காணொளி: இரானுடன் இணக்கம் காட்ட இந்தியா தாமதித்து விட்டதா?
பிப்ரவரி 26-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி இஸ்ரேல் பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, இரான் மீது தாக்குதல் நடத்தின.
அந்த தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் உள்ள வளைகுடா நாடுகளை இரான் தாக்கியது. இந்த மோதல் இன்னும் தொடர்ந்து வருகிறது.
இஸ்ரேல்–அமெரிக்கா–இரான் இடையிலான போரின் முதல் இரண்டு நாட்களில் இந்தியா இரண்டு அறிக்கைகளை வெளியிட்டது. ஒன்றில் மோதல் குறித்து கவலை தெரிவித்தது; மற்றொன்றில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்கும்படி வலியுறுத்தியது. ஆனால், இரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலை இந்தியா வெளிப்படையாக கண்டிக்கவில்லை.
இரான் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி மரணமடைந்த ஐந்து நாட்கள் கழித்தே இந்தியா அதிகாரப்பூர்வமாக அவருக்கு அஞ்சலி செலுத்தியது. இந்திய அரசின் இந்த நிலைப்பாடு பரவலாக விமர்சிக்கப்பட்டது. இந்தியப் பெருங்கடலில் இரானின் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததை தொடர்ந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மீதும் விமர்சனம் எழுந்தது.
ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான போரில் சமநிலை அணுகுமுறையை கடைபிடிக்கும் இந்தியாவின் நிலைப்பாடு, கடந்த மூன்று, நான்கு நாட்களில் மாறியுள்ளதாக தெரிகிறது.
இதுவரை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் மூன்று முறை பேசி இருப்பதாக வியாழக்கிழமை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. பின் வியாழக்கிழமை இரவு மீண்டும் பேசியதாக வெள்ளிக்கிழமை ஜெய்சங்கர் கூறினார்.
அதே போல மார்ச் 12-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி, இரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன் உடன் தொலைபேசியில் பேசினார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய ரீதியான தீர்வை எட்டும்படி வலியுறுத்தியதாக பிரதமர் மோதி கூறினார்.
இந்த நிலையில், இந்தியா ஏன் திடீரென இரான் உடனான உறவில் நெருக்கம் காட்டுகிறது? இரான் பக்கம் நிற்க இந்தியா தாமதித்துவிட்டதா என்ற கேள்விகளும் எழுகின்றன.
எதிர்க்கட்சிகளும் பல முக்கிய வெளியுறவு கொள்கை நிபுணர்களும் இரான் குறித்து இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டை விமர்சித்துள்ளனர். ஆனால் கேள்வி என்னவென்றால், இந்தப் போரில் இஸ்ரேல், அமெரிக்கா அல்லது இரான் ஆகியவற்றில் எதன் பக்கமும் இந்தியா எளிதாக நிற்க முடியுமா என்பதே,
இந்த கேள்விக்கு பதிலளித்த இந்தியாஸ் வேர்லட் இதழின் ஆசிரியரும், ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் கௌரவ பேராசிரியருமான ஹேப்பிமோன் ஜேக்கப், "இரான் தொடர்பான இந்தப் போரில் இந்தியா எந்த ஒரு தரப்பையும் முழுமையாக ஆதரிக்க முடியாது என்பது ஆரம்பத்திலேயே தெளிவாக இருந்தது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பக்கம் இந்தியா நின்றால், இரான் நாட்டில் உள்ள தற்போதைய ஆட்சியுடன் இந்தியாவின் உறவு கடுமையாக பாதிக்கப்படும். மறுபுறம், இரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இந்தியா கண்டித்தால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உடனான உறவு பாதிக்கப்படும். முக்கியமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை இந்தியா இந்த நாடுகளிடமிருந்தே பெறுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்." என்றார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல்களுக்குப் பதிலடியாக இரான் வளைகுடா நாடுகளில் நடத்திய தாக்குதல்கள், அங்கு வாழும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கவலையையும் அதிகரித்துள்ளன. வளைகுடா பிராந்தியத்தில் சுமார் 1 கோடி இந்தியர்கள் வாழ்கின்றனர். அங்கிருந்து இந்தியர்கள் வெளியேறத் தொடங்கினால், அது மோதி அரசுக்கு பெரிய கவலையாக மாறலாம்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களே மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்றனர். 2024-25 ஆம் ஆண்டில் மட்டும் இந்தப் பிராந்தியத்திலிருந்து இந்தியாவுக்கு 135 பில்லியன் அமெரிக்க டாலர் வரவு வந்துள்ளது.
எனவே இந்தியாவுக்கு வளைகுடா பிராந்தியம் என்பது வெறும் எண்ணெய் இறக்குமதி தொடர்பான விஷயம் மட்டுமல்ல. வேலைவாய்ப்பு, குடும்ப வருமானம் மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு நிதி நிலைத்தன்மையுடன் தொடர்புடையது. அதனால் தான் இரான் தொடர்பான விஷயத்தில் இந்தியா தற்போது முனைப்பு காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிபிசியிடம் பேசிய சர்வதேச விவகாரங்களுக்கான மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா சர்மா, "சிறிது தாமதமாக இருந்தாலும், பிரதமர் மோதி இரான் அதிபர் மசூத் பெசேஷ்கியன் உடன் பேசியுள்ளார். இது சரியான நடவடிக்கை." எனக் கூறினார்.
ஹோர்மூஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் விளக்கிய அவர், "கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் அதன் விலை தொடர்பாக இந்தியா மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் எல்பிஜி விநியோகம் குறித்தும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. அதோடு, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுக் கொள்கை வல்லுநர்கள் அரசின் நிலைப்பாட்டை கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் இரானுடன் நெருக்கத்தை அதிகரிக்குமாறு இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. தற்போது இரான் நாட்டில் சுமார் 9,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நெருக்கடியும் இந்தியாவுக்கு உள்ளது." என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியா மற்றும் இரான் இடையே அண்மையில் நடந்த பேச்சுவார்த்தைகளில் காமனெயி கொல்லப்பட்ட விவகாரம் இதுவரை விவாதிக்கப்படவில்லை. இருப்பினும், இரு நாடுகளுக்கிடையே உரையாடல்கள் நடைபெற்றுள்ளன. அதுவே திருப்திகரமான விஷயம்" என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



