்து கொதிக்க வைத்தேன். இதற்கிடையில், வங்கி ஊழியர்கள் வந்தனர். என் மகனின் நிலையை விளக்க முயன்றேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. ஒருகட்டத்தில் அச்சுறுத்தலாக மாறியது. பின்னர் அவர்கள் வீட்டிலிருந்து கொதிக்கும் நீரை எடுத்து என் மீது ஊற்றினர். தடுக்க முயன்ற என் மகனும் இதில் காயமடைந்தார்" என ராஜேந்திரா கூறுகிறார்.

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் ஊழியர்களிடமும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரான ஹர்ஷ் பாண்டே மற்றும் சானியா சிங்கிடமும் பிபிசி இந்தி பேசியது.
"கடன் தவணைகளை செலுத்தாததற்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்புவதில்லை. அதற்கு பதிலாக, முதலில் சென்று வாடிக்கையாளரிடம் நேரடியாகப் பேசுவோம். அவர்கள் தங்கள் பிரச்னையை விளக்கினால், அவர்களுக்கு அவகாசம் தருவோம். நேற்றும் எங்களின் பெண் ஊழியர்கள்தான் முதலில் சென்றனர். ஆனால் தங்களை மோசமாக நடத்தியதாக அவர்கள் எங்களை அழைத்தனர். அப்போதுதான் நான் அங்கு சென்றேன்" என்று ஹர்ஷ் பாண்டே கூறுகிறார்.
ராஜேந்திர சோனி மற்றும் நிஷாந்த் சோனி மீது குற்றம் சாட்டிய ஹர்ஷ் பாண்டே, "நாங்கள் அமைதியாகப் பேசிக்கொண்டிருந்தோம், ஆனால் வாடிக்கையாளர் பணம் கொடுக்க மறுத்து எங்களைத் தாக்கினார்" என்றார்.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பெண் ஊழியரான சானியா சிங்கும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். "வாடிக்கையாளரும் அவரது மகனும் பணம் கொடுக்க மறுத்துவிட்டனர். அவர்கள் என்னை துன்புறுத்தினர். அடிக்கக் கூட செய்தனர். அதன்பின் அவர்களே தண்ணீரை சூடாக்கி ஊற்றிக் கொண்டனர்" எனக் கூறினார்.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் இணையதளத்தில் உள்ள கட்டண வசூல் மற்றும் பத்திரங்கள் மீட்டெடுப்பு கொள்கையின்படி, பணத்தை மீட்பு நடவடிக்கை நியாயம், கண்ணியம் மற்றும் புரிதலுடன் நடக்க வேண்டும். வங்கியின் வழிகாட்டுதல்கள் எந்தவொரு அதீத வற்புறுத்தலும் கூடாது என்று தெளிவாகக் கூறுகின்றன.
ஆனால் சாட்னாவில் நடந்த சம்பவம் தொடர்பாக வங்கி மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
வங்கி தரப்பில் கூறுவது என்ன?

இந்த விவகாரத்தில் ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் அதிகாரிகளையும் தொடர்பு கொண்டோம்.
மின்னஞ்சலில் கிடைத்த பதிலில், "ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம், அதே போல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் மிக முக்கியம். இந்த சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரியும். மேலும் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணையை உறுதி செய்ய வங்கி முழுமையாக ஒத்துழைக்கும்" என தெரிவிக்கப்பட்டது.
நோட்டீஸ் குறித்து கேட்டபோது, "எங்களுக்கு எந்த நோட்டீஸும் வரவில்லை. அதற்கு பதிலாக, அவர்கள் எங்கள் வீட்டிற்குள் நேரடியாக நுழைந்து எங்களைத் அவதூறாக பேசி தாக்கினர். எங்களால் தவணை செலுத்த முடியவில்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் அதற்காக அவர்கள் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து எங்களைத் தாக்கி, நற்பெயரைக் கெடுக்கலாம் என அர்த்தமில்லை. இது முற்றிலும் தவறு." என்கிறார் ராஜேந்திரா.
ராஜேந்திராவின் கை மற்றும் முகத்தில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் நிஷாந்திற்கு மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நாகோட் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆர்.பி.ஐ விதிமுறைகள் என்ன?

பட மூலாதாரம், Reuters
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள முகவர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
அதில்,
- கடன் வசூலிக்கும்போது, வங்கியிடம் இருந்து அதிகாரப்பூர்வ கடிதம் மற்றும் அடையாள அட்டையை வாடிக்கையாளரிடம் காண்பிப்பது அவசியம்.
- முகவர்கள் எந்த சூழலிலும் அச்சுறுத்தல்கள், துஷ்பிரயோகம் அல்லது வன்முறையைப் கையில் எடுக்கக் கூடாத் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
- முகவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளலாம். முகவர்களின் நடத்தை குறித்து புகார் அளிக்கவும், நிவாரணம் பெறவும் வாடிக்கையாளர்களுக்கு உரிமை உண்டு.
- முகவர்களின் நடத்தைக்கு வங்கியே முழுப் பொறுப்பு. இந்த விதிகளை மீறும் முகவர் மீது வங்கிக்கு நடவடிக்கை எடுக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












