கனகசபையில் பக்தர்களுக்கு அனுமதி மறுத்து திடீரென முளைத்த 'பதாகை' - சிதம்பரம் கோவிலில் இதுவரை நடந்தது என்ன?

- எழுதியவர், மாயகிருஷ்ணன்.க.
- பதவி, பிபிசி தமிழுக்காக
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா நிறைவுப் பெற்றதை தொடர்ந்து வழக்கம் போல பக்தர்கள் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரத்தில் என்ன நடந்தது இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சில தினங்களுக்கு முன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை எனக் கூறப்படும் சிற்றம்பல மேடையின் மீது ஏறி 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்யக்கூடாது என தீட்சிதர்கள் சார்பில் வைக்கபட்ட பதாகை சர்ச்சையை ஏற்படுத்தியது. பக்தர்கள் புகாரால் பதாகையை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தீட்சிதர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் புகழ்பெற்ற ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டம் நடந்து முடிந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் திருத்தேர் விழாவையொட்டி, கனகசபையில் பொதுமக்கள் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் வழிபடத் தடை விதித்துள்ளதாகக் கோவில் தீட்சிதர்கள் கனகசபை வாயிலில் அதற்கான பதாகையை வைத்தனர். இதனால் திருவிழா முடியும் வரை, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் சார்பில் வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகைக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசாணை மீறல்
கடந்த ஆண்டு சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறி வழிபட பெண் ஒருவர் சென்ற நிலையில், அதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் சர்ச்சையாகி தீட்சிதர்களின் செயலுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது.
எனவே, 4 நாட்களுக்கு கனகசபையில் வழிபட பொதுமக்களுக்கு தடை விதித்து தீட்சிதர்கள் பதாகைகள் வைத்தது தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரானது என்பதால், இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், காவல்துறையினர் பதாகையை அகற்ற வந்தனர்.
சிதம்பரம் தில்லைக்காளி கோயில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் சிதம்பரம் தாசில்தார் செல்வகுமாருடன் கோயிலுக்குள் சென்றனர். கோயிலுக்குள் கனகசபை அருகே சென்ற செயல் அலுவலர் சரண்யா, `பக்தர்கள் கனகசபை மேல் ஏறக்கூடாது` என்று இருந்த பதாகையை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பதாகையை ஏன் அகற்றுகிறீர்கள் என்று கூறி அவர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

பதிலுக்கு செயல் அலுவலர் சரண்யா மற்றும் அலுவலர்கள் அரசாணையை மீறி கனகசபை மீது ஏறக்கூடாது என பதாகை வைக்கக் கூடாது. இதை உடனடியாக அகற்றுங்கள் என கூறினார். ஆனால் தீட்சிதர்கள் பதாகையை அகற்றாமல் போலீசார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் பதாகையை அகற்றாமல் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் திரும்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறையின் சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, “சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி எல்லோரும் சாமி தரிசனம் செய்யலாம் என்பதுதான் அரசாணை. அந்த அரசாணை நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்பதை தினமும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
ஆனால் அதற்கு மாறாக தீட்சிதர்கள் இப்போது கனகசபை மேல் ஏறக்கூடாது என பதாகை வைத்துள்ளனர். அதனால் அந்த பதாகையை அகற்றச் சென்றேன். ஆனால் அகற்ற விடாமல் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இந்து சமய அறநிலையத்த துறையின் இணை ஆணையர் அனுமதி பெற்றுதான் பதாகை வைத்திருக்கிறோம் என தவறான தகவலை தீட்சிதர்கள் கூறினர். பதாகையை அகற்ற தீட்சிதர்கள் மறுத்து விட்டனர். நடந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன்” என்றார்.

பக்தர்கள் பாதுகாப்பு கருதியே போர்டு வைக்கப்பட்டது- தீட்சிதர்கள்
நடந்த சம்பவங்கள் குறித்து சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர் கூறுகையில், “இன்று முதல் கோயிலில் பூஜைகள் நிறைய இருப்பதால் 4 நாட்களுக்கு பக்தர்கள் கனகசபை மீது ஏறுவதற்கு அனுமதி இல்லை. தில்லை காளியம்மன் கோயில் செயல் அலுவலர் அந்த போர்டை எடுக்க சொன்னார்.
ஆனால் நாங்கள் கடலூரில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் அனுமதி பெற்றுதான் வைத்திருக்கிறோம் என்று கூறினேன். தீட்சிதர்களின் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துதான் போர்டு வைத்திருக்கிறோம். திரும்பவும் போர்டை எடுக்க வேண்டும் என்றால் தீட்சிதர்களின் பொதுக்குழு கூட்டத்தில் தான் முடிவு செய்ய வேண்டும் என்று செயல் அலுவலரிடம் கூறினேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “புதன்கிழமை முதல் பக்தர்கள் தொடர்ந்து கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம். செயல் அலுவலர், தாசில்தார் ஆகியோர் ஒன்று சேர்ந்து போர்டை அகற்றுமாறு கூறினார்கள். எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் எடுக்கிறோம் என கூறினோம். போர்டில் எழுதி இருந்ததை அழித்தனர். காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பாக வந்தார்கள். செயல் அலுவலர் மீது நாங்கள் புகார் கொடுக்க இருக்கிறோம்.
பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருதியே போர்டு வைக்கப்பட்டது. எங்களின் பணிகளை செய்யவிடாமல் அதிகாரிகள் தொந்தரவு செய்து வருகின்றனர். பக்தர்களின் நலன் கருதி அபிஷேகத்தின்போது ஆயிரங்கால் மண்டபத்தின் படிக்கட்டுகளில் அமரக்கூடாது எனவும் போர்டு வைக்க உள்ளோம். அதற்காக தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயிலின் தரிசனத்தை விரைவாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். பூஜைகள் அதிகம் இருப்பதால் சில நேரங்களில் தாமதமாவது தவிர்க்க முடியாது” என்றார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம் தொடர்பாக இணை ஆணையர் பரணிதரனை பிபிசி சார்பில் தொடர்புகொண்டு கேட்டபோது, “கனக சபை மீது பக்தர்கள் அனைவரும் நின்று தரிசனம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதை செயல்படுத்துவதற்காக என்னைப் போன்ற அதிகாரிகள் நியமனம் செய்து கண்காணித்து வரப்படுகிறது. இந்த நிலையில் தீட்சிதர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது வருத்தம் அளிக்கிறது. இது தொடர்பாக சார் ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நல்ல முடிவு வரும். இறைவனுக்கு முன் அனைவரும் சமம் என்பதற்காகவே தமிழ்நாடு அரசு இந்த ஆணை பிறப்பித்தது” என்று கூறினார்.

பட மூலாதாரம், Social Media
பக்தர் மீது தாக்குதல்- வழக்குப் பதிவு
கனகசபை சர்ச்சை ஒருபுறம் இருக்க, பக்தர் மீது தீட்சிதர் தாக்குதல் நடத்தியதாகவும் வீடியோ வெளியாகி சர்ச்சையாகியது. சில நாட்களுக்கு முன்பு சிவபுரி கிராமத்தைச் சேர்ந்த கார்வண்ணன் என்பவர் சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, கோயிலின் உள்ள பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. கார்வண்ணன் எதிரில் நின்றதாகவும் அவரை தள்ளி நிற்கும்படி தீட்சிதர்கள் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, தீட்சிதர் ஒருவர் கார்வண்ணனை கன்னத்தில் அறையும் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் சார்பில் பிபிசியிடம் பேசிய ஐயப்ப தீட்சிதர், “ சாமி புறப்படு பத்து நாட்களுக்கு 2 வேளையும் நடைபெறும். சாமியை தோளில் தூக்கிக்கொண்டு வருவார்கள். அந்த வாகனம் மிகவும் கனமாக இருக்கும். அப்படியிருக்கும்போது, நீங்கள் குறிப்பிடும் நபர் குறுக்கே நின்றுள்ளார். அவரை தள்ளி நிற்கும்படி கூறியுள்ளார்கள். அவர் கேட்கவில்லை. எனவே, அவரை தீட்சிதர்கள் நகர்த்திதான் விட்டார்கள். இதைதான் அடித்துவிட்டதாக அவதூறு பரப்புகின்றனர். ” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக கார்வண்ணன் அளித்த புகாரின் பேரில் சிதம்பர நகர போலீசார் கனகசபாபதி, ஸ்ரீ வர்ஷன் தீட்சிதர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சரின் பதில் என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியிருந்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தெய்வம் எப்படி பக்தர்களுக்கு தீங்கு விளைவிக்காதோ அதேபோல் அர்ச்சகர்கள் என்று கூறப்படும் சிதம்பரம் கோயில் தீட்சிதர்களும் தீங்கு விளைவிக்க கூடாது. ஆனால், எவையெல்லாம் சட்டவிரோதமோ அதை ஒருசில தீட்சிதர்கள் கையில் எடுத்துகொள்கிறார்கள்," என்றார்.
