ரூ.8 லட்சம் கோடி சரிவை கண்ட அதானியின் ராஜ்ஜியம் - மீண்டு வருவது சாத்தியமா?

பட மூலாதாரம், Getty Images
அதானி நிறுவனத்தில் இந்தியாவின் முன்னணி வங்கிகளான SBI உட்பட பல வங்கிகள் முதலீடு செய்திருந்தன.
ஹிண்டன்பர்க் அறிக்கையினால் ஏற்பட்ட விளைவின் காரணமாக அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
இது குறித்து விளக்கமளித்துள்ள இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, "சமீபத்திய நிகழ்வுகளை ரிசர்வ் வங்கி கண்காணித்து வருகிறது. இந்திய வங்கித்துறை நிலையாக உள்ளது" என தெரிவித்துள்ளது.
இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானி, தனது எஃப்.பி.ஓ(FPO) பங்கு விற்பனையை நிறுத்தியதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்க முயன்றார்.
ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர்(FPO) என்பது, ஒரு நிறுவனம் பங்குச் சந்தையில் அறிமுகமான பின்பு நிதியை திரட்டுவதற்காக புதிதாக பங்குகளை உருவாக்கி சந்தைக்குள் கொண்டு வரும் நடைமுறை ஆகும்.
இந்த விற்பனை மூலம் திரட்டப்பட்ட 20,000 கோடி ரூபாயை(2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தருவதாக அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிவித்தது.
இந்த முடிவு "தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை" பாதிக்காது என்று அதானி தெரிவித்திருந்தார்.
தொடர் சரிவில் அதானி குழுமம்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க பங்குச் சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்று அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் குற்றச்சாட்டை அதானி மறுத்துள்ள போதிலும், கடந்த சில நாட்களில் அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 8.8 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அதானி அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பில் 48 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 3.9 லட்சம் கோடி) இழந்து, இப்போது ஃபோர்ப்ஸ் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலில் 22வது இடத்தில் உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு பட்டியலில் 3வது இடத்திலும் நேற்று 16வது இடத்திலும் கௌதம் அதானி இருந்தார்.
பங்குகள் எப்படி வீழத் தொடங்கியது?

பட மூலாதாரம், Reuters
இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ரியல் டைம் பில்லியனர்கள் பட்டியலின்படி உலகின் 3வது பணக்காரராக கௌதம் அதானி அறியப்பட்டார்.
அதானி நிறுவனத்தின் மிக முக்கிய துணை நிறுவனமான அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட பங்குகள் எஃப்.பி.ஓ மூலமாக ஜனவரி 25ஆம் தேதி விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டலுக்கான இந்த பங்கு விற்பனை நடந்திருந்தால், இது இந்தியாவின் மிகப்பெரிய எஃப்.பி.ஓ-வாக இருந்திருக்கும்.
ஆனால் அதற்கு முந்தைய நாளான, ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முதலீட்டு நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமம் பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும் கணக்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஹிண்டன்பர்க் நிறுவனம், வீழ்ச்சியடையும் பங்குகளை குறிவைத்து குறுகிய காலத்திற்கு பங்குகளை வாங்கி விற்பனை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற அமைப்பாகும்.
இதற்குப் பதிலளித்த அதானி குழுமம், “தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது, ஒன்றைவிட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டது,” என்று கூறியிருந்தது.
நியூயார்க்கில் செயல்பட்டு வரும் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதானி நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
ஆனால் இந்த விளக்கமும், எதிர்வினையும் முதலீட்டாளர்களின் அச்சத்தை தடுக்க போதுமானதாக இல்லை.
அதானி குழுமத்தின் கீழ் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படும் ஏழு வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகி்ன்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் பதிவு செய்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்துள்ளன.
அதானி குழுமத்தில் பல இந்திய வங்கிகள் மற்றும் பொதுத்துறை காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. சில வங்கிகள் பல லட்சம் கோடி ரூபாயை கடனாக அதானி குழும நிறுவனங்களுக்கு அளித்துள்ளது.
அதானியின் பதில் என்ன?

பட மூலாதாரம், Getty Images
அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் பங்குகள் மட்டுமின்றி, அதானி துறைமுகம், அதானி பவர், அம்புஜா சிமெண்ட் போன்ற அதானி குழுமத்துடன் இணைந்த பிற நிறுவனங்களின் பங்குகளும் தொடர் சரிவை சந்தித்தன.
இதையடுத்து, 400 பக்க மறுப்பு அறிக்கை அதானி குழுமம் வெளியிட்டது. அதில் ஹிண்டர்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை 'இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல்' என்று அதானி குழுமம் குறிப்பிட்டு இருந்தது.
மேலும் அந்த அறிக்கையில், உள்ளூர் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு, அனைத்து ஒழுங்குமுறைகளை முறையாக பின்பற்றியதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. "முதலீட்டாளர்களை இழப்பில் தள்ளி அதன் மூலம் தவறான வழியில் நிதி ஆதாயம் பெறும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கை," என்று ஹிண்டர்பர்க் அறிக்கை அழைத்தது.
இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் நிறுவனம், "எங்கள் அறிக்கையில் கூறப்பட்ட தரவுகளில் உறுதியாக இருக்கிறோம். நாங்கள் எழுப்பியிருந்த 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு அதானி குழுமம் பதிலளிக்க தவறிவிட்டது," என தெரிவித்தது.
சந்தை ஆற்றிய எதிர்வினை

பட மூலாதாரம், Getty Images
திட்டமிட்டபடி அதானி எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் FPO விற்பனை ஜனவரி 25ஆம் தேதி தொடங்கிய போது, பங்குகளை வாங்க பெரியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
இரண்டாவது நாளன்று வெறும் 3% பங்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. இந்நிலையில் ஜனவரி 30ஆம் தேதி அபுதாபி அரச குடும்பத்துடன் தொடர்புடைய இண்டர்நேஷனல் ஹோல்டிங் நிறுவனம் அதானி குழுமத்தில் 3,260 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தது.
கடைசி நாளன்று இந்திய முதலீட்டாளர்களான சஜ்ஜின் ஜிண்டால் மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் அதானி குழும பங்குகளை வாங்கியதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.
பங்கு விற்பனைக்கு பிறகு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அம்பரேஷ், பங்குகளை விரிவுப்படுத்தும் அதானி குழுமத்தின் எண்ணம் நிறைவேறவில்லை என்று தெரிவித்தார்.
அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளது தொடர்பான விவரங்களை அறிக்கையாக சமர்பிக்குமாறு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கிகளுக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளதாக ராய்டர்ஸ் மற்றும் புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
அதானி குழுமத்தின் பங்குகளின் வீழ்ச்சி தொடர்பாக இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி(SEBI) விசாரணை நடத்தி வருவதாக ராய்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளது.
நிலைமை எப்போது சரியாகும்?

பட மூலாதாரம், Reuters
தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் அதானி நிறுவனத்தின் போக்கு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசகரான சதீஷ், அதானி நிறுவனத்தின் பங்குகளில் 20% வரை பொதுத்துறை வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன.
பங்குச் சந்தையின் வீழ்ச்சி காரணமாகவும், வெளியில் இருந்து எழுந்த அரசியல் அழுத்தம் காரணமாகவும் தங்கள் பணத்தைத் திரும்ப எடுக்க வேண்டிய நிலைக்கு இந்த வங்கிகள் தள்ளப்பட்டன. இதன் காரணமாகவும், அதானி நிறுவனம் தனது எஃப்.பி.ஓ-வை திரும்பப் பெற்றதன் காரணமாகவும் அதானி எண்டர்பிரைஸ் நிறுவன பங்குகள் தொடர்ந்து வீழ்ந்து கொண்டே வருகின்றன.
இதன் தாக்கம் சில்லறை முதலீட்டாளர்களிடம் தொடர்கிறது. அதானி குழுமத்தில் முதலீடு செய்த பணத்தைத் தொடர்ந்து திரும்பப் பெறுவது சிக்கலானது என்று கூறினார்.
இந்திய பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் நம்பிக்கை மிகுந்தவையாகவும், ஒட்டுமொத்த பங்குச் சந்தையின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயல்பட்டு வந்தது.
ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட விளைவைத் தடுக்கும் வகையில் சந்தையில் இழந்த நம்பிக்கையைப் பெறும் விதமாக அதானி தனது நிறுவனத்தின் எஃப்.பி.ஓ-வை திரும்பப் பெற்றாலும், சந்தையில் அதானி நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கின்றன.
இதற்கு முக்கியக் காரணம், அந்த நிறுவனம் பெற்றுள்ள கடன்கள் தான். மொத்த கடனில், 25% பொதுத்துறை வங்கிகளிடம் இருந்தும், 37% பொதுத்துறை காப்பீடு நிறுவனம், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன் பத்திரங்களாக உள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையில் அதானி குழுமத்திற்கு இருக்கும் அதிக கடன்களைச் சுட்டிக்காட்டி அந்த நிறுவனத்தின் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், சந்தையில் அந்த நிறுவனத்தின் மீது எதிர்மறை தாக்கம் ஏற்படும்போது பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தது. அதே போலத்தான் இப்போது நடந்து வருகிறது," என்று தெரிவித்தார்.
அதானிக்கு எதிராக எழுந்த அரசியல் அழுத்தம்

பட மூலாதாரம், Getty Images
அண்மைக்கால நிகழ்வுகளையடுத்து, அமெரிக்க முதலீட்டு வங்கியான சிட்டி குழுமத்தின் சொத்துப் பிரிவும், கிரெடிட் சூசி நிறுவனமும் அதானி குழுமத்தின் கடன் பத்திரங்களை பிணையமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளது.
அதானி குழுமப் பங்குகளில் சமீபத்திய முன்னேற்றங்களின் தாக்கத்தை கண்காணித்து வருவதாக மதிப்பீடுகளை வழங்கும் மூடிஸ் நிறுவனத்தின் ஒரு பிரிவான இக்ரா தெரிவித்துள்ளது.
இன்ஃப்ராவிஷன் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலரான விநாயக் சாட்டர்ஜி, நம்பிக்கையுடன் இருப்பதாகவும், தற்போதைய நிலைமையை "குறுகிய கால பின்னடைவு" என்று குறிப்பிட்டார்.
"நான் ஒரு உள்கட்டமைப்பு நிபுணராக இந்த குழுவை கால் நூற்றாண்டு காலமாக கவனித்து வருகிறேன். துறைமுகங்கள், விமான நிலையங்கள், சிமெண்ட்டுகள் முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகள் வரை பல்வேறு செயல்பாட்டு திட்டங்களை நான் காண்கிறேன், அவை திடமானவை, நிலையானவை மற்றும் ஆரோக்கியமான பணப்புழக்கத்தை உருவாக்குகின்றன. பங்குச்சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களில் இருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளனர்," என்று விநாயக் பிபிசியிடம் தெரிவித்தார்.
சுயாதீன ஆய்வாளரான ஹேமேந்திர ஹசாரி, சந்தை கட்டுப்பாட்டாளரான செபி அல்லது அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்த பதிலும் வராமல் இருப்பது ஆச்சரியமளிப்பதாக குறிப்பிட்டார்.
அதானி குழும விவகாரம் தற்போது அரசியல் தளத்திலும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவராக கருதப்படும் அதானி, தனது அரசியல் உறவுகளால் ஆதாயம் அடைந்ததாக எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்படுகிறார்.
அதானி நிறுவனப் பங்குகளின் வீழ்ச்சியால் இந்திய முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை வலியுறுத்தின. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













