தெலங்கானா முதல்வர் மகள் கவிதா: தென்னிந்தியாவில் புயலை கிளப்பும் டெல்லி மதுபான ஊழல் புகார்

டெல்லி மதுபான ஊழல் வழக்கு

பட மூலாதாரம், KALVAKUNTLA KAVITHA/FACEBOOK

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைதுக்கு காரணமான மதுபான ஊழல் புகார் தெலங்கானா அரசியலிலும் புயலைக் கிளப்பி வருகிறது. தெலங்கானா முதலமைச்சரும், பாரத ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான கே.சி.சந்திரசேகர ராவ் மகள் கவிதா மீதும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதே இதற்குக் காரணம். அவர் எப்படி இந்த வழக்கிற்குள் வருகிறார்? அவர் மீது சிபிஐ, அமலாக்கப்பிரிவு அமைப்புகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு என்ன?

அரசியலில் மலிந்துவிட்ட ஊழல், லஞ்சம் போன்ற குப்பைகளை அகற்றப் போவதாக சூளுரைத்து துடைப்பத்தை சின்னமாகக் கொண்டு களமாடும் ஆம் ஆத்மி கட்சியும் இன்று ஊழல் புகாரில் சிக்கிக் கொண்டுள்ளது. எந்தக் கட்சிக்கும் கிடைக்காத வரலாற்று வெற்றியுடன் முதன் முதலாக டெல்லியில் ஆட்சியைப் பிடித்த அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்தவருமான மணிஷ் சிசோடியா மீதே ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை 2021-22தான் தற்போதைய பிரச்னைகளுக்குக் காரணம். அதுகாறும் டெல்லி அரசு வசமிருந்த மதுபான விற்பனை, அந்த கொள்கையின் மூலம் 2021-ம் ஆண்டு நவம்பரில் தனியாரிடம் விடப்பட்டது. அவ்வாறு தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதே புகார்.

மது மாஃபியாவின் ஆதிக்கத்தை ஒடுக்குவது, அரசின் வருமானத்தை அதிகரிப்பது, நுகர்வோரின் பிரச்னைகளைத் தீர்ப்பது ஆகியவற்றிற்காகவே புதிய மது கொள்கை அமல்படுத்தப்படுவதாக டெல்லி அரசு விளக்கம் அளித்தது.

அதன்படி, டெல்லியை 32 மண்டலங்களாகப் பிரித்து, மண்டலத்திற்கு 27 வீதம் மதுக்கடைகளை திறக்க தனியாருக்கு உரிமங்கள் வழங்கப்பட்டன. அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைக் (எம்.ஆர்.பி.) காட்டிலும் குறைவான விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்ய டெல்லி அரசு ஊக்கம் அளித்தது. அதற்காக, மது விற்பனையாளர்களுக்கு தள்ளுபடி போன்ற சலுகைகளையும் டெல்லி அரசு அளித்தது. இதன் பயன் நுகர்வோருக்குக் கிடைக்கும் என்பது டெல்லி அரசின் வாதம்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கு

பட மூலாதாரம், MOHD ZAKIR/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போன்ற சலுகைகளை நுகர்வோருக்கு வழங்கி மது விற்பனையை தனியார் அதிகரித்தனர். பல பிராண்ட் மதுபானங்களும் குறைந்த விலையில் கிடைத்ததால் டெல்லியில் மது விற்பனை கணிசமாக அதிகரித்தது. இதனால் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் கலால் வரி 27 சதவீதம் அதிகரித்து 890 கோடி ரூபாயை எட்டியதாக டெல்லி அரசு தெரிவித்தது.

இந்த கொள்கை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட வேளையில், 2022-ம் ஆண்டு ஜூலையில் டெல்லியில் புதிய தலைமைச் செயலாளரான நரேஷ்குமார், புதிய மதுபான கொள்கையில் முறைகேடுகள் இருப்பதாக குறறம்சாட்டினார். அவரது பரிந்துரையின் பேரில், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், புதிய மதுபான கொள்கையை உருவாக்கியதிலும், நடைமுறைப்படுத்தியதிலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இருந்த பங்கு குறித்து முழு அறிக்கை அளிக்கவும் தலைமைச் செயலாளராக அவர் உத்தரவிட்டார்.

அதன் பின்னரே இந்த பிரச்னை பூதாகரமானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை ஒன்பதே மாதங்களில் திரும்பப் பெற்றது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டெல்லி மாநில அரசே மீண்டும் மதுபானங்களை நேரடியாக விற்பனை செய்கிறது.

இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்த 11 பக்க முதல் தகவல் அறிக்கையில் மணிஷ் சிசோடியா உள்பட 16 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. மணிஷ் சிசோடியாவை முதன்மை குற்றவாளியாக சிபிஐ குறிப்பிட்டிருந்தது. சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகளை பதிவு செய்த சிபிஐ 21 இடங்களில் சோதனையும் நடத்தியது.

டெல்லி மதுபான ஊழல் வழக்கு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மணிஷ் சிசோடியா

சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் ஒப்புதல் பெறாமல், மணிஷ் சிசோடியாவும், அப்போதைய டெல்லி கலால் ஆணையர் கோபிகிருஷ்ணாவுமே நேரடியாக முடிவுகளை எடுத்தனர் என்பது சிபிஐ முன்வைக்கும் குற்றம்சாட்டு. ஒருங்கிணைந்த ஆந்திராவில் பிறந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோபிகிருஷ்ணா, இதன் எதிரொலியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

'சௌத் குரூப்' என்ற பெயரில் செயல்பட்ட தொழிலதிபர்கள் குழு, டெல்லி மதுபான கொள்கையில் தாங்கள் பலன் பெறுவதற்காக பல கோடி ரூபாயை ஆம் ஆத்மி கட்சிக்கு கொடுத்ததாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் குற்றம்சாட்டியுள்ளன.

அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயினபள்ளி மற்றும் புச்சிபாபு ஆகியோர் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் கே.சி.சந்திரசேகர் ராவின் மகள் கல்வகுந்த்ல கவிதா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. ஸ்ரீனிவாசலு ரெட்டி ஆகியோரின் பிரதிநிதிகளாக செயல்பட்டனர் என்று அருண்பிள்ளையின் ரிமாண்ட் அறிக்கையில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

யார் இந்த முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி?

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஓங்கோல் தொகுதி எம்.பி.யான முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி பெரும் தொழிலதிபர். 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது தாக்கல் செய்த வேட்புமனுவில் 35-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அவரால் நிறுவப்பட்ட நிறுவனங்களும் பல உள்ளன.

முகுந்த ஸ்ரீனிவாசலுவின் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனங்களே பிரபலமான பல மது வகைகளை தயாரிக்கின்றன. சென்னையை அடிப்படையாகக் கொண்டே பெரும்பாலான அவரது தொழில்கள் நடக்கின்றன. டெல்லி அரசின் மதுபான உரிமத்திற்கான ஏலத்தில் வேறு சில நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து முறைகேடான வகையில் அவர் ஏலம் பெற்றார் என்று சிபிஐ குற்றம்சாட்டுகிறது.

டெல்லி மதுபான ஊழல் வழக்கு

பட மூலாதாரம், FACEBOOK/MAGUNTA SREENIVASULU REDDY

படக்குறிப்பு, முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி

டெல்லி ஊழல் வழக்கில் கே.சி.ஆர். மகள் பெயர் அடிபடுவது ஏன்?

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் 14-வது குற்றவாளியாக சிபிஐயால் சேர்க்கப்பட்டுள்ள அருண் ராமச்சந்திர பிள்ளை, சந்திரசேகர ராவின் மகள் கவிதாவின் பிரதிநிதி என்பது அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு. இந்தோ ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் சமீர் மெஹந்த்ருவிடம் இருநது பணத்தை சேகரித்து அரசு சார்ந்த நபர்களிடம் அவர் வழங்கினார் என்று சிபிஐ கூறுகிறது. இந்த ஆண்டு தொடங்கப்பட்ட ராபின் டிஸ்டில்லரி என்ற நிறுவனத்தின் இயக்குநராக அருண் ராமச்சந்திர பிரள்ளை இருக்கிறார்.

இதன் அடிப்படையில், கவிதாவிடம் கடந்த டிசம்பர் 12-ம் தேதி சிபிஐ சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று அவர் ஆஜராகியுள்ளார்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கவிதாவின் பெயர் அடிபடுவதை தெலங்கானா மாநில பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா மாநில பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சய்,

"டெல்லி மதுபான கொள்கை விஷயத்திற்காக சந்திரசேகர ராவ் அடிக்கடி டெல்லி சென்றுள்ளார். ஆனால், விவசாயிகள் பிரச்னைக்காக அவர் பஞ்சாபுக்கு சென்றதில்லை. மதுபான கொள்கை அமலாக்கத்திற்காக மட்டும் அவர் டெல்லி சென்றுள்ளார். கே.சி.ஆரின் குடும்ப உறுப்பினர்கள் டெல்லி ஓபராய் ஓட்டலில் மது விற்பனையாளர்களை சந்தித்தார்களா? இல்லையா? டெல்லிக்கு அவர்கள் தனி விமானத்தில் பறந்து சென்றார்களா இல்லையா? ராமச்சந்திரன் பிள்ளை, சரத் சந்திர ரெட்டி, ஸ்ருஜன் ரெட்டி, அபிஷேக், சரண் ரெட்டி ஆகியோருடன் உங்களுக்கு பழக்கம் உண்டா இல்லையா? நீங்கள் தெளிவான பதில் தர வேண்டும். அவர்கள் அனைவரும் கே.சி.ஆரின் பினாமிகள்." என்று குற்றம்சாட்டினார்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கு

பட மூலாதாரம், BJPTELANGANA/FB

குற்றச்சாட்டுகளுக்கு கவிதாவின் பதில் என்ன?

குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த கவிதா, டெல்லி மதுபான ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பு இல்லை என்றார்.

"என் மீது பா.ஜ.க. முன்வைக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை. டெல்லி மதுபான ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க பா.ஜ.க. முயல்கிறது. அழுத்தங்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். எதிர்த்து நின்று போராடுவோம்" என்று அவர் மேலும் கூறினார்.

டெல்லி மதுபான ஊழல் வழக்கு

பட மூலாதாரம், @RAOKAVITHA

தேசிய அரசியலில் பா.ஜ.க.வுக்கு எதிராக அடியெடுத்து வைத்துள்ள பாரத ராஷ்டிரிய சமிதி கட்சியை இதுபோன்ற மிரட்டல்கள் மூலம் பணிய வைக்க முடியாது என்றும், மக்களுக்கான எங்கள் போராட்டத்தையும், எங்கள் தலைவர் கே.சந்திரசேகர ராவின் குரலையும் ஒடுக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: