You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரானில் கடத்தப்பட்ட பஞ்சாப் இளைஞர்கள் - 'பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடத்தியதாக' கூறும் குடும்பத்தினர்
பஞ்சாபைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக கடந்த மாதம் தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டனர். ஆனால் தற்போது அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை.
சங்ரூர், ஹோஷியார்பூர் மற்றும் நவான்ஷஹரை சேர்ந்த இந்த இளைஞர்களின் குடும்பத்தினர், அவர்கள் இரானில் கடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், "இரானை அடைந்த தங்கள் உறவினர்கள் காணாமல் போயுள்ளதாக மூன்று இந்திய குடிமக்களின் குடும்பத்தினர் இந்திய தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்" என்று இரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
"இந்த விவகாரத்தை இரானிய அதிகாரிகளிடம் இந்திய தூதரகம் தீவிரமாக எடுத்துச் சென்றுள்ளது. காணாமல் போன இந்தியர்களை உடனடியாகக் கண்டுபிடித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். தூதரகத்தின் முயற்சிகள் குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் தொடர்ந்து தகவல்களைத் தெரிவித்து வருகிறோம்" என்றும் தூதரகம் கூறியுள்ளது.
ஹோஷியார்பூரை சேர்ந்த அம்ரித்பால், சங்ரூரை சேர்ந்த ஹசன்ப்ரீத், நவான்ஷஹரை சேர்ந்த ஜஸ்பால் சிங் ஆகியோரின் குடும்பத்தினரிடம் பேசி, பிபிசி பஞ்சாபி முழு விவரங்களையும் புரிந்துகொள்ள முயன்றது.
அம்ரித்பால் சிங்: ஹோஷியார்பூர்
பிபிசி செய்தியாளர் பிரதீப் ஷர்மாவின் கூற்றுப்படி, ஹோஷியார்பூரில் உள்ள பகோவல் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான அம்ரித்பால் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக வீட்டை விட்டுப் புறப்பட்டார்.
ஆனால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலியாவில் பணி புரிவதற்கான அனுமதி கிடைக்கும் என்று ஒரு முகவர் தன்னிடம் கூறியதாகக் கூறுகிறார் அம்ரித்பாலின் தாயார் குர்தீப் கவுர்.
"நாங்கள் முகவரிடம் ரூ.18 லட்சத்திற்குப் பேசினோம், அதன் பிறகு முகவர் விசா வந்துவிட்டதாகக் கூறினார், நீங்கள் பணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். முதலில், ஏப்ரல் 26ஆம் தேதிக்கு டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளதாக எங்களுக்குச் சொல்லப்பட்டது.
ஆனால் நாங்கள் முகவரைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஆவணங்கள் இன்னும் வரவில்லை என்று கூறினார். அதன் பிறகு டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும், இப்போது 29ஆம் தேதிக்கு டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் எங்களிடம் கூறினார்" என்று அம்ரித்பாலின் தாயார் குர்தீப் கவுர் பகிர்ந்து கொண்டார்.
இதற்குப் பிறகு, அம்ரித்பாலின் குடும்பத்தினரிடம் ஏப்ரல் 29ஆம் தேதிக்கான டிக்கெட்டும் ரத்து செய்யப்பட்டு விட்டதாகத் தெரிவித்த முகவர், இப்போது ஆஸ்திரேலியாவுக்கு செல்ல நேரடி விமானம் இல்லை என்றும், அவர்கள் இரானில் தங்க வேண்டியிருக்கும் என்றும் குடும்பத்தினரிடம் கூறியதாக குர்தீப் கவுர் விவரித்தார்.
"இரானை அடைந்த பிறகு, விமான நிலையத்தில் இருந்து இளைஞர்களை அழைத்துச் செல்ல ஒரு டாக்ஸி வருவதாகக் கூறப்பட்டது" என்கிறார் குர்தீப் கவுர்.
ஆனால் அதன் பிறகு அவர்கள் ஹோட்டலை அடையவில்லை என்று கூறிய குர்தீப் கவுர், இப்போது முகவர்கள் தப்பி ஓடிவிட்டதாகக் கூறுகிறார். அவர்களின் வீடுகளும் பூட்டப்பட்டுள்ளன.
அம்ரித்பாலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக உறுதியளித்த முகவர்களில் ஒரு பெண் உள்பட மூன்று முகவர்கள் இருந்துள்ளனர்.
இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாக குர்தீப் கவுர் தெரிவித்தார்.
"எங்கள் மகன்களை காயப்படுத்திய பிறகு அவர்கள் வீடியோ கால் செய்வார்கள். எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்று நாங்கள் அவர்களிடம் கேட்டபோது, அவர்கள் எங்களுக்கு ஒரு வங்கி கணக்கின் எண்ணை அனுப்பினார்கள்.
நாங்கள் சரிபார்த்தபோது, இந்த வங்கி கணக்கு பாகிஸ்தானைச் சேர்ந்தது என்பது எங்களுக்குத் தெரியவந்தது" என்றும் அவர் குறிப்பிட்டார்.
முதலில் இரண்டு கோடி ரூபாய் அந்தக் குடும்பத்திடமிருந்து கேட்கப்பட்டுள்ளது. பின்னர் ஒரு நபருக்கு ரூ.18 லட்சம் வீதம் ரூ.54 லட்சம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
"எங்கள் மகன்களை விரைவில் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்று நாங்கள் அரசிடம் கோரிக்கை வைக்கிறோம்" என்கிறார் குர்தீப் கவுர்.
10-12 நாட்கள் கடந்தும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் குடும்பத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறினார் அம்ரித்பால் சிங்கின் தாய் மாமா குருதேவ் சிங்.
கடத்தல்காரர்கள் முதலில் ஒரே எண்ணில் இருந்து கடத்தப்பட்ட அந்த மூன்று இளைஞர்களின் வீடுகளுக்கும் அழைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
"முன்பு அவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் கேட்டார்கள். இப்போது ஒவ்வொரு இளைஞருக்கும் 18 லட்சம் கொடுங்கள் என்கிறார்கள். முன்பு நாங்கள் முகவருக்கு 18 லட்சம் ரூபாய் கொடுத்தோம், இப்போது எங்கிருந்து அவர்களுக்குக் கொடுப்போம்? நாங்கள் காவல்துறையில் புகாரளித்து 10-12 நாட்கள் ஆகின்றன. இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்கிறார் அம்ரித்பால் சிங்.
ஹசன்ப்ரீத் சிங்: சங்ரூர்
தனது பகுதியைச் சேர்ந்த ஹசன்பிரீத் சிங் என்ற இளைஞர் ஒரு மாதத்திற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டதாகவும், ஆனால் இப்போது அவர் இரானில் சிக்கித் தவிப்பதாகவும் குடும்பத்திற்குத் தகவல் கிடைத்துள்ளதாக பஞ்சாபில் உள்ள துரியைச் சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் பூபிந்தர் சிங் தெரிவித்தார்.
பிபிசி செய்தியாளர் சரண்ஜீவ் கௌஷலுடனான உரையாடலில், ஹசன்பிரீத் சிங்கை உடனடியாக இந்தியாவுக்கு அழைத்து வருமாறு பூபிந்தர் சிங் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹசன்ப்ரீத் சிங்கின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு, அவர்களது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
ஜஸ்பால் சிங்: நவான்ஷஹர்
கடத்தப்பட்டுள்ளவர்களில் மூன்றாவது நபர் நவான்ஷஹரை சேர்ந்த ஜஸ்பால் சிங்.
நவான்ஷஹரில் வசிக்கும் ஜஸ்பால் சிங்கின் தாயார் நரிந்தர் கவுர், பிபிசி செய்தியாளர் பிரதீப் ஷர்மாவிடம் கூறுகையில், தனது மகன் மே 1ஆம் தேதி தெஹ்ரான் விமான நிலையத்தை அடைந்துவிட்டதாகக் கூறியதாகத் தெரிவித்தார்.
"ஜஸ்பாலிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர், 'அம்மா, நான் பாதுகாப்பாக வந்துவிட்டேன்' என்றார்" எனப் பகிர்ந்துகொண்டார் நரிந்தர் கவுர். அதன் பிறகு, அந்த முகவரிடமிருந்து நரிந்தர் கவுரின் குடும்பத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த நபர் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யுமாறு கூறியுள்ளார்.
"மதியம் 3:30 மணியளவில் ஜஸ்பால் சிங்கிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது, அவர் தான் கடத்தப்பட்டதாக எங்களிடம் கூறினார். காலையில் ரூ.18 லட்சம் திரட்ட வேண்டும் என்று ஜஸ்பால் சிங் எங்களிடம் கூறினார்" என்கிறார் நரிந்தர் கவுர்.
அதன் பிறகு ஜஸ்பால் சிங்கின் குடும்பத்தினர் அந்த முகவரைத் தேடிச் சென்றுள்ளனர். "எனக்கு இரானுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுங்கள், நான் உங்கள் மகனை அங்கிருந்து அழைத்து வருகிறேன்" என்று நரிந்தர் கவுர் குடும்பத்தினரிடம் கூறியுள்ள அந்த முகவர், பின்னர் அவர்களை ஏமாற்றிவிட்டுக் காணாமல் போய்விட்டார்.
அதன் பிறகு, கடத்தல்காரர்கள் அவர்களது மகனை அடிக்கத் தொடங்கியதாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு வீடியோ கால் செய்ததாகவும் நரிந்தர் கவுர் கூறுகிறார்.
"அவர்கள் எங்களிடம் பணம் கேட்கத் தொடங்கினார்கள். ஆனால் நாங்கள் ஒரு பைசாகூட கொடுக்கவில்லை" என்று கூறுகிறார் நரிந்தர் கவுர். இந்த நிலையில், கடந்த 14 நாட்களாக ஜஸ்பால் சிங்கிடம் அவரது குடும்பத்தினரால் பேச இயலவில்லை.
காவல் துறை என்ன சொல்கிறது?
"அம்ரித்பால் சிங் என்ற இளைஞர் ஆஸ்திரேலியா செல்வதற்காக எங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முகவரிடம் பணம் வழங்கியதாகவும், அவர் இரானை அடைந்தபோது கடத்தப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்," என்று ஹோஷியார்பூர் காவல் நிலைய அதிகாரி குர்சாஹிப் சிங் தெரிவித்தார்.
"குடும்பத்தினரின் கூற்றுப்படி, மூன்று இளைஞர்களிடம் இருந்தும் அவர்களை மீட்க ரூ.54 லட்சம் பணம் கேட்கப்பட்டுள்ளது. காவல்துறை வழக்குப் பதிவு செய்து, முகவர்களைக் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றன."
பிபிசி புலனாய்வில் இரான் கும்பல்கள் பற்றித் தெரிய வந்தது என்ன?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிபிசி மேற்கொண்ட சிறப்புப் புலனாய்வில், ஆப்கானிஸ்தான் குடிமக்களைக் கடத்திய கும்பல்கள், அவர்களை மீட்கப் பணம் கேட்டு, கடத்தப்பட்டவர்களை சித்திரவதை செய்யும் வீடியோக்களை அவர்களின் குடும்பங்களுக்கு அனுப்பியது கண்டறியப்பட்டது.
கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களைச் சித்திரவதை செய்யும் வீடியோக்களை அனுப்பி, பணம் பறிக்க இந்தக் கும்பல்கள் முயல்வது பிபிசி புலனாய்வில் தெரிய வந்தது.
இந்த விசாரணையில் தாலிபன்களிடம் இருந்து தப்பி ஐரோப்பா சென்ற பல ஆப்கானியர்கள் குறித்த தகவல் வெளிப்பட்டன. அந்த மக்கள் ஐரோப்பாவுக்குள் நுழைவதற்காக இரான்-துருக்கி எல்லையைக் கடக்கிறார்கள்.
இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் தங்கள் கதைகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு