இலங்கை வெள்ளத்தில் சிக்கியவர்களின் பசியை போக்கும் பெண் - பேரிடருக்கு நடுவே ஒரு நெகிழ்ச்சி கதை
வரலாறு காணாத இயற்கை பேரழிவை சந்தித்திருக்கும் இலங்கை, இன்னும் அதன் பாதிப்பிலிருந்து மீளவில்லை.
இந்த இடர்பாடில் பலநூறு உயிர்கள் பலியாகியுள்ளன. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், பல மனிதநேய உள்ளங்களை பார்க்க முடிகிறது. அவர்களில் ஒருவர்தான் நநீகா.
மழை படிப்படியாக அதிகரித்து, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்ட நேரத்தில் இந்த அடுப்பு பற்றவைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அணையாமல், பலரின் பசியையும் இது போக்கி வருகிறது.
கண்டி நகரிலிருந்து கலஹா நகருக்கு செல்லும் பிரதான வீதியின் வெலிகல பிரதேசத்தில் நாம் அவரை சந்தித்தோம்.
வாகன போக்குவரத்து இல்லாமை காரணமாக சிலர் மழையில் நனைந்துக்கொண்டு, கண்டியிலிருந்து கலஹா நோக்கி இரவு வேளையில் சென்றுள்ளனர்.
இதனை நநீகா, சுதன் உள்ளிட்ட சிலர் அவதானித்துள்ளனர். குளிரிலும் மழையிலும் நடந்து செல்லும் அவர்களுக்கு உதவ முதலில் இலவசமாக தேநீர் வழங்க தொடங்கினர்.
வெலிகல பகுதியிலுள்ள மல்லிகா என்ற பெண், தனது கட்டிடத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளார்.
தேநீர் ஊற்றி மக்களின் குளிரையும், தாக்கத்தை போக்குவதற்கு எண்ணிய இவர்களில் இந்த எண்ணம், பின்னர் மக்களின் பசியை ஆற்றும் அளவிற்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
கடும் பசியில் இருந்த சிலருக்கு தங்கள் வீடுகளில் இருந்த உணவுகளை அவர்கள் வழங்கியுள்ளனர்.
தாங்கள் செய்யும் உதவியைப் பார்த்து பலரும் சமையலுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி உதவுவதாக கூறும் நநீகா, இன்னும் எத்தனை நாட்களுக்கு உணவு சமைத்து வழங்க முடியும் என்று தெரியவில்லை, ஆனால் முடிந்த அளவு உதவுவோம் என்கிறார்.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



