காணொளி: இரானின் 'எண்ணெய்த் தீவை' அமெரிக்கா கைப்பற்றுமா? - கார்க் தீவின் முக்கியத்துவம்

காணொளிக் குறிப்பு, "இரானில் எல்லா ராணுவ இலக்கையும் அழித்துவிட்டோம்" - டிரம்ப்
காணொளி: இரானின் 'எண்ணெய்த் தீவை' அமெரிக்கா கைப்பற்றுமா? - கார்க் தீவின் முக்கியத்துவம்

மத்திய கிழக்கின் வரலாற்றிலேயே மிக சக்தி வாய்ந்த வான்வழி தாக்குதல்களில் ஒன்றை இரானின் கார்க் தீவில் அமெரிக்கா நடத்தி இருப்பதாக டிரம்ப் கூறி உள்ளார். கார்க் தீவில் நடத்தப்பட்ட தாக்குதல் என ஒரு காணொளியையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார். என்ன நடந்தது? இந்தத் தீவு இரானுக்கு ஏன் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது? இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.

இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், அமெரிக்க மத்திய கட்டளை, மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்திவாய்ந்த குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஒன்றை நடத்தியது. இரானின் கார்க் தீவில் அமைந்திருந்த அனைத்து ராணுவ இலக்குகளையும் அது முற்றிலுமாக அழித்தது'' என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அந்தப் பதிவில் கண்ணியம் கருதி, அத்தீவில் அமைந்துள்ள எண்ணெய் உட்கட்டமைப்புகளை அழிக்காமல் விட்டுவிட முடிவெடுத்துள்ளதாகவும், ஆனால், ஹோர்முஸ் நீரிணை வழியே கப்பல்கள் தடையின்றி செல்ல, இரானோ அல்லது வேறு எவரேனும் இடையூறு விளைவிக்க முற்பட்டால் இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கார்க் தீவு மீதான தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்கா இந்தத் தீவைக் கைப்பற்றக்கூடும் என்ற ஊகங்கள் வலுவடைந்துள்ளன.

கார்க் தீவை ஆக்கிரமிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக மார்ச் 7-ஆம் தேதி அமெரிக்க அரசு அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் ஊடகம் தெரிவித்தது.

பென்டகனின் முன்னாள் மூத்த ஆலோசகர் மைக்கேல் ரூபின் கடந்த வாரம் பொலிட்டிகோ ஊடகத்திடம் பேசுகையில், கார்க் தீவின் முக்கியத்துவம் மற்றும் அதை ஆக்கிரமிக்கும் விஷயம் குறித்து டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் பேசியதாக தெரிவித்தார்.

ஏவுகணைத் தாக்குதல் மற்றும் குண்டுவீச்சை தாண்டி இரான் மீதான அழுத்தத்தை டிரம்ப் அதிகரிக்க விரும்பினால், கார்க் தீவைக் கைப்பற்றுவது இரானிய ஆட்சியின் மிக முக்கியமான நிதி ஆதாரத்தைப் பறிக்கும் என மைக்கேல் ரூபின் நம்புகிறார்.

கார்க் தீவு ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?

கார்க் தீவு சுமார் 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்டது. இது இரானின் தென்மேற்கில் அமைந்துள்ளது.

இத்தீவு மான்களின் வாழ்விடத்திற்கும் இனப்பெருக்கத்திற்கும் சாதகமான இடமாகக் கருதப்படுகிறது. மிகச் சிறிய அளவிலான தீவாக இருந்தாலும், இரானுக்கு கார்க் மிக முக்கியமானது, குறிப்பாக எண்ணெய் ஏற்றுமதியில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இரானின் முதன்மையான எண்ணெய் ஏற்றுமதி முனையமாக கார்க் திகழ்கிறது. இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் இந்த சிறிய தீவிலிருந்தே வருகிறது.

நாட்டின் தெற்கே உள்ள எண்ணெய் வளமிக்க பகுதிகளுக்கு மிக அருகே இருப்பது, சாதகமான கடல் சூழல் மற்றும் பெரிய எண்ணெய் டாங்கர்கள் வந்து செல்லத் தேவையான ஆழம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு மிக பொருத்தமான இடமாக கார்க் கருதப்படுகிறது.

கார்க் தீவை இரானின் எண்ணெய் வயல்களின் மையப்புள்ளியாகக் கருதலாம். கச்சா எண்ணெயைச் சேமிப்பதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் இது முக்கியமான தளம் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

கார்க் தீவிற்கு மேற்கே சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் இரானின் மிகப்பெரிய கடல்சார் எண்ணெய் வயலான அபுசார் அமைந்துள்ளது. இது பாரசீக வளைகுடாவில் இரானின் பெரும்பாலான எண்ணெய் உற்பத்திக்கான ஆதாரமாகும்.

அபுசார் எண்ணெய் வயலில் மூன்று முக்கிய உற்பத்தித் தளங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நாளொன்றுக்கு 80,000 பீப்பாய்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. அபுசார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் கார்க் தீவில் அமைந்துள்ளது.

இதன் காரணமாக, இரானின் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு மையங்களில் ஒன்று கார்க் தீவில் அமைந்துள்ளது.

இரான் ஆயில் டெர்மினல்ஸ் நிறுவனத்தின்படி, கார்க்கில் மொத்தம் 20 மில்லியன் பீப்பாய்களுக்கும் அதிகமான கொள்ளளவு கொண்ட 40-க்கும் மேற்பட்ட கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் உள்ளன.

கார்க் பெட்ரோகெமிக்கல் நிறுவனமும் இந்தத் தீவில் இயங்கி வருகிறது. எண்ணெய் உற்பத்தியின்போது வெளியாகும் வாயுக்களை பயனுள்ள தயாரிப்புகளாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகள் மெத்தனால், சல்ஃபர், புரோபேன், பியூட்டேன் மற்றும் நாப்தா ஆகும்.

8,000-க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தத் தீவில், இஸ்லாமிய ஆசாத் பல்கலைக்கழகத்தின் கடல்சார் அறிவியல் மற்றும் கலைப் பிரிவும் அமைந்துள்ளது. அங்கு கற்பிக்கப்படும் முக்கியமான பாடங்களில் பெட்ரோலியம் மற்றும் கடல்சார் படிப்புகள் அடங்கும்.

இரான் - இராக் போரின் போது, இரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை கார்க் தீவு வழியாகவே நடைபெற்றன. இதன் விளைவாக, இராக் இந்தச் சிறிய தீவின் மீது சுமார் 2,800 முறை தாக்குதல் நடத்தியது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு