You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'20 ஆண்டு பகை' - பெரம்பலூர் அருகே போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்ட அழகுராஜா யார்?
பெரம்பலூர் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய அழகுராஜா உயிரிழந்துவிட்டதாக, ஜனவரி 27-ஆம் தேதியன்று திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நீதிமன்ற விசாரணை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வெள்ளைக்காளி என்ற நபர் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதில் காவலர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த என்கவுன்டர் நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைக்காளி மீது கொலை, கொலை முயற்சி, போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை, ஒரு வழக்கு விசாரணைக்காக கடந்த 23-ஆம் தேதியன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
'உணவருந்தும்போது வெடிகுண்டு வீசி தாக்குதல்'
நீதிமன்றப் பணிகள் முடிந்த பிறகு சென்னை புழல் சிறையில் அவரை அடைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீசார் அழைத்துச் சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஓர் உணவகத்தில் உணவருந்த சென்றுள்ளனர்.
"மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த நேரத்தில் வெள்ளைக்காளியை தாக்குவதற்காக அவர் மீது சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்" என்கிறார், திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன்.
இந்தச் சம்பவத்தில் காவலர் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டதாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
அப்போது உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டதால் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடிவிட்டது என்கிறது காவல்துறை.
அழகுராஜா கொல்லப்பட்டது ஏன்? ஐ.ஜி விளக்கம்
இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைப் பிடிப்பதற்கு ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ள ஐ.ஜி பாலகிருஷ்ணன், "ஊட்டியில் வைத்து கொட்டு ராஜா என்ற அழகுராஜாவை தனிப்படை போலீஸ் கைது செய்தது. இவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் மூன்று கொலை வழக்குகள் உள்ளன" என்கிறார்.
அழகுராஜாவுடன் சேர்த்து மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளதாகக் கூறியதாக செய்தியாளர் சந்திப்பில் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
''ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ள இடத்தைக் காண்பிக்குமாறு அப்பகுதிக்கு அழகுராஜாவை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.''
''அங்கிருந்த நாட்டு வெடிகுண்டை திடீரென காவலர்கள் மீது வீசியுள்ளார். இந்தச் சம்பவத்தில் காவல் வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டது. அப்போது எஸ்.ஐ ஒருவர் அழகுராஜாவை பிடிக்க முற்பட்டபோது அவர் கையில் காயம் ஏற்பட்டது. அப்போது தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதில் அழகுராஜா தலையில் காயம் ஏற்பட்டது" எனக் கூறியுள்ளார் பாலகிருஷ்ணன்.
அவரை அங்கிருந்து காவல் வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதாகவும் ஆனால் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
மோதல் தொடங்கிய பின்னணி
காவல்துறை கூற்றுப்படி, ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை பூர்வீகமாகக் கொண்ட வி.கே.குருசாமி, ராஜபாண்டி ஆகியோர் அடிப்படையில் உறவினர்களாக உள்ளனர். இவர்கள் மதுரைக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இவர்களில் தி.மு.கவில் வி.கே.குருசாமியும் அ.தி.மு.கவில் ராஜபாண்டியும் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தனர். 2003-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது சுவரொட்டி ஒட்டுவதில் ஏற்பட்ட சிறு மோதலால் இருவர் இடையே பகை ஏற்பட்டது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக இருதரப்பின் நபர்களும் பழிக்கு பழியாக கொல்லப்பட்டனர்.
'இதுவரை 17 பேர் கொலை'
2003-ஆம் ஆண்டில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இரு தரப்பிலும் தற்போது வரை சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ராஜபாண்டியின் ஆதரவாளரான வெள்ளைக்காளி கைது செய்யப்பட்டார். அவரைக் கொல்வதற்கு குருசாமியின் உறவினரான அழகுராஜா முயன்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக காவல்துறை சுட்டதில் அழகுராஜா உயிரிழந்தார்.
"அரசியல்ரீதியாக ஏற்பட்ட பகை, பல்வேறு கொலைகளுக்கு காரணமாக மாறியது. இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்புக்கு இடையே தொடர்ந்து கொண்டிருக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சிகளை காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.'' என்கிறார் சிறைக் கைதிகள் உரிமை மையத்தின் இயக்குநரும், மனித உரிமை ஆர்வலருமான வழக்கறிஞர் புகழேந்தி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு