கனடாவில் 16 பேரின் மரணத்திற்கு காரணமான பஞ்சாபி டிரக் ஓட்டுநரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு - நடந்தது என்ன?

கனடாவில் 2018-ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜஸ்கிரத் சிங் சித்து என்பவர் ஓட்டிய டிரக் ஏற்படுத்திய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, சித்துவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்கிரத் சிங் சித்து குடியுரிமை பெற்று கனடாவில் வசித்து வந்தார். கடந்த 2018-ஆம் ஆண்டில் சஸ்காட்செவன் செல்லும் கிராமப்புற சாலையில்அவர் ஓட்டிவந்த கனரக வாகனம் ஒரு பேருந்து மீது மோதி, ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்தில் அந்த பேருந்தில் பயணித்த 'ஐஸ் ஹாக்கி' அணி வீரர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.

'ஐஸ் ஹாக்கி' அணி பயணித்த பேருந்தின் மீது கனரக வாகனம் மோதி அதிலிருந்த வீரர்கள் உயிரிழந்த சம்பவம் கனடாவையே உலுக்கியது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஜஸ்கிரத் சிங் சித்துவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முழு பரோல் வழங்கப்பட்டது. தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டுள்ளது.

ஜஸ்கிரத் சிங் சித்துவின் வழக்கறிஞர் சொல்வது என்ன?

நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப்போவதாக சித்துவின் வழக்கறிஞர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வழக்கறிஞர் மைக்கேல் கிரீன் கூறுகையில், "சித்து கனடாவைப் பூர்வீகமாக கொண்டவர் அல்ல என்பதால், அவரை நாடு கடத்தும் முடிவு ஆச்சரியமளிக்கவில்லை,” என்றார். சித்துவின் வழக்கை கல்கரி குடியேற்றம் மற்றும் அகதிகள் வாரியம் விசாரித்து வந்தது.

பஞ்சாபைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சித்து, 2013-இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.

"கனடாவில் நிரந்தரக் குடியுரிமை (PR) பெற்றுள்ள சித்து மீது கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், மனிதாபிமானம் மற்றும் கருணை அடிப்படையில் சித்துவை கனடாவில் வசிக்க வைக்க தொடர்ந்து போராடுவோம். விபத்துக்குப் பிறகு அவர் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் வேதனையுடன் கழித்துள்ளார். இதற்கு மேலும் அவர் வருத்தப்பட வேண்டுமா," என்று மைக்கேல் கிரீன் கூறினார்.

விபத்தில் உயிரிழந்த ஐஸ் ஹாக்கி அணி வீரர்கள் 16 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். பேருந்தில் ஹாக்கி வீரர்களின் உதவியாளர்கள், அணியின் கேப்டன், மற்றும் பயிற்சியாளர் ஆகியோரும் இருந்தனர். இந்த விபத்தில் பல வீரர்களின் உயிர் காப்பாற்றப்பட்டாலும் அவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.

நாடு கடத்த கோரிக்கை

2019-ஆம் ஆண்டில், கனரக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக சித்துவுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

கல்கேரியில் வசிக்கும் ஜஸ்கிரத் சிங் சித்து, விபத்து ஏற்பட்ட சிறிது நாட்களுக்கு முன்னர் தான் புத்தம் புதிய கனரக வாகனத்தை ஓட்ட ஆரம்பித்திருந்தார்.

விபத்து நடந்த அன்று சித்து சாலையில் நிறுத்தற் குறியைப் பொருட்படுத்தாமல் வேகமாக நிற்காமல் கடந்து சென்றதால் பஸ் மீது மோதியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்தில் பாதிக்கப்பட்ட சிலரின் குடும்பத்தினர் சித்துவை நாடு கடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வெள்ளியன்று கல்கரியில் சிடிவி செய்திக்கு அளித்த பேட்டியில், சித்துவை நாடு கடத்தும் முடிவுக்கு தானும் அவரது மனைவியும் நன்றியுள்ளவர்களாக இருப்பதாக டோனி புல்லட் கூறினார்.

விபத்தில் டோனியின் மகன் லோகன் உயிரிழந்தார்.

அதே சமயம் விபத்தில் பாதிக்கப்பட்ட சிலரின் பெற்றோர் சித்துவை மன்னித்து விட்டதாக கூறியுள்ளனர்.

விபத்திலிருந்து உயிர் தப்பிய ஹாக்கி வீரர்களில் ஒருவரான ரியான் ஸ்ட்ராசினிட்ஸ்கி, வெள்ளிக்கிழமை சிடிவி செய்திக்கு அளித்த பேட்டியில், "சித்துவின்மேல் எனக்கு 'எந்தவித எதிர்மறையான உணர்வும்' இல்லை. இந்தத் தீர்ப்பின் முடிவு எதுவும் என் கைகளில் இல்லை, இது உண்மையில் என் பொறுப்பு அல்ல, ஆனால் வெளிப்படையாக நாம் அனைவருக்கும் நல்லதையே விரும்புகிறேன்,” என்று கூறினார்.

மேல்முறையீட்டுக்கான காரணங்கள்

சித்துவின் வழக்கறிஞர் கிரீன் கூறுகையில், "சித்து மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையில் விண்ணப்பித்துள்ளார். அவர் தனது மனைவி மற்றும் ஒரு வயது மகனுடன் வாழ அனுமதிக்கக் கோரிக்கை விடுத்தோம். அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் கனேடிய குடிமக்கள்,” என்றார்.

"மேலும், சித்து நாடு கடத்தப்பட்டால், அவரது குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்படும். அவரது குழந்தைக்குத் தீவிரமான இதய மற்றும் நுரையீரல் பிரச்னைகள் இருப்பதால் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே, அவரது மனைவி மற்றும் மகன் இந்தியாவுக்குச் செல்ல முடியாது,” என்றார்.

"சித்துவின் மேல்முறையீட்டு மனு மீதான இறுதி முடிவு வருவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம், மேலும் அவரது மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படும் வரை அவர் கனடாவில் இருக்க முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது அனைத்தும் கனேடிய அரசாங்கத்தின் கைகளில் உள்ளது,” என்று கிரீன் விளக்கினார்.

விபத்து எப்படி நடந்தது?

இந்த விபத்து நடப்பதற்குச் சில மாதங்கள் முன்பு தான் ஜஸ்கிரத் திருமணம் செய்து கொண்டார். அவர் கனடாவின் நிரந்தர குடியிருப்பாளர் ஆக இருந்தார். ஜஸ்கிரத் தனது கனரக வாகனத்தை ஒரு கிராமப்புற பகுதியில் ஓட்டி கொண்டிருந்தபோது, 'நிறுத்தம் செய்ய வேண்டிய சாலைக் குறியை' பொருட்படுத்தாமல் கடந்து சென்றார்.

அப்போது, ஜூனியர் ஹாக்கி அணியை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த பேருந்து மீது கனரக வாகனம் மோதியது. இந்த ஜூனியர் ஹாக்கி அணியின் பெயர் ஹம்போல்ட் பிரான்கோஸ். சஸ்காட்செவன் மாகாணத்தில் உள்ள டிஸ்டேல் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)