காணொளி: போர்க்களத்தின் மறைமுக முன்னணி: சைபர் வெளி
இரான் போர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது ஏவுகணைகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தான். ஆனால் நாம் பெரிதும் கேள்விப்படாத இன்னொரு போர்க்களம் இருக்கிறது. அதுதான் சைபர் வெளி.
பொதுவாக சைபர் நடவடிக்கைகள், முதல் ஏவுகணை வீசப்படுவதற்கு முன்பே தொடங்கிவிடும். ஹேக்கர்கள் பல மாதங்கள், ஏன் சில நேரங்களில் பல ஆண்டுகள் முயற்சி செய்து நெட்வொர்க்குகளுக்குள் நுழைவார்கள்.
அமெரிக்கா இரான் மீது "கடலடியிலிருந்து விண்வெளி வரை, மற்றும் சைபர் வெளியிலும்" தாக்குதல் நடத்துவதாக கூறும்போது, அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பின் (US Central Command) அட்மிரல் பிராட் கூப்பர், இதை மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
பெயர் வெளியிட விரும்பாத வட்டாரங்கள் ஃபைனான்சியல் டைம்ஸிடம் ஆயத்துல்லா அலி காமனெயி மற்றும் அவரது தளபதிகளின் நடமாட்டங்களை கண்காணிக்க, இஸ்ரேல் CCTV மற்றும் போக்குவரத்து கேமராக்களை ஹேக் செய்து ஒரு பிரம்மாண்டமான கண்காணிப்பு வலையமைப்பை உருவாக்கியது எனத் தெரிவித்தது. மேலும், இதன் மூலம் அவர் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு முன்னதாகவே அவர் "வாழ்க்கை முறை" தரவுகள் சேகரிக்கப்பட்டதாக தெரிவித்தன.
சைபர் கருவிகள் தனித்து செயல்படும்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது. மாறாக, அவை எதிரியின் திட்டத்தை குழைக்கவும், தகவல் தொடர்பை முடக்கவும், தரையில் நடைபெறும் இராணுவ தாக்குதல்களுக்கு துணை புரியவும் உதவும் ஒரு வலிமையான கருவியாக செயல்படுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இங்கேதான் ஒரு குழப்பம் இருக்கிறது. இரான் நீண்ட காலமாக ஒரு திறமையான சைபர் சக்தியாக கருதப்பட்டாலும், இதுவரை அதன் சைபர் வெளியிலான பதில் தாக்குதல் ஒப்பீட்டளவில் அமைதியாகவே இருக்கிறது.இது மாறலாம்.
கடந்த காலத்தில் இரான் பெரிய சைபர் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. நேரடியாக அரசிடமிருந்தோ அல்லது அதனுடன் தொடர்புடைய ஹேக்கர் குழுக்களிடமிருந்தோ பழிவாங்கும் நடவடிக்கை இதன் பிறகும் வரலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாம் இதுவரை காணாத சண்டைகளே நவீன போர்முறையில், மிக முக்கியமான சண்டைகளாக இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