மேலும் பேசிய அவர், "நகை சரிபார்ப்புப் பணிக்குச் சென்றபோது அதிகாரிகளுக்கு உரிமையில்லை, நாங்கள் நீதிமன்றத்தை நாடப்போவதாக சொன்னார்கள். இதேபோல் பல பிரச்னைகளுக்கு நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக சொன்னார்கள். நாங்களும் அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள் என்று எதிர்பார்த்துகொண்டு இருக்கிறோம். ஆனால், இதுவரை அவர்கள் செல்லவில்லை. சிதம்பரம் கோவிலைப் பொறுத்தவரை பக்தர்களின் நலனுக்காக எடுக்க வேண்டிய நடவடிக்கையில் இருந்து எந்நாளும் பின் வாங்கபோவதில்லை,” என்றார்.
கோவிலுக்குள் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினர்
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27ஆம் தேதி) மாலை 5 மணிக்கு காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதா தலைமையில் கட்சி உறுப்பினர்கள் கனகசபை படியில் அமர்ந்து தீட்சிதர்களுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரபரப்பான இந்தச் சூழலில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஒரு வழியாக கனகசபை மீது அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் சென்று தரிசனம் செய்தனர் என்ற போதிலும் இரு தரப்பிற்கும் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராதா பிபிசி தமிழிடம் பேசினார்.
கடந்த வருடமே தாங்கள் கனக சபையின் மீது நின்று சாமி தரிசனத்திற்காக தீட்சிதரிடம் கேட்டபோது அவர்கள் மறுத்து விட்டார்கள் என்கிறார் அவர்.
“ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பில் இந்தக் கோவில் பொதுவானது, மக்களுக்கானது எனத் தெளிவாகக் கூறியுள்ளனர். இது தீட்சிதர்களுக்குச் சொந்தமானது அல்ல ஆனால் அவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த கோவிலை நிர்வகித்து வரலாம். ஆனால் இந்த கோவிலில் தவறுகள் நடைபெற்றாலோ அல்லது மக்களிடமிருந்து ஏதேனும் புகார்கள் வந்தால் அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை தீட்சிதர்களுக்கு அறிவுரை வழங்கலாம் அல்லது நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது,” என்றார்.
மேலும் பேசிய அவர், “இந்நிலையில தீட்சிதர்கள் முன்னறிவிப்பு இல்லாமல் அறிவிப்பு பலகை வைத்தனர். இதனால் தேவையற்ற சம்பவங்கள் கோவிலுக்குள் நடைபெற்றது. நாங்களும் போராட்டத்தில் ஈடுபட்டோம். இப்பொது ஒரு வழியாக பக்தர்கள் கனக சபையில் நின்று சந்தோஷத்துடன் சுவாமியை தரிசித்தோம்,” என்றார்.
மேலும் தாம் கோவில் வழிபாட்டு முறையில் தலையிடுவதில்லை எனவும், தீட்சிதர்கள் பக்தர்களுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
கனகசபையில் தேவாரம் திருவாசகம் பாடிய தெய்வத்தமிழ்ப் பேரவையினர்

இந்நிலையில் தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பைச் சேர்ந்த சிவனடியார்கள் ஜூன் 28ஆம் தேதி காலை கனகசபை மேடையில் தேவாரம், திருவாசம் ஓதி வழிபடுவதாக அறிவித்திருந்தனர்.
இதன் காரணமாக கோவிலில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, சிவனடியார்கள் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக நகர ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதன்படி புதன்கிழமை, ஜூன் 28, காலை 10.00 மணிக்கு சிதம்பரம் கீழ் சன்னதி வழியாக தேவார, திருவாசகப் பதிகங்கள் ஓதி சிவ வாத்தியங்களுடன் தெய்வத்தமிழ்ப் பேரவையைச் சேர்ந்த இருபதிற்கும் மேற்பட்டவர்கள் கோவிலுக்கு சென்றனர். பின்னர் காவல்துறை பாதுகாப்போடு கனக சபை மேடையில் நின்று தேவாரம் திருவாசகம் பாடினர்.
அப்போது அங்கிருந்த தீட்சிதர்கள் தரிசனம் மட்டுமே செய்ய வேண்டும் இங்கு பாடக்கூடாது வேண்டுமானால் மனதிற்குள்ளேயே பாடுங்கள் என சிவனடியார்களை தடுத்தனர். ஆனால், சிவனடியார்கள் தேவர திருவாசக பதிகங்கள் பாடியபடியே வழிபட்டனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்துப் பேசிய தெய்வத்தமிழ்ப் பேரவை சிதம்பரம் நகர பொருப்பாளர் ஆ. குபேரன், தீட்சிதர்கள் தொடர்ந்து சிவ பக்தர்களைத் தாக்குவதும், தகாத வார்த்தைகளால் ஏசுவதும் நடக்கிறது என்றார். அத்தகைய வழக்கு தொடரப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். “ சிதம்பரம் நடராசர் கோயிலை தமிழக அரசே ஏற்று நடத்த தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்,” என்றார்.
அறநிலைத்துறையினர் மீது தீட்சிதர்கள் குற்றச்சாட்டு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வழிபாட்டு முறைகளுக்கு இடையூறு செய்யும் வகையில் காவல்துறையினர் மூலம் இந்து சமய அறநிலையத் துறையினர் அச்சுறுத்துவதாக பொது தீட்ச்சிதர்கள் குழு செயலர் சிவராம் தீட்சிதர் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சனம் உற்சவம் நடைபெறும் சமயத்தில் பூஜை வழிபாடுகளுக்கும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கும் இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் கோயில் எதிர்பாளர்களின் தூண்டுதல் காரணமாக இந்து சமய அறநிலைத்துறையினரும் அவர்களுக்கு உதவியாக காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளும் கோவிலுக்குள் வந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டு வருகின்றனர், என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“வழிபாடு நடைபெறும் கோவிலில் தொடர்ந்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் காவல்துறையினர் கொண்டு அச்சுறுத்துவது சட்டவிரோத நடவடிக்கையாகும். இதனால் கோவிலில் ஏற்படும் எவ்வித அசம்பாவித நிகழ்வுக்கும் காவல்துறையும் இந்து சமய அறநிலைத்துறையும் அதிகாரிகளுமே பொறுப்பு. தீட்சிதர்கள் அனைவரும் அமைதியாக பூஜை வழிபாட்டு முறைகளை மட்டுமே செய்து வருகின்றோம். நடராஜர் கோவிலில் கடந்த 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் விரும்பத் தகாத செயல்களால் மிகவும் மன வேதனையில் உள்ளோம். தற்போது எங்களது நிலை பாதுகாப்பற்றதாக உள்ளது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
‘சிதம்பரம் கோவிலை அறநிலையத்துறை கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்’

இந்நிலையில், சென்னையில் நேற்று (ஜூன் 27) மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், சிதம்பரம் கோவிலைப் பொறுத்தவரையில் தீட்சிதர்கள் அக்கோவிலில் ஒரு அதிகார மையத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
பக்தர்கள் அனைவரும் சிதம்பரம் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை தான் நிர்வாகிக்க வேண்டும் என விரும்புவதாகத் தெரிவித்த அவர், “அதன் அடிப்படையில் ஆவணங்களைத் திரட்டி அதற்கான பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகிறது,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












