இந்தியாவில் இன்று புறநிழல் சந்திர கிரகணம் - இதன் சிறப்பு என்ன? எங்கெல்லாம் பார்க்க முடியும்?

இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதியான இன்று நிகழ்கிறது. எனினும், இது முழு சந்திர கிரகணமாக இருக்காது. அதற்கு பதிலாக `பெனும்பரல்` சந்திர கிரணமாக இருக்கும் .

சந்திர கிரகணத்தில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன. அவை; முழு சந்திர கிரகணம், பாதி சந்திர கிரகணம் மற்றும் பெனும்பரல் சந்திர கிரகணம்.

பெனும்பரல் சந்திர கிரகணம் என்றால் என்ன?

பூமியின் உள்நிழல் ஆங்கிலத்தில் 'umbra' என்றும், புறநிழல் ஆங்கிலத்தில் 'penumbra' என்றும் அழைக்கப்படுகிறது. கிரகணத்திற்கு முன், சந்திரன் பூமியின் புற நிழல் பகுதியில் நுழைகிறது, இதுவே புறநிழல் (Penumbra) சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. புறநிழல் கிரகணத்தின்போது , சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை.

பெனும்பரல் சந்திர கிரகணத்தில் சந்திரனின் வடிவத்தில் காணக்கூடிய வகையில் எவ்வித மாற்றமும் இருக்காது. மற்ற நாட்களில் தோன்றுவதைப் போன்றே காணப்படும். அதே நேரத்தில், நீங்கள் கவனமாக பார்த்தால், அதன் நிறம் வெளிர் பழுப்பு நிறமாக இருப்பதை காணமுடியும்.

சந்திர கிரகணம் எப்படி நிகழ்கிறது?

பூமி தன்னைத் தானே சுழன்றுகொண்டு சூரியனையும் சுற்றி வருவது நம் அனைவருக்குமே தெரியும். இவ்வாறு பூமி சூரியனைச் சுற்றி வரும் போது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

சந்திர கிரகணம் எப்போது நிகழ்கிறது?

முழு நிலவு (பௌர்ணமி) நாளின்போது, சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி வரும்போது, அதன் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதன் காரணமாக சந்திரனின் ஒருபகுதி இருட்டாக காணப்படும். அப்போது, பூமியின் இருந்து நாம் சந்திரனை பார்க்கும்போது, பூமியின் நிழல் விழுந்து சந்திரனின் மறைக்கப்பட்ட பகுதி மட்டும் இருட்டாக தெரியும். இதுவே சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

சந்திர கிரகணத்தை எப்படி பார்ப்பது?

சூரிய கிரகணத்தைவிட சந்திர கிரகணம் மிகவும் பரந்த அளவில் தெரியும் என்பதால் இரவில் பூமியின் எந்த பகுதியில் இருந்து சந்திர கிரகணத்தை காணமுடியும். சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு உபகரணங்கள் தேவை. ஆனால், சந்திர கிரகணத்திற்கு அப்படி கிடையாது. நமது வெறும் கண்களால் கூட சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.

சந்திர கிரகணத்தை பார்ப்பதற்கு தொலைநோக்கியும் (Telescope) பயன்படுத்தப்படுகிறது.

இந்திய நேரப்படி இன்று இரவு 8.44 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 01.01 வரை இந்த கிரகணம் நிகழக்கூடும் என்று டைம் அண்ட் டேட். காம் குறிப்பிட்டுள்ளது.

பல்வேறு வானிலை ஆராய்ச்சி நிறுவனங்களும் சந்திர கிரகணத்தை நேரிலை செய்வதோடு அந்த காட்சிகளை செமித்து வைத்துக்கொள்கின்றன. எனவே, நமக்கு சௌகரியமாக இருக்கும்போது அவற்றை பார்த்துக்கொள்ளலாம்.

அடுத்த சந்திர கிரகணம் எப்போது?

மே 5ஆம் தேதி நிகழும் சந்திர கிரகணத்தை, வானம் தெளிவாக இருக்கும்பட்சத்தில் இந்தியா முழுவதில் இருந்து பார்க்க முடியும். இந்தியா தவிர்த்து ஆசியாவின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா, ரஷ்யா, வட ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.

எனினு, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் இருந்து இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது.

இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிகழும்.

சூப்பர் மூன், புளூமூன் மற்றும் ப்ளட்மூன் என்றால் என்ன?

சூப்பர் மூன்: சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும் மற்றும் வழக்கமாக இருப்பதை விட சந்திரன் பெரியதாகவும், 14% பிரகாசமாகவும் நமக்கு தெரியும். இது பெரிஜி நிலவு என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், பூமிக்கு மிக அருகில் உள்ள இடம் பெரிஜி (3,56,500 கிமீ) என்றும், தொலைவில் உள்ள இடம் அபோஜி (4,06,700 கிமீ) என்றும் அழைக்கப்படுகிறது.

புளூமூன்: ஒரே மாதத்தில் இரண்டாவதாக சந்திர கிரணம் ஏற்படும்போது, அந்த கிரணம் புளூ மூன் என்று அழைக்கப்படுகிறது.

ரத்த நிலவு: சந்திர கிரகணத்தின் போது, பூமியின் நிழலின் காரணமாக சந்திரன் பூமியிலிருந்து பார்க்கும்போது கருப்பு நிறத்தில் தோன்றும். இந்த சந்திர கிரகணத்தின் போது, சந்திரனும் சில நொடிகள் முற்றிலும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் இதுவே ரத்த நிலவு என்று அழைக்கப்படுகிறது. . "ரத்த நிலவு" என்பது அறிவியல் சொல் அல்ல.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: